மழை வந்தா கார் கண்ணாடில உள்ள வைப்பர் எப்டி தானாகவே ஒர்க் ஆகுது தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!
கார் கண்ணாடியில் உள்ள வைப்பர், மழை வந்தால் எப்படி தானாகவே இயங்குகிறது? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஒவ்வொரு நாளும் தொழில்நுட்பம் மேம்பட்டு கொண்டே செல்கிறது. தற்போது ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் டிவி என தொழில்நுட்பம் உச்சத்திற்கு சென்று விட்டது. ஸ்மார்ட் வீடுகள் கூட தற்போது வந்து விட்டன. அனைத்து துறைகளிலும் தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டே வரும் நிலையில், ஆட்டோமொபைல் துறையும் அதற்கு விதிவிலக்கு அல்ல.

கார்களிலும் தற்போது பல்வேறு புதிய தொழில்நுட்ப வசதிகள் தொடர்ச்சியாக அறிமுகமாகி கொண்டே இருக்கின்றன. இதற்கு ரெயின் சென்சிங் வைப்பர்கள் (Rain-Sensing Wipers) ஒரு உதாரணம். பெயரிலேயே இதற்கான அர்த்தத்தை நாம் புரிந்து கொள்ளலாம். ஆம், மழை வந்தால் இந்த வைப்பர்கள் தானாகவே இயங்கும்.

காரின் முன் பக்க கண்ணாடியில் (விண்ட்ஷீல்டு) மழை நீர் இருந்தால், அதனை இந்த சிஸ்டம் தானாகவே உணர்ந்து கொண்டு, வைப்பர்களை இயங்க வைக்கும். ஆரம்பத்தில் விலை உயர்ந்த சொகுசு கார்களில் மட்டுமே மழை வந்தால் தானாகவே இயங்க கூடிய வைப்பர்கள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது இந்த தொழில்நுட்பம் வேகமாக பிரபலமடைந்து வருகிறது.

எனவே சொகுசு கார்கள் மட்டுமல்லாது, நடுத்தர விலையில் விற்பனையாகும் கார்களிலும் தற்போது மழை வந்தால் தானாகவே இயங்க கூடிய வைப்பர்கள் வழங்கப்படுகின்றன. எதிர்காலத்தில் சாதாரண பட்ஜெட் கார்களிலும் கூட, மழை வந்தால் தானாகவே இயங்கும் வைப்பர்கள் வழங்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை.

மழை வந்தால் வைப்பர்கள் எப்படி தானாகவே இயங்குகிறது? என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. இதற்கு காரணம் சென்சார்தான். சென்சார் உதவியுடன்தான் முன் பக்க கண்ணாடியில் மழை நீர் இருப்பதை உணர்ந்து கொண்டு, வைப்பர்கள் தானாகவே இயங்குகிறது. காரின் முன் பக்க கண்ணாடிக்கு உள்ளே இந்த சென்சார் பொருத்தப்பட்டிருக்கும்.

காரின் கேபினுக்கு உள்ளே இருக்கும் ரியர் வியூ மிரருக்கு அருகில், இந்த சென்சார் பொருத்தப்பட்டிருக்கும். முன் பக்க கண்ணாடியின் மீது இந்த சென்சார் 45 டிகிரி கோணத்தில் அகச்சிவப்பு ஒளியை பாய்ச்சும். எவ்வளவு ஒளி திரும்ப பிரதிபலிக்கிறது? என்பதை அடிப்படையாக கொண்டுதான், இந்த செயல்பாடுகள் நடக்கிறது.

ஒளி வெவ்வோறு கோணங்களில் எதிரொலிப்பதை பொறுத்து, காரின் முன் பக்க கண்ணாடியில் ஈரப்பதம் உள்ளதா? அதாவது மழை நீர் இருக்கிறதா? என்பதை இந்த சென்சார் கண்டறியும். இதன்பின் வைப்பர்களை ஆட்டோமேட்டிக்காக இயங்க செய்யும். இன்னும் தெளிவாக சொல்வதென்றால், எவ்வளவு ஒளி சென்சாருக்கு திரும்ப வருகிறது? என்பதை பொறுத்து, வைப்பர்கள் இயங்கும்.

அதாவது காரின் முன் பக்க கண்ணாடி தெளிவாக இருந்தால், அதில் இருந்து ஒளி பிரதிபலித்து, மீண்டும் சென்சாரையே வந்தடைந்து விடும். ஆனால் முன் பக்க கண்ணாடியில் மழை நீர் துளிகள் இருந்தால், அகச்சிவப்பு ஒளி பிரதிபலிப்பதற்கு பதிலாக அவற்றின் வழியாக சென்று விடும். எனவே சென்சாருக்கு திரும்ப வரும் ஒளியின் அளவு மிகவும் குறைவாக இருக்கும்.

அதாவது முன் பக்க கண்ணாடியில் அதிக தண்ணீர் இருந்தால், குறைவான ஒளியே பிரதிபலித்து, சென்சாருக்கு திரும்ப வரும். இப்படி நடக்கும்பட்சத்தில், வைப்பர் தானாகவே இயங்க தொடங்கி விடும். மழை வந்தால் காரின் முன் பக்க கண்ணாடியில் பொருத்தப்பட்டிருக்கும் வைப்பர்கள் எப்படி தானாகவே இயங்குகிறது? என்பது தற்போது உங்களுக்கு தெளிவாக புரிந்திருக்கும் என நம்புகிறோம்.

ஒரு சிலர் இந்த தொழில்நுட்பத்தை விமர்சனம் செய்கின்றனர். மழை வந்தால் ஓட்டுனருக்கு தெரியாதா? ஏன் தேவையில்லாமல் இந்த தொழில்நுட்பம்? இதன் காரணமாக காரின் விலை கணிசமாக அதிகரித்து விடுகிறதே? என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் உண்மையில் இந்த தொழில்நுட்பம் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது.

ஏனெனில் இது ஓட்டுனரின் கவன சிதறலை குறைத்து, பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துகிறது. உலகில் நடைபெறும் பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு ஓட்டுனர்களின் கவன சிதறல் மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. ஆனால் கவன சிதறல் காரணமாக சாலை விபத்து நடைபெறுவதற்கான வாய்ப்புகளை இந்த தொழில்நுட்பம் குறைக்கிறது.


Click it and Unblock the Notifications








