ஐரோப்பா மாதிரி இந்தியா கிடையாது... மாருதி சுஸுகி தலைவர் சொல்வதை மத்திய அரசு கேட்குமா?
எலக்ட்ரிக் வாகனங்களை ஊக்கப்படுத்துவதில் நம் மத்திய அரசும் சரி, மாநில அரசுகளும் சரி தீவிரமாக உள்ளன. சமீப காலமாக, எரிபொருள் மற்றும் எலக்ட்ரிக் என இரண்டிலும் இயங்கக்கூடிய ஹைப்ரீட் வாகனங்களுக்கும் அதிகமாக ஆதரவு பெருகி வருகிறது. உத்திர பிரதேச மாநில அரசு இன்னும் ஒருபடி மேலே சென்று, ஸ்ட்ராங் ஹைப்ரீட் வாகனங்களுக்கு தங்களது மாநிலத்தில் சாலை வரி முற்றிலுமாக தள்ளுபடி செய்ய உள்ளதாக சமீபத்தில் அறிவித்து கவனத்தை ஈர்த்தது. உ.பி மாநில அரசின் இந்த அறிவிப்புக்கு ஆட்டோமொபைல் துறையை சேர்ந்த பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகியின் தலைவர் ஆர்சி பார்கவா தனது கருத்தை பகிர்ந்துக் கொண்டுள்ளார். அவர் கூறியதாவது, எலக்ட்ரிக் வாகனங்களை காட்டிலும் ஹைப்ரீட் வாகனங்களில் இருந்து கார்பன் மாசு உமிழ்வுகள் குறைவாக வெளியிடப்படுவதாக ஒரு பரபரப்பான கருத்தை முன் வைத்துள்ளார்.

எலக்ட்ரிக் வாகனங்களை மத்திய அரசாங்கம் ஊக்கப்படுத்துவதற்கு முக்கிய காரணமே, அவற்றில் இருந்து கார்பன் மாசு உமிழ்வு ஆனது முற்றிலுமாக இருக்காது என்பதாகும். ஏனெனில், எலக்ட்ரிக் வாகனங்களில் எரிபொருள் என்ஜின் கிடையாது. ஹைப்ரீட் வாகனங்களை சில நேரங்களில் பெட்ரோலில் இயக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால், எப்படியிருந்தாலும் ஹைப்ரீட் வாகனங்களை காட்டிலும் எலக்ட்ரிக் வாகனங்கள் தான் கார்பன் மாசு உமிழ்வை மிகவும் குறைவாக வெளிப்படுத்தக் கூடியவைகளாக இருக்கும் என நினைத்து வருகிறோம்.
இப்படிப்பட்ட சூழலில், மாருதி சுஸுகி போன்ற மாதத்திற்கு இலட்சக்கணக்கில் கார்களை உற்பத்தி & விற்பனை செய்யும் நிறுவனத்தின் தலைவரிடம் இருந்து இவ்வாறான ஒரு கருத்து வந்திருப்பது சற்று ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து மேலும் பேசிய பார்கவா, கார்பன் உமிழ்வை குறைக்க இன்னும் நாம் பல்வேறு தொழிற்நுட்பங்களை கண்டுப்பிடிக்க வேண்டும் என்றார்.

எலக்ட்ரிக் வாகனங்களை காட்டிலும் ஹைப்ரீட் வாகனங்கள் மூலமாக கார்பன் மாசு குறைவாக உமிழப்படுவதாக பார்கவா கூறியிருப்பதன் காரணம் என நாங்கள் கருதுவது என்னவென்றால், எலக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்வதற்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்தை உற்பத்தி செய்யும்போது உருவாகும் கார்பன் மாசு உமிழ்வை மனதில் வைத்து இத்தகைய கருத்தை பார்கவா கூறியிருப்பார் என நினைக்கிறோம்.
ஏனெனில், அதன்பின் பார்கவா கூறியதாவது, இந்தியாவில் 76% மின்சாரம் நிலக்கரியில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. இது எலக்ட்ரிக் வாகனங்களினால் ஏற்படும் சுற்றுச்சூழல் நன்மைகளுக்கு எதிரானது. அதுவே, எரிபொருள் என்ஜின் மற்றும் எலக்ட்ரிக் பவர் என இரண்டையும் மாற்றி மாற்றி பயன்படுத்தும்போது முழுவதுமாக நிலக்கரியால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை மட்டும் சார்ந்திருக்க வேண்டிய தேவை குறைவதால், கார்பன் மாசு உமிழ்வு குறைவாக இருக்கும் என்றார்.

மேலும் பேசிய மாருதி சுஸுகி தலைவர் ஆர்சி பார்கவா, "ஐரோப்பாவில் 30% மின்சாரம் மட்டுமே நிலக்கரியில் இருந்து பெறப்படுகிறது. இது இந்தியாவுக்கு நேர்மாறாக உள்ளது. இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களின் பங்களிப்பு வெறும் 4- 5% மட்டுமே உயர்ந்துள்ளது" என தெரிவித்துள்ளார். பார்கவா கூற வருவது என்னவென்றால், ஐரோப்பாவில் வெறும் 30% மின்சாரம் மட்டுமே சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் நிலக்கரியில் இருந்து உற்பத்தி செய்யப்படுகின்றன. இதனால், அங்கு எலக்ட்ரிக் வாகனங்கள் சரியானவைகளாக இருக்கலாம்.
ஆனால், நம் இந்தியாவில் 4இல் 3 பங்கிற்கும் அதிகமான மின்சாரம் நிலக்கரியை சார்ந்தே பெறப்படுகின்றன. இதனால், முழுவதுமாக எலக்ட்ரிக் வாகனங்களை நோக்கி செல்லும்போது மின்சாரம் வழக்கத்தை காட்டிலும் இன்னும் அதிகம் தேவைப்படும் அப்படியென்றால், அதற்கேற்ப நிலக்கரியின் பயன்பாடும் அதிகரிக்கும் என்பதாகும். ஹைப்ரீட் வாகனங்கள் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் மற்றும் தானாக சார்ஜ் ஆகும் டெக்னாலஜிகளை கொண்டிருப்பதால் அவையே நம் இந்தியா போன்ற நாட்டிற்கு ஏற்றதாக இருக்கும் என்பது ஆர்சி பார்கவாவின் கருத்தாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகி தலைவர் ஆர்சி பார்கவாவின் கருத்தும் ஏற்கக் கூடியதாகவே உள்ளது. ஏனெனில், எலக்ட்ரிக் வாகனங்களை மக்கள் அனைவரும் பயன்படுத்தினால் அந்த அளவிற்கான மின்சாரத்திற்கு எங்கே செல்வது என்கிற அச்சம் அரசாங்கத்திடமும் உள்ளது. 100% எலக்ட்ரிக் வாகனங்களை இன்னும் நாம் எட்டாததால், அந்த பயத்தை அரசாங்கம் வெளிக்காட்டிக் கொள்ளாமல் உள்ளது. வருங்காலங்களில் இதற்கு தீர்வை கண்டுப்பிடித்துக் கொள்ளலாம் என தெளிவற்ற எதிர்காலத்தை நோக்கி செல்வதை விட, ஆர்சி பார்கவா கூறுவதை போன்று ஹைப்ரீட் வாகனங்களை இன்னும் தீவிரமாக ஊக்குவிக்கலாம்.


Click it and Unblock the Notifications









