காரோட விலை ரூ.2 கோடி... ஃபேன்சி நம்பர் பிளேட் ரூ.25 லட்சம்!! யாருங்க இந்த ஹைதராபாத் பிஸ்னஸ்மேன்?
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது விலையுயர்ந்த டொயோட்டா காருக்கு சுமார் ரூ.25.5 லட்சம் செலவு செய்து ஃபேன்சி நம்பர் பிளேட்டை வாங்கி அனைவரையும் ஆச்சிரியப்படுத்தி உள்ளார். யார் இந்த ஹைதராபாத் பிஸ்னஸ்மேன்? ஃபேன்சி நம்பர் பிளேட்டிற்கே இவ்வளவு செலவு செய்துள்ளார் என்றால், எவ்வளவு விலையில் இவர் காரை வாங்கியிருப்பார்? என்கிற கேள்விகளுக்கு பதில்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
வாகனங்களுக்கு ஆர்டிஓ-இல் வழங்கப்படும் நம்பர் பிளேட் மிக முக்கியமானது ஆகும். ஏனெனில், எந்தவொரு வாகனத்திற்கும் அடையாளமே அதன் நம்பர் பிளேட் ஆகும். இருப்பினும், மற்றவர்களிடம் இருந்து ஸ்பெஷலாக தெரிய வேண்டும் என்பதற்காக பணக்காரர்கள் தங்களது பண பலத்தை உபயோகித்து ஃபேன்சி நம்பர் பிளேட்டை வாங்குகின்றனர்.

ஃபேன்சி நம்பர் பிளேட்டிற்காக கோடிகளில் பணத்தை செலவு செய்தவர்களும் இருக்கின்றனர். இந்த வரிசையில், ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ரூ.25.5 லட்சம் செலவு செய்து தனது டொயோட்டா லேண்ட் க்ரூஸர் எல்.எக்ஸ் (Land Cruiser LX) காருக்கு ஃபேன்சியான '9999' எண் கொண்ட நம்பர் பிளேட்டை வாங்கியுள்ளார்.
ஹைதராபாத்தின் மத்திய மண்டலத்தில் உள்ள கைரதாபாத் ஆர்டிஓ சார்பில் சமீபத்தில் ஃபேன்சி நம்பர் பிளேட்டிற்கான ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தின் மூலமாக சுமார் 43 லட்சத்து 70,284 ரூபாயை கைரதாபாத் ஆர்டிஓ வருவாயாக ஈட்டியுள்ளது. இந்த ஏலத்தில் தெலுங்கானா மாநில 'TG' குறியீட்டை கொண்ட பல்வேறு ஃபேன்சி நம்பர் பிளேட்களுக்கான உரிமம் ஏலம் விடப்பட்டது.

இதில் 'TG-09-9999' என்கிற ஃபேன்சி நம்பர் பிளேட்டிற்கான ஏலம் நீண்ட நேரத்திற்கு விறுவிறுப்பாக நடந்தது. இறுதியாக, ஹைதராபாத்தை சேர்ந்த சோனி டிரான்ஸ்போர்ட் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த தொழிலதிபர் இந்த ஃபேன்சி நம்பர் பிளேட்டிற்கான உரிமத்தை பெற்றார். இதற்காக அந்த தொழிலதிபர் செலவு செய்த தொகை ரூ.25 லட்சத்து 50,002 ஆகும்.
அதாவது, ஏலத்தின் மூலம் மொத்தமாக கிடைத்த வருவாயான ரூ.43,70,284இல் பாதிக்கு மேல் இந்த ஒரு ஃபேன்சி நம்பர் பிளேட் மூலமாக கிடைத்துள்ளது. நம்பர் பிளேட்டையே இவ்வளவு விலையில் வாங்கியுள்ளார் என்றால், இந்த ஹைதராபாத் தொழிலதிபரின் கார் எவ்வளவு விலையில் இருக்கும் என்றுதானே யோசிக்கிறீர்கள்? நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த ஃபேன்சி நம்பர் பிளேட்டை இந்த பிஸ்னஸ்மேன் தனது டொயோட்டா லேண்ட் க்ரூஸர் என்கிற லக்சரி எஸ்யூவி காருக்காக வாங்கியுள்ளார்.

டொயோட்டா லேண்ட் க்ரூஸர் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.2.1 கோடியாக உள்ளது. ஹைதராபாத்தின் கைரதாபாத் ஆர்டிஓ சார்பில் நடத்தப்பட்ட இந்த ஏலத்தில் '0006' என இறுதியாக முடியும் ஃபேன்சி நம்பர் பிளேட் ஒன்று ரூ.2.76 லட்சத்திற்கு ஏலம் போனது. அதேபோல், ரூ.1.80 லட்சம் மற்றும் ரூ.1.20 லட்சத்திற்கு சில ஃபேன்சி நம்பர் பிளேட்ஸ் ஏலம் போகின.
தெலுங்கானா அரசு வாகனங்களுக்கான நம்பர் பிளேட்டில் மாநிலத்தின் குறியீட்டை 'TS'-இல் இருந்து 'TG'-ஆக மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. சோனி டிரான்ஸ்போர்ட் சொல்யூஷன்ஸ் சார்பில் வாங்கப்பட்டுள்ள இந்த ஃபேன்சி நம்பர் பிளேட் தெலுங்கானாவில் புதிய சாதனையை படைத்துள்ளது. ஏனெனில், இதற்குமுன் அந்த மாநிலத்தில் இதே '9999' என்கிற நம்பர் பிளேட் ரூ.21.6 லட்சத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வாங்கப்பட்டு இருந்ததே அதிகப்பட்சமாக இருந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரூ.2 கோடியில் கார் வாங்கியவருக்கு ரூ.25 லட்சத்தில் ஃபேன்சி நம்பர் பிளேட் வாங்குவது ஒன்றும் பெரிய விஷயமாக இருக்காது. தெலுங்கானாவை பொறுத்தவரையில், ரூ.25.5 லட்சம் என்பது ஃபேன்சி நம்பருக்காக செலவழிக்கப்பட்ட அதிகப்பட்ச தொகையாக இருக்கலாம். ஆனால் உலகளவில் பார்த்தால், துபாயில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 'துபாய் பி 7' என்கிற நம்பர் பிளேட் இந்திய ரூபாய் மதிப்பில் ஏறக்குறைய சுமார் ரூ.122 கோடிக்கு ஏலம் போனது.


Click it and Unblock the Notifications









