ராபிடோ தொழிலுக்கு மட்டும் போகவே கூடாது! நடுரோட்டில் ரைடருக்கு நேர்ந்த கதி, மனிதாபிமானம் குறைஞ்சிக்கிட்டே வருது
ராபிடோ (Rapido) பைக் டாக்ஸி ஊழியர்களின் நிலைமை எந்த அளவிற்கு உள்ளது என்பதை விளக்கும் விதமாக, ஹைதராபாத்தில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. அது என்ன என்பதையும், இதுகுறித்து இணையத்தில் வெளியிடப்பட்டு உள்ள வீடியோவையும் பற்றி இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
ராபிடோ, இந்தியாவில் வேகமாக வளர்ந்து பைக் டாக்ஸி சேவை நிறுவனம். கார் டாக்ஸி மற்றும் ஆட்டோவில் செல்லும் அளவிற்கு பணம் இல்லாதவர்கள் தங்களது போக்குவரத்துக்கு பயன்படுத்திக் கொள்ளும் விதமாக ராபிடோ அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது, இந்த டாக்ஸி சேவையில் கார் மற்றும் ஆட்டோவிற்கு பதிலாக பைக்கில் வாடிக்கையாளர்கள் அழைத்து செல்லப்படுகிறார்கள்.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர்புறங்களில் பைக் பயணம் ஏற்றதாகவும், விரைவானதாகவும் இருப்பதால் எதிர்பார்த்ததை காட்டிலும் ராபிடோ இந்தியா முழுவதும் விரிவடைய ஆரம்பித்தது. ஆனால், அதன்பின்பே பிரச்சனை ஆரம்பித்தது. ராபிடோவை பயன்படுத்தி நிறைய பேர் குற்ற செயல்களில் ஈடுப்படுவதாகவும், குறிப்பாக இரவு நேரங்களில் பைக் ஓட்டும் கேப்டன்களுக்கும், கஸ்டமர்களுக்கும் போதிய அளவு பாதுகாப்பு இருப்பதில்லை என குற்றச்சாட்டுகள் எழ ஆரம்பித்தன.
இதற்கேற்றாற்போல், பெங்களூர், டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் ராபிடோவை சுற்றி குற்ற செயல்கள் நடந்ததை பார்க்க முடிந்தது. இது ஒருபுறம் என்றால், மறுபுறம் ஆட்டோ டிரைவர்களின் போராட்டம். இதன் எதிரொலியாக தலைநகர் டெல்லியில் ராபிடோ சேவைக்கு தடைவிதிக்கப்பட்டதை கேள்விப்பட்டு இருப்பீர்கள். ராபிடோ சேவையை பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் நம்பியுள்ளனர்.

இருப்பினும், ராபிடோ ரைடர்களின் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் போராட்டமாகவே உள்ளது. இந்த நிலையில், தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஸ்கூட்டரில் பெட்ரோல் தீர்ந்துப்போன பின்பும், கஸ்டமரை அமர வைத்து ராபிடோ ரைடர் ஒருவர் தள்ளிக் கொண்டு சென்றுள்ளார். இதுதொடர்பான வீடியோ எக்ஸ் தள பக்கத்தில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, வழக்கம்போல் இந்த ராபிடோ ரைடர் தனது பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்த போது பாதி வழியில் ஸ்கூட்டரில் பெட்ரோல் காலியாகி உள்ளது. இதனால், எப்போது வேண்டுமானாலும் ஸ்கூட்டர் நின்றுவிடலாம் என பயணியிடம் இந்த ராபிடோ ரைடர் தெரிவித்துள்ளார். இவர்கள் எதிர்பார்த்தப்படி, அடுத்த சில மீட்டர்கள் தூரத்திற்கு சென்ற பின் ஸ்கூட்டர் பெட்ரோல் இல்லாததால் நின்றுள்ளது.

இதனால், பயணியை பாதி வழியிலேயே ஸ்கூட்டரில் இருந்து ரைடர் இறங்க சொல்லியுள்ளார். ஆனால், ராபிடோவை புக் செய்த அந்த கஸ்டமரோ கீழே இறங்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால், வேறு வழியின்றி பெட்ரோல் பங்க் வரையில் அவரை அமர வைத்து ராபிடோ ரைடர் தனது ஸ்கூட்டரை தள்ளிக் கொண்டு சென்றுள்ளார். பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்த இந்த நிகழ்வை சாலையில் பலரும் விசித்திரமாக பார்த்தப்படி சென்றனர்.
சிலர் இந்த நிகழ்வை தங்களது மொபைல் போனில் காட்சிப்படுத்தி இணையத்தில் வெளியிட, அது வைரலாகி உள்ளது. ராபிடோவை புக் செய்த கஸ்டமர் மாற்று திறனாளியா என்பது தெரியவில்லை. ராபிடோ ரைடர் பார்ப்பதற்கும் உயரம் குறைவானவராக இருப்பதால், ஒரு ஆளை அமர வைத்து ஸ்கூட்டரை மிகவும் கஷ்டப்பட்டு தள்ளுவதை வீடியோவை காண முடிகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொதுவாக, ஒரு ஸ்கூட்டரை தள்ளிக் கொண்டு செல்வதே கொஞ்சம் கடினம். இதில் ஒரு நபரை அமர வைத்து தள்ளுவது என்பது இன்னும் சிரமம். இந்த கஸ்டமர் மாற்றுத் திறனாளியாக இல்லாத பட்சத்தில், இது கண்டனத்திற்குரிய செயல் ஆகும். மனதின் ஓரத்தில் சிறிது மனிதாபிமானம் உள்ள எவரொருவரும் இதை செய்யமாட்டார்கள். அதேநேரம், ராபிடோ ரைடர்களும் பயணத்தை துவங்கும்முன் தங்களது வாகனத்தில் போதிய அளவுக்கு பெட்ரோல் உள்ளதா என்பதை உறுதிச்செய்துக் கொள்வது அவசியம்.


Click it and Unblock the Notifications









