தப்பை கண்டிக்கிற போலீசாரே இப்படி பண்ணலாமா? அபராதத்தை பார்த்து புலம்பும் கார் ஓனர்!!
ஹெல்மெட் அணியவில்லை என்றால் போலீசார் அபராதம் விதிப்பார்கள் என்பது நம் எல்லாருக்குமே தெரிந்ததே. இப்போது நிறைய இடங்களில் கேமராக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டதால், போலீசார் சாலைகளில் நின்று வாகன சோதனைகளில் ஈடுப்படுவதில்லை. கேமரா காட்சிகளை சோதித்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இதனால், இந்த செயல்முறை எளியதாகிவிட்டது என்றாலும், அவ்வப்போது சிறு சிறு தவறுகள் நிகழ்கின்றன. அந்த வகையில், காரில் சென்றவருக்கு ஹெல்மெட் அணியாததற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. என்ன நடந்தது? வாருங்கள் அதனை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
உலகளவில் சாலை விபத்துகளில் நம் இந்தியா முன்னணியில் உள்ளது. சாலை விபத்துகளை தவிர்க்க வேண்டுமென்றால், அதற்கேற்ப சட்டங்களும் கடுமையாக்கப்பட வேண்டியது அவசியமாகும். ஆனால், 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா போன்ற பெரிய நாட்டில் தினந்தோறும் ஒவ்வொரு சாலையிலும் நின்று போலீசார் வாகனங்களை சோதனை செய்வது முடியாத காரியம் ஆகும்.

தற்போதைக்கு, இதற்கு தீர்வாக கருதப்படுவது சிசிடிவி கேமராக்கள் ஆகும். சில வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) பெற்ற சிசிடிவி கேமராக்கள் விதிமீறல்களில் ஈடுப்படும் வாகன ஓட்டிகளை அடையாளம் கண்டு தானாக அபராதங்களை விதிக்கின்றன. அதாவது, ஒரு போலீசார் செய்யும் வேலையை ஒரு கேமரா செய்துவிடுகிறது. இத்தகைய கேமராக்கள் இந்தியாவில் மிக மிக குறைவான பகுதிகளில் மட்டுமே உள்ளது.
இந்தியாவிலேயே முதல் மாநிலமாக கேரளாவில் ஏஐ சிசிடிவி கேமராக்கள் மாநிலம் முழுவதும் நிறைய இடங்களில் பொருத்தப்பட்டன. அதன் மூலமாக, கேரள போலீசாருக்கு நன்மைகள் கிடைத்தாலும், அதேநேரம் சில பிரச்சனைகளும் உருவாகின. ஏனெனில், நம் ஊர் சாலைகளில் எது எப்போது குறுக்கே வரும் என்பதே தெரியாது. இதனால், வாகன ஓட்டிகளை அடையாளம் காண்பதிலும், மற்ற விஷயங்களிலும் ஏஐ சிசிடிவி கேமராக்கள் பெரிதும் சிரமப்பட்டன.
அதுவும் இல்லாமல், இந்த கேமராக்களை முறையாக பராமரிக்க முடியாததால் இந்த விஷயத்தில் கேரள அரசாங்கம் பின்வாங்கியது. இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் போக்குவரத்தை கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், அவற்றின் மூலம் பெறப்படும் தரவுகளை போலீசார் மேனுவலாக செக் செய்து அபராதங்களை விதித்து வருகின்றனர். அப்படியிருந்தும், நொய்டாவில் கார் ஓட்டி ஒருவருக்கு ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விசித்திரமான அபராத செல்லானை பெற்றிருக்கும் கார் ஓட்டியின் பெயர் துஷார் சக்சேனா ஆகும். ஊடகவியலாளரான இவர் தனது இ-மெயிலுக்கு வந்திருக்கும் அபராத இ-செல்லானை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு நியாயம் கேட்டுள்ளார். காரில் பயணம் செய்பவர்கள் ஹெல்மெட் அணிந்திருக்க தேவையில்லை. இதைவிட பெரிய காமெடி என்னவென்றால், செல்லானில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் துஷார் சக்சேனா நொய்டாவில் இல்லை.
துஷார் சக்சேனாவின் இருப்பிடம் உத்தர பிரதேச மாநிலத்தின் ராம்பூரில் உள்ளது. ராம்பூரில் இருந்து நொய்டா ஏறக்குறைய 190கிமீ தொலைவில் உள்ளது. துஷார் சக்சேனாவிடம் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் கார் உள்ளது. அந்த காரின் பதிவெண்ணை குறிப்பிட்டு, ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்ததற்காக சக்சேனாவுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இவ்வாறு கார் ஓட்டிக்கு ஹெல்மெட் அணியாததற்காக அபராதம் விதிக்கப்படுவது இது ஒன்றும் முதல்முறை அல்ல. இதேபோன்று, வட இந்தியாவில் ஜான்சி, பாரத்பூர் பகுதிகளில் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டன. இதில் இருந்து போக்குவரத்து துறையினரின் அலட்சியம் தெரிவதாக துஷார் சக்சேனாவின் பதிவுக்கு நிறைய பேர் கமெண்ட் செய்துள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நொய்டாவுக்கு செல்லாத கார் ஓட்டி ஒருவருக்கு ஹெல்மெட் அணியாததற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றால் இதற்கு இரு காரணங்கள் இருக்கலாம். ஒன்று, போக்குவரத்து போலீசாரின் கவன குறைவாக இருக்கும். வாகன பதிவெண்ணை தவறாக குறிப்பிட்டால் அது வேறொருவருக்கு சென்றுவிடும். மற்றொரு காரணம், சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுப்படுபவர்கள் பெரும்பாலும் போலியான வாகன பதிவெண்ணையே பயன்படுத்துகின்றனர்.
Image Courtesy: X/Tusharsaxena80


Click it and Unblock the Notifications








