பாலத்திற்கு அடியில் காரை நிறுத்தி சென்றவருக்கு நேர்ந்த கதி! திரும்பி வந்து பார்த்தபோது நிகழ்ந்த விபரீதம்!
இந்தியாவில் பாலங்களுக்கு அடியில் கார் மற்றும் டூவீலர் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி செல்லும் பழக்கம் நம்மில் பலருக்கும் இருந்து வருகிறது. பாலங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கான இடவசதியை வழங்குவதுடன் மட்டுமல்லாது, மழை மற்றும் வெயில் ஆகியவற்றில் இருந்து போதுமான பாதுகாப்பையும் வழங்கி கொண்டுள்ளன.
ஆனால் தற்போது நடைபெற்றுள்ள ஒரு சம்பவம், பாலத்திற்கு அடியில் வாகனங்களை நிறுத்த வேண்டுமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. சமூக வலை தளங்களில் தற்போது வைரல் வீடியோ (Viral Video) ஒன்று வேகமாக பரவி வருகிறது. இதில், ஒரு பாலத்திற்கு அடியில் நிறைய கார்கள் நிறுத்தப்பட்டிருப்பதை நம்மால் காண முடிகிறது.

அதில் ஒரு கார் மீது, குழாயில் இருந்து மிக வேகமாக தண்ணீர் விழுந்த காரணத்தால், அந்த காரின் முன் பக்க விண்டுஷீல்டு உடைந்து சேதமடைந்ததையும் நாம் பார்க்கலாம். பலத்த மழை பெய்த சமயத்தில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. குழாய் இருப்பது தெரியாமல், அதற்கு கீழே இந்த காரின் உரிமையாளர் பார்க்கிங் செய்து விட்டதை போல் தெரிகிறது.
அந்த சமயத்தில் கனமழை பெய்த காரணத்தால், குழாய் வழியாக கார் மீது பயங்கர விசையுடன் தண்ணீர் விழுந்துள்ளது. ஆரம்பத்தில் தண்ணீர் ஓரளவிற்கு குறைவாகதான் விழுந்துள்ளது. ஆனால் மழை தீவிரம் ஆகவும், தண்ணீரின் வேகம் அதிகரித்துள்ளது. இந்த வீடியோவை நீங்கள் உன்னிப்பாக கவனித்தால், ஒரு விஷயம் புலப்படும்.
காருக்கு முன்பாக குழாய் உடைந்து விழுந்துள்ளது. அதன் காரணமாகவே காரின் மீது தண்ணீர் விழுந்துள்ளது. தண்ணீர் வேகமாக விழுந்து, விண்டுஷீல்டு சேதமடைந்ததுடன் மட்டுமல்லாது, உடைந்த விண்டுஷீல்டு வழியாக காருக்கு உள்ளேயும் தண்ணீர் சென்றுள்ளது. இந்த வீடியோவில் கார் கதவுகளின் அடிப்பகுதியை கவனித்தால், கேபினில் இருந்து தண்ணீர் கசிவதை நாம் பார்க்கலாம்.
எனவே காருக்கு உள்ளே இருக்க கூடிய இருக்கை மற்றும் டேஷ்போர்டு உள்ளிட்ட பாகங்களும் பயங்கரமாக சேதமடைந்திருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இதை எல்லாம் சரி செய்வதற்கு நிச்சயம் அதிகமாக செலவு ஆகும் என்பதில் சந்தேகமில்லை. எனவே இந்த காரின் உரிமையாளர் மீது நமக்கு வருத்தம் ஏற்படுகிறது.
கார் உரிமையாளர்கள் மத்தியில், குறிப்பாக பாலங்களுக்கு அடியில் பார்க்கிங் செய்பவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் சீனாவில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அத்துடன் சேதம் அடைந்த கார், ஹூண்டாய் க்ரெட்டாவை (Hyundai Creta) போல் தெரிகிறது. இது இந்தியாவிலும் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்றாகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பாலங்களுக்கு அடியில் வாகனங்களை நிறுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது. பாலங்களுக்கு அடியில் மட்டுமல்லாது, எங்கு நிறுத்தினாலும், சுற்றுப்புறத்தை ஒரு முறை உன்னிப்பாக கவனித்து விட்டு வாகனங்களை நிறுத்துவது நல்லது. அதுவே பாதுகாப்பான விஷயமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








