ஆம்லெட் போட்டு சாப்பிடுற இடமா இது? இந்த எலக்ட்ரிக் கார் ஓனர்களின் அட்டகாசம் தாங்க முடியல!!
எலக்ட்ரிக் கார்களுக்கு (Electric Cars) இந்தியா உள்பட உலகம் முழுக்க வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், எலக்ட்ரிக் கார்களை பயன்படுத்துவதால் காற்று மாசு வெகுவாக குறைக்கப்படுகிறது என்பதாகும். இது, உலக வெப்பமயமாதல் போன்ற சர்வதேச அளவிலான பிரச்சனைகளை சமாளிக்கக் கூடியதாக இருப்பதினாலேயே எலக்ட்ரிக் வாகனங்கள் விஷயத்தில் நம் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டையும், அவற்றின் உற்பத்தியையும் அதிகரிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எலக்ட்ரிக் கார்களை பயன்படுத்துவதால் இன்னும் சில நன்மைகள் கூட உள்ளன.
எலக்ட்ரிக் கார்கள் ஓர் நடமாடும் ஸ்விட்ச் போர்டு ஆகும். இதனால், எலக்ட்ரிக் கார்கள் மூலமாக எங்கே வேண்டுமாயினும் மின்சாரத்தை பெறக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. இவ்வாறு பெறக்கூடிய மின்சாரத்தை உங்களால் வேறொரு எலக்ட்ரிக் காருக்கு கூட கொடுக்க முடியும். மற்றும், மின்சாதன பொருட்களை எலக்ட்ரிக் கார் உதவியுடன் இயங்க வைக்க முடியும். இதனை V2L (Vehicle-to-Load) என அழைக்கின்றனர்.

அப்படித்தான் இங்கு ஒரு தம்பதியினர் தங்களது ஹூண்டாய் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5) எலக்ட்ரிக் காரின் மின்சாரத்தை உபயோகித்து மின் அடுப்பை பற்றி வைத்து ஆம்லெட் (Omelette) போட்டு சாப்பிட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ இன்ஸ்டாகிராமில் (Instagram) வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில், ஆள் நடமாட்டம் அதிகமாக இல்லாத சாலையின் ஓரத்தில் ஹூண்டாய் ஐயோனிக் 5 எலக்ட்ரிக் கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதை காண முடிகிறது.
காரில் இருந்து அடாப்டரை (Adapter) உபயோகித்து ஆம்லெட் போட்டு சாப்பிட்ட இந்த தம்பதியின் பெயர் ஸ்ரீஹரி- அப்புசன் ஆகும். கேரளாவை சேர்ந்த இந்த தம்பதி இவ்வாறு அவ்வப்போது புது புது இடங்களுக்கு தங்களது கேரளாவில் பதிவு செய்யப்பட்ட ஐயோனிக் 5 காரில் சுற்றுலா செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். தற்போது கூட, வட இந்தியாவில் சுற்றுலா சென்றப்போது இவ்வாறு சாலையின் ஓரத்தில் ஆம்லெட் போட்டு சாப்பிட்டுள்ளனர்.

வீடியோவில், இந்த கேரள தம்பதியின் ஐயோனிக் 5 எலக்ட்ரிக் காரின் பின்பக்கத்தில் முழுவதுமாக பொருட்கள் நிரம்பி வழிவதை காணலாம். இதில் இருந்து இவர்கள் எத்தனை நாட்களுக்கு நீண்ட சுற்றுலாவை மேற்கொண்டு வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது. இவ்வாறு, மின் சாதன பொருட்களை காருடன் இணைப்பதற்காக ஐயோனிக் 5 எலக்ட்ரிக் காருடன் வி2எல் அடாப்டரை ஹூண்டாய் நிறுவனம் வழங்குகிறது.
இந்த அடாப்டரை காரின் சார்ஜிங் பாயிண்ட் உடன் இணைத்து மின்சாதன பொருட்களை பயன்படுத்தலாம். அதாவது, இந்த வி2எல் அடாப்டரின் மறுமுனையில் ஸ்விட்ச் போர்டு போன்றதான அமைப்பு இருக்கிறது. இதனை பயன்படுத்தி மின் அடுப்பு, மின்விசிறி, காபி மெஷின் போன்ற சிறிய அளவிலான மின் சாதனங்களை தான் பயன்படுத்த முடியும்.
குளிர்சாதன பெட்டி, வாஷின் மெஷின், கிரைண்டர் போன்ற பெரிய அளவிலான மின் சாதனங்களை பயன்படுத்த முடியாது. சிறிய அளவிலான மின் சாதனங்களையும் காரின் பேட்டரியின் சார்ஜை பொறுத்தே பயன்படுத்த முடியும். இவ்வாறான மின் சாதனங்களை பயன்படுத்துவதால், பேட்டரியின் சார்ஜை உபயோகித்து கார் இயங்கக்கூடிய தொலைவு நிச்சயமாக குறையும்.
ஐயோனிக் 5 காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது ஹூண்டாயின் விலையுயர்ந்த எலக்ட்ரிக் கிராஸ்ஓவர் கார் ஆகும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.46.5 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன. இந்த காரில் வழங்கப்படும் எலக்ட்ரிக் மோட்டார் ஆனது அதிகப்பட்சமாக 217 பிஎச்பி மற்றும் 350 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எதிர்காலத்தில் எலக்ட்ரிக் கார்கள் நமது வாழ்க்கை முறையையே மாற்றி போட போகின்றன என்பதற்கு இவ்வாறான நிகழ்வுகளே சாட்சியாகும். இவ்வாறு மின்சாதனங்களை பயன்படுத்துவதால், காரின் ரேஞ்ச் குறையும் என்றாலும் அது மிகவும் குறைவே ஆகும். இந்த கேரள தம்பதியினர் முன்னெச்சரிக்கையாக காரை நிழலில் நிறுத்திவிட்டு, மின் அடுப்பை பயன்படுத்தி இருப்பது பாராட்டத்தக்கது.


Click it and Unblock the Notifications








