இது தெரியாம ஹூண்டாய் ஐபிஓவை வாங்கிடாதீங்க! அப்புறம் உங்களுக்கு தான் ரிஸ்க்!
தென் கொரிய நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வரும் நிலையில் ஹுண்டாய் மோட்டார்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் ஐபிஓ வை வெளியிட திட்டமிட்டு வருகிறது. இதன் மூலம் இந்நிறுவனம் ரூ25000 கோடியை திரட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் ஐபிஓ வாங்குவதில் என்னென்ன ரிஸ்க்கள் இருக்கிறது? இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓவாக இந்த ஐபிஓ சொல்லப்படுவதற்கான காரணம் என்ன? என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை தயாரிக்கும் இரண்டாவது நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் மொத்தம் 800 மில்லியன் பங்குகளை வைத்துள்ளது. அதில் 140 மில்லியன் பங்குகளை ஐபிஓவாக வெளியிட திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அந்நிறுவனம் 3 பில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் ரூ25000 கோடியை திரட்டுகிறது.

இதுவரை இந்தியாவிலேயே மிகப்பெரிய ஐபிஓவாக எல்ஐசி வெளியிட்ட ஐபிஓ தான் இருந்தது. அதன் மூலம் எல்ஐசி ரூ21,000 கோடியை திரட்டியது. அதன் பிறகு மிகப்பெரிய சாதனையாக இந்த ஹுண்டாய் நிறுவனத்தின் ஐபிஓ தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2003ம் ஆண்டு வாகன தயாரிப்பு நிறுவனமான மாருதி நிறுவனம் பங்குச் சந்தையில் லிஸ்ட் செய்யப்பட்டது. அதன் பிறகு மிகப்பெரிய நிறுவனமாக இந்த ஹூண்டாய் நிறுவனம் தான் தற்போது பங்குச்சந்தைக்கு வருகிறது.
ஹுண்டாய் நிறுவனம் தற்போது ஆண்டிற்கு ரூ 60 ஆயிரம் கோடியை வருமானமாக ஈட்டி வருகிறது. இதில் லாபம் மட்டும் ரூ4653 கோடியாக இருக்கிறது. ஹூண்டாய்நிறுவனத்தின் சர்வதேச வருமானத்தில் இந்திய வருமானம் வெறும் ஒரு சதவீதம் தான். இந்தியாவில் இந்நிறுவனம் ஐ20, வெர்னா, கிரெக்டா, ஆரா மற்றும் டுஸான் ஆகிய கார்கள் மூலம் அதிக அளவிலான வருமானங்களை ஈட்டி வருகிறது.

ஹூண்டாய் நிறுவனம் தற்போது ஐபிஓவை வெளியிடுவதற்கான டிராஃப்ட் ரெட் ஹெர்ரிங் பிராஸ்பெக்டஸை வெளியிட்டுள்ளது. இதில் உள்ள தகவலின் படி இந்த ஐபிஓவை வாங்குவதில் சில ரிஸ்க்கள் இருக்கிறது. இதை பற்றி தான் இங்கே நாம் காண போகிறோம். பொதுவாக எந்த நிறுவனத்தின் ஐபிஓ வெளியானாலும், இப்படியான ஆவணம் வெளியிடப்படும். ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ரிஸ்க் என்ற விவகாரம் இருக்கிறது. இந்த ரிஸ்கை பொறுத்து தான் முதலீடுகள் ஈர்க்கப்படும்.
ஹுண்டாய் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆவணத்தின் படி இந்நிறுவனம் வாகன தயாரிப்பு உதிரி பாகங்கள், இன்ஜின், கியர்பாக்ஸ், ஸ்டீல் உள்ளிட்ட பொருட்களை இந்தியாவிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் வாங்கி அதன் மூலம் வாகனங்களை தயாரிக்கிறது. இந்த பொருட்களின் விலை ஏற்றம் ஏற்பட்டால் இது ஹூண்டாய் நிறுவனத்தின் தொழிலை நேரடியாக பாதிக்கும்.
ஹூண்டாய் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் மீது இந்தியாவில் உள்ள பல்வேறு கோர்ட்டுகளில் வழக்குகள் நடந்து வருகிறது. இந்த வழக்குகளில் ஹூண்டாய் நிறுவனத்திற்கு பாதகமாக தீர்ப்புகள் வரும் பட்சத்தில், இது அந்த நிறுவனத்தின் தொழிலையும் நிதி நிலையையும் கடுமையாக பாதிக்கும்.
ஹூண்டாய் குரூப்ஸ் தரப்பிலிருந்து இந்தியாவில் கியா பிராண்டில் தனியாக ஒரு நிறுவனம் துவங்கப்பட்டு அங்கும் ஹூண்டாய் நிறுவனம் தயாரிக்கும் அதே போன்ற வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றன. இரண்டு நிறுவனங்களும் ஒரே தொழிலில் இருப்பதால் முரண்பாடுகள் ஏற்படும் பட்சத்தில் இந்த நிறுவனத்தின் தொழில் பாதிக்க வாய்ப்பு உள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் தற்போது சென்னையில் உள்ள தனது ஆலையில் வைத்து தான் பயணிகள் வாகனம் மற்றும் மற்ற உதிரி பாகங்களை தயாரித்து வருகிறது. இந்த ஆலைக்கு ஏதாவது பிரச்சனை ஏற்படும் பட்சத்தில் அது ஹூண்டாய் நிறுவனத்தின் தயாரிப்பு திறனை பாதிக்கும். இதுபோக இந்நிறுவனம் மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிய ஆலையை அமைத்து வருகிறது. அந்த ஆலை செயல்பாட்டிற்கு வந்த பிறகு பிரச்சினை ஏற்பட்டாலும் பாதிப்பு வர வாய்ப்புள்ளது.
ஹூண்டாய் நிறுவனத்திற்கு அரசு தரப்பில் இருந்து பல்வேறு விதமான மானியங்கள் மற்றும் ஊக்க தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இது அந்நிறுவனத்தின் முக்கிய நிதி ஆதாரமாக உள்ளது. இது குறித்து அரசு பாதகமான முடிவை அறிவிக்கும் பட்சத்தில் அது ஹூண்டாய் நிறுவனத்தின் தொழில் மற்றும் நிதி நிலையை பாதிக்க வாய்ப்புள்ளது.
ஹூண்டாய் நிறுவனத்தின் தொழில் என்பது மார்கெட் டிரெண்ட் மற்றும் வாடிக்கையாளர்களின் தேவையை மையமாகக் கொண்டதாக இருக்கிறது. தொடர்ந்து இந்நிறுவனம் தனது தயாரிப்புகளை இதற்கு ஏற்றார் போல் மாற்றினால் மட்டுமே இந்நிறுவனம் வளர்ச்சியையும் லாபத்தையும் பார்க்க முடியும். இல்லாத பட்சத்தில் மெல்ல மெல்ல நிறுவனத்தின் வருமானம் குறைய வாய்ப்புள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் செயல்படும் நிறுவனமாக இருந்தாலும் இந்நிறுவனத்தை கட்டுப்படுத்த சர்வதேச நிறுவனம் ஒன்று இருக்கிறது. அதனால் சர்வதேச நிறுவனங்கள் எடுக்கும் முடிவுகள் இந்திய நிறுவனத்திற்கு பாதகமாக மாற வாய்ப்புகள் உள்ளது. மேலும் இந்நிறுவனம் எப்படி செயல்பட வேண்டும் என்பதை சர்வதேச நிறுவனம் தான் முடிவு செய்கிறது. இதனால் சர்வதேச அளவில் ஏற்படும் பிரச்சனை இந்தியாவில் உள்ள ஹூண்டாய் நிறுவனத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.
தற்போது இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனம் எஸ்யூவி ரக கார்களை விற்பனை செய்வதன் மூலம் அதிகமான லாபத்தை ஈட்டி வருகிறது. இந்நிறுவனம் எஸ்யூவி கார்களை தயாரிப்பதில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டாலோ அல்லது மற்ற பயணிகள் வாகனத்தை மக்கள் அதிகம் விரும்ப துவங்கி விட்டாலோ இந்நிறுவனத்தின் வருமானத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்நிறுவனம் தங்கள் வாகனங்களில் பயன்படுத்தும் தொழில்நுட்பம் மற்றும் சாப்ட்வேர்கள் கம்பெனியின் வெற்றிக்கும் வருமானத்திற்கும் மிக முக்கிய பங்கு வைக்கின்றன. இதில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டாலோ அல்லது இதை மேம்படுத்துவதில் சிக்கல் இருந்தாலோ இது வாகன விற்பனையை பாதிக்க வாய்ப்புள்ளது. இதனால் இந்நிறுவனத்தின் வருமானம் பாதிக்கும்.
ஹூண்டாய் நிறுவனத்தின் நீண்ட ஆண்டு கால திட்டமாக பார்க்க வேண்டும் என்றால் இந்நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களையும் மாற்று எரி சக்தி கொண்ட வாகனங்களையும் இந்தியாவில் அறிமுகப்படுத்த வேண்டும். இந்த மார்க்கெட் டிரெண்டை பிடிக்க ஹூண்டாய் நிறுவனம் தவறிவிட்டாலோ அல்லது எலெக்ட்ரிக் வாகனத்தில் இந்நிறுவனம் பெரிய அளவில் ஜெயிக்கவில்லை என்றாலோ இது நேரடியாக இந்நிறுவனத்தின் வருமானத்தை பாதிக்கும்.
இந்நிறுவனம் வாரண்டிக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதுமானதாக இல்லை என தெரிகிறது. எதிர்காலத்தில் வாரண்டி கோரி அதிகமான கோரிக்கைகள் வரும் பட்சத்தில் போதிய நிதி இல்லாததன் காரணமாக இந்நிறுவனத்தின் நிதிநிலை பாதிக்க வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் வாரண்டி கோரிக்கை குறைவாக வரும் பட்சத்தில் நிதிநிலை மேன்மை பெறவும் வாய்ப்பு உள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் இதற்கு முன்னர் தான் செலுத்த வேண்டிய பணத்தை உரிய நேரத்தில் செலுத்தாமல் காலதாமதம் செய்துள்ளது. எதிர்காலத்திலும் இப்படியான காலதாமதமான பணம் செலுத்தும் முறையை அந்நிறுவனம் தொடர்ந்தால், அதற்காக நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்படலாம். இதுவும் நிறுவனத்தின் நிதி நிலையை பாதிக்கும்.
ஹுண்டாய் நிறுவனத்திற்கு வெளிநாட்டில் இருந்து நிதி வர வேண்டியது இருப்பதால் அந்நிய செலாவணி மதிப்பில் ஏற்படும் மாற்றம் இந்நிறுவனத்தின் மதிப்பை குறைக்க வாய்ப்பு உள்ளது. அந்நிய செலாவணி மூலம் வெளிநாட்டு பணத்தை உள்நாட்டு பணமாக மாற்றும் விவகாரத்தில் பல நிறுவனங்கள் இழப்பை சந்தித்துள்ளன. இந்நிறுவனமும் அதற்கு வாய்ப்பை கொடுக்கும் வகையிலான நடைமுறையை வைத்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய ஐபிஓவை வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில் பலர் இந்த ஐபிஓவை வாங்க தற்போதே யோசனை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் தான் இதில் இருக்கும் ரிஸ்குகளை எல்லாம் இங்கே பட்டியலிட்டு உள்ளோம். இதுபோக இந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு பல நல்ல காரணங்களும் உள்ளன. இதையெல்லாம் அலசி ஆலோசித்து உங்கள் முடிவுகளை எடுங்கள்.


Click it and Unblock the Notifications








