எகிறி அடிக்கும் டாடா... ஹூண்டாய் எல்லாம் இனி ஓரமாதான் நிக்கணும் போல... நிலைமை தலைகீழா மாறி போயிருச்சு!
ஹூண்டாய் கார்களின் விற்பனை கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நடப்பாண்டு பிப்ரவரி மாதத்திற்கான தனது விற்பனை நிலவரங்களை ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன்படி ஹூண்டாய் இந்தியா நிறுவனம் நடப்பாண்டு பிப்ரவரி மாதம் ஒட்டுமொத்தமாக (உள்நாட்டு விற்பனை + ஏற்றுமதி) வெறும் 53,159 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

ஆனால் கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த எண்ணிக்கை 61,800 ஆக இருந்தது. இதன் மூலம் ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை 14 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. உள்நாட்டு விற்பனை மட்டும் என தனியாக எடுத்து கொண்டால், ஹூண்டாய் நிறுவனம் நடப்பாண்டு பிப்ரவரி மாதம் இந்திய சந்தையில் 44,050 கார்களை விற்பனை செய்துள்ளது.

இந்த எண்ணிக்கை கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 51,600 ஆக இருந்தது. இதன் மூலம் ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 14.6 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. அதே நேரத்தில் ஏற்றுமதியை பொறுத்தவரையில், ஹூண்டாய் இந்தியா நிறுவனம் நடப்பாண்டு பிப்ரவரி மாதம் 9,109 கார்களை மட்டுமே ஏற்றுமதி செய்துள்ளது.

ஆனால் கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஹூண்டாய் இந்தியா நிறுவனம் ஏற்றுமதி செய்த கார்களின் எண்ணிக்கை 10,200 ஆக இருந்தது. இது 10.7 சதவீத வீழ்ச்சியாகும். ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த வீழ்ச்சிக்கு தற்போது நிலவி வரும் செமி கண்டக்டர் சிப் பற்றாக்குறைதான் மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

செமி கண்டக்டர் சிப் பற்றாக்குறையால் கார் உற்பத்தி நிறுவனங்கள் அனைத்துமே மிக கடுமையாக திணறி வருகின்றன. இதற்கு ஹூண்டாய் இந்தியா நிறுவனமும் விதிவிலக்கல்ல. இந்த பிரச்னை காரணமாக ஹூண்டாய் நிறுவனத்தின் கார் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக விற்பனையும் வீழ்ச்சியடைந்து வருகிறது.

எனினும் இந்த பிரச்னையை சரி செய்வதற்கு ஹூண்டாய் நிறுவனம் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இந்த பிரச்னையை சரி செய்து, தனது கார்களுக்கான காத்திருப்பு காலத்தை குறைப்பதற்கும் ஹூண்டாய் நிறுவனம் முயற்சி செய்து கொண்டுள்ளது. இந்த பிரச்னைக்கு மத்தியிலும் நடப்பாண்டில் சில புதிய தயாரிப்புகளை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஹூண்டாய் நிறுவனம் தனது வெனியூ காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை வரும் மாதங்களில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து ஹூண்டாய் கிரெட்டா காரின் புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஹூண்டாய் கிரெட்டா காரின் இந்த புதிய மாடல் மிகப்பெரிய அளவில் மேம்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் வெனியூ இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களில் ஒன்றாகும். தற்போதைய நிலையில் டாடா நெக்ஸான், மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, மஹிந்திரா எக்ஸ்யூவி300, நிஸான் மேக்னைட், ரெனால்ட் கைகர் போன்ற கார்களுடன் ஹூண்டாய் வெனியூ போட்டியிட்டு வருகிறது.

இந்த செக்மெண்ட்டில் ஆரம்பத்தில் ஹூண்டாய் வெனியூ ஆதிக்கம் செலுத்தினாலும், தற்போது டாடா நெக்ஸான் காரின் ஆதிக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட எஸ்யூவி கார் டாடா நெக்ஸான்தான். காம்பேக்ட், மிட்-சைஸ், ஃபுல்-சைஸ் என எஸ்யூவி ரகத்தின் எந்த வகையை எடுத்து கொண்டாலும், டாடா நெக்ஸான்தான் முதலிடத்தை பிடித்துள்ளது.

வெனியூ காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை களமிறக்குவதன் மூலம் டாடா நெக்ஸான் காரின் இந்த கடுமையான போட்டியை சமாளிப்பதற்கு ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதேபோல் ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா கார் நிலைநிறுத்தப்பட்டுள்ள மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டிலும் தற்போது போட்டி பலமாக இருக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் ஸ்கோடா குஷாக் ஆகிய கார்கள் இந்த செக்மெண்ட்டில் பலத்த போட்டியை உருவாக்கியுள்ளன. எனவே ஹூண்டாய் கிரெட்டா காரின் புதிய மாடலும் அவசியமாகிறது. ஹூண்டாய் கிரெட்டா காருக்கு, ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் ஸ்கோடா குஷாக் ஆகிய கார்களின் வடிவில் மட்டுமல்லாது, கியா செல்டோஸ் வடிவிலும் பலத்த போட்டி காணப்படுகிறது.

எனினும் வெனியூ மற்றும் கிரெட்டா ஆகிய கார்களின் புதிய மாடல்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான போட்டியை சமாளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ஹூண்டாய் நிறுவனம் வெனியூ மற்றும் கிரெட்டா கார்களின் டிசைனை மேம்படுத்துவதுடன், புதிதாக ஒரு சில வசதிகளையும் கூடுதலாக வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








