ஹூண்டாயை எதிர்த்து கோர்ட் படி ஏறி ஜெயித்த 75 வயது தாத்தா! புது காரும் ரூ1.4 லட்சம் பணமும் வழங்க உத்தரவு
நடுரோட்டில் புதிய கார் பற்றி எரிந்ததால் அந்த வாடிக்கையாளருக்கு புதிய காரையும் அதே நேரம் நஷ்ட ஈடாக ரூபாய் 1.4 லட்சத்தையும் வழங்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காரணம் வாருங்கள்.
75 வயது முதியவர் ஒருவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் தேதி கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள அத்வாதி மோட்டார்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற ஹூண்டாய் கார் ஷோரூமில் புதிதாக ஹுண்டாய் சான்ட்ரோ மேனுவல் கியர் ஸ்போர்ட்ஸ் காரை வாங்கி உள்ளார். இந்த காருக்காக அவர் ரூபாய் 6,25,633 ரூபாய் பணம் செலுத்தியுள்ளார்.

இந்த காரை வாங்கி அவர் பயன்படுத்தி வந்துள்ளார். இந்த கார் வாங்கப்பட்ட பிறகு இரண்டு முறை சர்வீஸ் செய்யப்பட்டுள்ளது. முதல் சர்வீஸ் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 4ம் தேதியும் இரண்டாவது சர்வீஸ் 2020 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதியும் சர்வீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் தேதி இவர் பனவரா பகுதியில் இருந்து அரிசிக்கரை பகுதிக்கு தனது காரில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
தனது காருக்கு ஒரு டிரைவர் வைத்து டிரைவர் மூலம் காரை ஓட்டி வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் நடுரோட்டில் வந்து கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதை கண்டு பதறிய முதியவரும் காரின் டிரைவரும் பதறியடித்து காரிலிருந்து வெளியேறினார். கார் எரிந்து கொண்டிருந்ததை பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அந்த காரில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க உதவி செய்தனர்.

அதிர்ஷ்டவசமாக இந்த காரில் பயணித்தவர்களுக்கும் வேறு யாருக்கும் எந்த விதமான ஆபத்தும் ஏற்படவில்லை. ஆனால் இந்த சம்பவம் அவருக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி விட்டது. இந்நிலையில் சம்பவம் நிகழ்ந்ததும் இது குறித்து அவர் தான் கார் வாங்கிய ஷோரூமிலும் தகவல் தெரிவித்து விட்டு வானவரா போலீஸ் ஸ்டேஷனிலும் புகார் அளித்து இந்த சம்பவம் குறித்து முதல் விசாரணை அறிக்கையை பதிவு செய்தார்.
மேலும் ஷோரூம் ஊழியர்களும் தகவல் தெரிவித்தார். மேலும் பானவரா போலீசிலும் புகார் செய்து எஃப்ஐஆர் பதிவு செய்தார். ஷோரூம் ஊழியர்கள் தீயில் எரிந்த காருக்கு மாற்று ஏற்பாடு செய்யவும், காரில் உள்ள பிரச்சினையை கண்டறிந்து அதற்கான தீர்வை வழங்குவதாகவும் உத்ததரவாதம் அளித்தனர்.

இதை நம்பிய 75 வயது முதியவர் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்க சிறிது காலம் காத்திருந்தார். ஆனால் இவருக்கு காரை மாற்றி தர ஷோரூம் நிர்வாகமும் அதன் உரிமையாளர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை உணர்ந்தார். இவரால் காரில் செல்ல வேண்டிய அவசியமும் இருந்தது.
இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான முதியவர் தன் கார் வாங்கிய ஷோரூமிற்கும் ஹுண்டாய் நிறுவனத்திற்கும் சட்ட ரீதியிலான நோட்டீஸ் ஒன்றை அனுப்பினார். அவர்கள் இந்த நோட்டீஸ்க்கு எதுவும் பதில் அளிக்காமல் புறக்கணித்துள்ளனர். இதையடுத்து அவர் கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கின் விசாரணையின் போது முதியவர் தரப்பிலிருந்து கார் தயாரிக்கும் போதே அதில் பிரச்சனை இருந்துள்ளது. அதுதான் தீ விபத்துக்கான முக்கியமான காரணமாக இருக்கிறது. கார் நடுரோட்டில் சென்று கொண்டிருந்தபோது தீப்பிடித்துள்ளது. இது காரில் தயாரிப்பு செய்யும்போது ஏற்பட்ட பிரச்சனைக்கான அறிகுறிதான் என வாதிட்டார்.
மேலும் அவர் தன் கார் வாங்கிய ஷோரூமிடம் குறிப்பிட்ட சம்பவம் குறித்து குறிப்பிட்டபோது அவர்கள் மாற்று வாகனம் தருவதாக உறுதி அளித்ததாகவும், அதை அவர்கள் நிறைவேற்றவில்லை என்றும், இந்த சம்பவத்தால் அவர் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் அவருக்கு பொருளாதார பிரச்சினைகளும் இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் இந்த சம்பவத்திற்கு கார் தயாரிக்கும் போது ஏற்பட்ட பிரச்சினை தான் காரணம் எனவும். இதனால் தான் கார் தீபிடித்து எரிந்தது எனவும், இந்த சம்பவத்திற்கு கார் தயாரிப்பாளரும் ஷோரூம் உரிமையாளரும் தான் பொறுப்பு எனவும், அவர்கள் இது வாடிக்கையாளர் பிரச்சினையால்தான் ஏற்பட்ட விபத்து என்பதை நிரூபிக்க தவறிவிட்டதாகவும் குறிப்பிட்டது.
மேலும் இந்த நீதிமன்றம் வழங்கிய உத்தரவில் ஹுண்டாய் நிறுவனம் மற்றும் அதன் ஷோரூம் ஊழியர் ஆகியோர் சேர்ந்து முதியவருக்கு புதிய சான்ட்ரோ காரை வழங்க வேண்டும் என்றும், அல்லது புதிய கார் மதிப்பிற்கு சமமான மதிப்பில் வேறு ஒரு காரை வழங்க வேண்டும் என்றும், வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக ரூபாய் 20000 வழங்க வேண்டும் என்றும்,
மேலும் அவருக்கு ஏற்பட்ட உடல் பிரச்சினை காரணமாக ரூபாய் 20000 வழங்க வேண்டும் என்றும், தீ விபத்தில் சிக்கிய காரை சரியாக சர்வீஸ் செய்யாததால் ரூபாய் ஒரு லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் மொத்தம் புதிய காருடன் சேர்த்து 1.40 லட்சம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் கார்களை விற்பனைக்கு கொண்டு வரும் முன் அதை அனைத்து விதமான சோதனைகளையும் செய்து எந்தவித தயாரிப்பு பிரச்சனையும் இல்லை என்பதை உறுதி செய்த பின் அதை விற்பனைக்கு கொண்டு வர வேண்டும். குறிப்பிட்ட சம்பவத்தில் யாருக்கும் உயிரிழப்போ, காயமோ ஏற்படவில்லை என்பதால், எந்த பிரச்சனையும் இல்லை. தவறுதலாக ஏற்பட்டிருந்தால் அதற்கு ஈடு கட்ட எதுவுமே இணையாக இருக்காது.


Click it and Unblock the Notifications









