ஊழியரை தாக்கி முட்டி போட வைத்து அவமானப்படுத்திய கொடுமை.. ரிசார்ட்டில் பதுங்கிய ஹூண்டாய் டீலர்..
ஹூண்டாய் ஷோரூமில், ஊழியரை தாக்கி தரையில் முட்டி போட வைத்து அவமானப்படுத்திய கொடுமையான சம்பவம் நடைபெற்றுள்ளது.
ஹூண்டாய் ஷோரூமில், ஊழியரை தாக்கி தரையில் முட்டி போட வைத்து அவமானப்படுத்திய கொடுமையான சம்பவம் நடைபெற்றுள்ளது. சமூக வலை தளங்களில் அந்த புகைப்படம் வைரலாக பரவியதாலும், மனித உரிமை ஆர்வலர்களின் முயற்சியாலும், ஹூண்டாய் ஷோரூம் உரிமையாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதுதொடர்பான விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தி நகரில் உள்ள கணேஷ்குரி பகுதியில் முகேஷ் ஹூண்டாய் ஷோரூம் செயல்பட்டு வருகிறது. ரிஷப் ஹிமாட்சிங்கா என்பவர், முகேஷ் ஹூண்டாய் கார் ஷோரூமை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் ஷோரூமில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

அப்போது ஊழியர்கள் அனைவரும் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் திளைத்து கொண்டிருந்தனர். ஆனால் ஒரு ஊழியர் மட்டும் தரையில் முட்டி போட வைக்கப்பட்டிருந்தார். அவர் வலி தாங்காமல் தனது காதுகளை பிடித்திருந்தார். பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இந்த படம் வைரலாக பரவியது.

இதர ஊழியர்களின் முன்னால், தரையில் முட்டி போட வைக்கப்பட்டு அவமானத்திற்கு உள்ளாக்கப்பட்டவரின் பெயர் கமல் தாஸ். முகேஷ் ஹுண்டாய் ஷோரூமில் பணியாற்றி வரும் ஒரு ஊழியர்தான் அவர். ஸ்டாக் ரிஜிஸ்டரை கமல் தாஸ் சரியாக பராமரிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த முகேஷ் ஹூண்டாய் ஷோரூமின் உரிமையாளர் ரிஷப் ஹிமாட்சிங்கா, ஊழியர் கமல் தாஸின் சட்டையை பிடித்து இழுத்து சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. அத்துடன் இதர ஊழியர்களின் முன்பாக கமல் தாஸை முட்டி போட வைத்து அவமானப்படுத்தியுள்ளார்.

இதர ஊழியர்கள் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த நேரத்தில், தன்னை தாக்கி முட்டி போட வைத்த சம்பவத்தால், கமல் தாஸ் மன உளைச்சலுக்கு ஆளானார். இதுகுறித்த புகாரின் பேரில், உரிமையாளர் ரிஷப் ஹிமாட்சிங்காவை போலீசார் தற்போது அதிரடியாக கைது செய்துள்ளனர்.
அத்துடன் ரிஷப் ஹிமாட்சிங்காவை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதன்பின் அவர் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். ஊழியரை அவமானப்படுத்திய ரிஷப் ஹிமாட்சிங்காவின் சார்பில், அவரது இளைய சகோதரர் நிதின் ஹிமாட்சிங்கா இந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்டு கொண்டுள்ளார்.

அத்துடன் பாதிக்கப்பட்ட ஊழியருக்கு சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு வழங்கப்படும் எனவும் நிதின் ஹிமாட்சிங்கா அறிவித்துள்ளார். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது எனவும் அவர் உறுதிபட கூறியுள்ளார்.

ஷோரூம் உரிமையாளர் ரிஷப் ஹிமாட்சிங்கா, ஊழியர் கமல் தாஸை தாக்கி அவமானப்படுத்திய சம்பவம் கடந்த 5ம் தேதி நடைபெற்றுள்ளது. ஆனால் போலீசார் எப்ஐஆர் பதிவு செய்தவுடன், ரிஷப் ஹிமாட்சிங்கா தலைமறைவாகி விட்டார். தற்போதுதான் அவர் போலீஸ் பிடியில் சிக்கியிருக்கிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஊழியர் கமல் தாஸ் மட்டும் புகார் அளிக்கவில்லை. அஸ்ஸாம் மாநில ஆட்டோமொபைல் ஊழியர்கள் சங்கம் போன்ற அமைப்புகளும் வரிசையாக புகார் அளிக்க தொடங்கின. இதன் காரணமாகதான் ஷோரூம் உரிமையாளர் ரிஷப் ஹிமாட்சிங்கா கைதாகியிருக்கிறார்.

ஊழியர்களுடன் சேர்த்து மனித உரிமை ஆர்வலர்களும் தனக்கு எதிராக போர்க்கொடி தூக்குவதை அறிந்து கொண்ட ஷோரூம் உரிமையாளர் ரிஷப் ஹிமாட்சிங்கா, அஸ்ஸாம் மாநிலம் சோனாப்பூர் என்ற பகுதியில் உள்ள ரிஷார்ட்டில் சென்று மறைந்து கொண்டார்.

ஆனால் கூடுதல் துணை கமிஷனர் அமிதாப் பசுமட்டாரி தலைமையிலான போலீசார், தீவிர விசாரணை நடத்தி, ரிஷப் ஹிமாட்சிங்காவை கைது செய்திருக்கின்றனர். போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்த சமயத்தில், ரிஷப் ஹிமாட்சிங்கா கூலாக ப்ரேக்பாஸ்ட் சாப்பிட்டு கொண்டிருந்துள்ளார்.
Source:Rushlane
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications








