அமெரிக்க கார் நிறுவனத்தாலேயே முடியல... புனேவில் தொழிற்சாலையை வாங்கும் ஹூண்டாய் மோட்டார்!!
மஹாராஷ்டிராவில் புனேவிற்கு அருகே அமைந்துள்ள ஜெனரல் மோட்டார்ஸின் தொழிற்சாலையை கைப்பற்றுவதில் பிரபல கார் தயாரிப்பு நிறுவனம் ஒன்று முனைப்புடன் உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. எந்த முன்னணி நிறுவனம் அது? இந்த கைப்பற்றுதலின் மூலமாக எந்த அளவிற்கு அந்த நிறுவனம் வளர்ச்சியை காணவுள்ளது என்பது குறித்த விபரங்களை இனி பார்க்கலாம்.
2020ஆம் ஆண்டை யாரும் அவ்வளவு எளிதாக மறந்து இருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். ஏனெனில் உலகையே தலைக்கீழாக திருப்பி போட்ட அந்த ஆண்டில் பல்வேறு நாடுகள் பொருளாதார சரிவால் பெரும் பிரச்சனைகளை சந்தித்தன. இதற்கு முக்கிய காரணம், வைரஸ் பரவலினால் பெரும்பாலான தனியார் நிறுவனங்களால் தொடர்ந்து வணிகத்தில் செயல்படாமல் போனது ஆகும். ஆட்டோமொபைல் துறையை பொறுத்தவரையில், ஒரு முன்னணி நிறுவனம் தொழிற்சாலையில் உற்பத்தி பணிகளை நிறுத்தி கொண்டது.

அந்த நிறுவனம் வேறு எதுவும் கிடையாது, உலகளவில் பிரபலமான ஜெனரல் மோட்டார்ஸ் ஆகும். பல்வேறு உலக நாடுகளில் வாகனங்கள் உற்பத்தி & விற்பனையில் கொடிக்கட்டி பறக்க முடிந்த இந்த நிறுவனத்தால் ஏனோ நமது இந்தியாவில் வலுவாக காலூன்ற முடியவில்லை. இந்தியாவை விட்டு நடையை கட்டுவதற்கு முன், வணிக ரீதியாக சில வருடங்கள் போராடி வந்த ஜெனரல் மோட்டார்ஸுக்கு 2020இல் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பரவல் மிக பெரும் தலைவலியாக அமைந்துப்போனது.
இதன் எதிரொலியாக புனேவிற்கு அருகே தாலேகன் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையில் வாகன உற்பத்தி பணிகளை ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தால் மேற்கொள்ள முடியாமல், ஒரு கட்டத்திற்கு மேல் 2020ஆம் ஆண்டில் தொழிற்சாலையை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த ஜெனரல் மோட்டார்ஸின் இந்த தாலேகன் தொழிற்சாலையை ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் வாங்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

தொழிற்சாலையை கைப்பற்றுவதற்கான ஏலத்தில் பங்கேற்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளதாக ஹூண்டாய் அறிவித்துள்ளது. இந்த ஏல ஒப்பந்தத்தில் தொழிற்சாலை அமைந்துள்ள நிலம், கட்டிடங்கள் மற்றும் அவற்றுள் உள்ள மெஷின் & கருவிகள் உள்ளிட்டவை அடங்குகின்றன. இதுகுறித்து ஹூண்டாய் சார்பில் அறிக்கை ஒன்றும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது.
அந்த அறிக்கையில் "முன்மொழியப்பட்ட கையகப்படுத்தல் ஆனது 'உறுதியான சொத்து கொள்முதல் ஒப்பந்தத்தில்' கையெழுத்திடுதல் மற்றும் கையகப்படுத்தல் தொடர்பான நிபந்தனைகள் மற்றும் ஒழுங்குமுறை ஒப்புதல்களை பெறுதல் ஆகியவற்றிற்கு உட்பட்டது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெனரல் மோட்டார்ஸ் அமெரிக்காவை சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனம் என்பது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம்.

சீனாவில் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமாக விளங்கும் கிரேட் வால் மோட்டார்ஸ் உடன் இணைந்து 2020 ஜனவரியில் தாலேகன் பகுதியில் தொழிற்சாலையை ஜெனரல் மோட்டார்ஸ் வாங்கியது. இந்த தொழிற்சாலை ஆனது ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே ஜெனரல் மோட்டார்ஸால் வாங்கப்பட்டது. அதன்பின் 2 முறை நீட்டிக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டில் இந்த ஒப்பந்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அதனை தொடர்ந்து தொழிற்சாலையை விற்கும் முடிவிலும், கிரேட் வால் மோட்டார்ஸ் - ஜெனரல் மோட்டார்ஸ் கூட்டணி இறங்கியது.
தற்போது இதற்கான ஏலத்தில் பங்கெடுத்து கொள்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளதாக ஹூண்டாய் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஜெனரல் மோட்டார்ஸின் இந்த தாலேகன் தொழிற்சாலையை வாங்கும் நிறுவனங்களின் பெயரில் மஹிந்திரா & மஹிந்திராவின் பெயரும் அடிப்பட்டது. இந்த தொழிற்சாலையை ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் தனது எதிர்கால எலக்ட்ரிக் வாகன உற்பத்திக்கு பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









