வண்டியை முந்தீட்டு போனதுக்குலாம் தண்டனையா! உயர் அதிகாரிக்கு வாழ்நாளில் மறக்க முடியாத பாடத்தை கற்பித்த ஜூனியர்!
அலுவலகங்களில் ஒரு சில சமயங்களில் உயர் அதிகாரிகளால் ஊழியர்கள் மோசமான முறையில் நடத்தப்படுகின்றனர். தனியார் அலுவலகங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் என எந்த வகையான அலுவலகங்களும் இதற்கு விதிவிலக்கு கிடையாது. சில சமயங்களில் ராணுவம், கப்பல் படை மற்றும் விமானப்படை ஆகிய இடங்களிலும் கூட, மிக கடுமையான கட்டுப்பாடுகள் என்ற பெயரில், வீரர்கள் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இது உண்மை என்பதை நிரூபிக்கும் வகையிலான சம்பவம் ஒன்று, சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. இவ்வளவு ஆண்டுகள் கடந்த பின்னர், தற்போது அந்த சம்பவத்திற்கு நீதி கிடைத்துள்ளது.
நாங்கள் இங்கே பேசி கொண்டுள்ள சம்பவம், இந்திய விமானப்படையில் (Indian Air Force) நிகழ்ந்தது ஆகும். கடந்த 2011ம் ஆண்டு ஜனவரி 18ம் தேதி, ஏர்மேன் (Airman) எஸ்.பி.பாண்டேவிற்கு மோசமான நாளாக அமைந்தது. அன்றைய தினம் தனது உயர் அதிகாரியின் வாகனத்தை ஓவர்டேக் (Overtake) செய்து சென்ற காரணத்தால், எஸ்.பி.பாண்டேவிற்கு தண்டனை அதிரடியாக வழங்கப்பட்டது.

சம்பவத்தன்று எஸ்.பி.பாண்டே பைக்கில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது ரயில்வே க்ராஸிங் ஒன்றில், தனது உயர் அதிகாரியின் வாகனத்தை ஓவர்டேக் செய்து சென்று, அந்த வாகனத்திற்கு முன்னால் தன் பைக்கை நிறுத்தினார். எஸ்.பி.பாண்டே வேலையை முடித்து விட்டு திரும்பும் வழியில், இச்சம்பவம் நடைபெற்றது.
இதில் என்ன தவறு இருக்கிறது? என நீங்கள் நினைக்கலாம். ஆனால் எஸ்.பி.பாண்டேவின் உயர் அதிகாரி அப்படி நினைக்கவில்லை. உயர் அதிகாரியான தனது வாகனத்தை ஓவர்டேக் செய்ததன் மூலமாக, இந்திய விமானப்படையின் ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடுகளை எஸ்.பி.பாண்டே மீறி விட்டதாக அவர் கருதினார்.

எனவே எஸ்.பி.பாண்டேவிற்கு அவர் தண்டனை வழங்கினார். இதன் ஒரு பகுதியாக எஸ்.பி.பாண்டேவின் பைக்கை, உயர் அதிகாரி பறிமுதல் செய்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் எஸ்.பி.பாண்டே மீது துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. இதன் கீழ், அவர் ஒரு நாள் வேலையில் இருந்து விலக்கி வைக்கப்பட்டார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான எஸ்.பி.பாண்டே, பாதுகாப்பு படைகளுக்கான தீர்ப்பாயத்தில் (Armed Forces Tribunal) முறையிட்டார். அங்கு அவருக்கு நீதி கிடைத்தது. பாதுகாப்பு படைகளுக்கான தீர்ப்பாயம், எஸ்.பி.பாண்டே மீது உயர் அதிகாரி எடுத்த ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டது. ஆனால் எஸ்.பி.பாண்டேவிற்கு எந்தவிதமான இழப்பீடும் கிடைக்கவில்லை.
எனவே இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தை (Supreme Court) எஸ்.பி.பாண்டே நாடினார். அங்கு நீதிபதிகள் ஆதாரங்கள் மற்றும் உண்மைகளை முழுமையாக விசாரித்தனர். இறுதியில் தற்போது எஸ்.பி.பாண்டேவிற்கு சாதகமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அத்துடன் அவருக்கு இழப்பீடு வழங்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர் அதிகாரியின் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக, தனது கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்பட்டு விட்டதாக எஸ்.பி.பாண்டே உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். எனவே அவருக்கு மத்திய அரசு 1 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தற்போது அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு வரவேற்கப்பட வேண்டிய ஒன்று என்பதுதான் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. பாதுகாப்பு படைகளில் கட்டுப்பாடுகள் மற்றும் உயர் அதிகாரிகளின் உத்தரவுகளுக்கு கீழ்படிதல் போன்றவை எல்லாம் மிகவும் அவசியமான ஒன்றுதான் என்பதில் துளியும் மாற்று கருத்தில்லை.
ஆனால் வாகனத்தை ஓவர்டேக் செய்தது போன்ற சிறிய சிறிய காரணங்களுக்காக எல்லாம் மிக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை என்பது, அவசியம் இல்லாத ஒன்றாகவே தோன்றுகிறது. இதன் காரணமாகவே இந்தியாவின் உச்ச நீதிமன்றம் தற்போது எஸ்.பி.பாண்டேவிற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளதாக நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








