இந்த கார்கள் மாருதி பிராண்டில் வந்திருந்தால், தலையெழுத்தே மாறியிருக்கும்...!!
இந்தியாவில் பல கார் மாடல்கள் விற்பனையில் தோல்வியுற்று தடுமாறி வருகின்றன. விற்பனையில் தோற்றாலும், அந்த கார்கள் தரத்திலும், பாதுகாப்பு வசதிகளிலும் மிகச்சிறந்த மாடல்களாக இருக்கின்றன. அந்தந்த கார் தயாரிப்பு நிறுவனத்தின் விற்பனைக் கொள்கைகளும், விற்பனைக்கு பிந்தைய சேவைகளும் அந்த கார்களை தோல்வியுற்ற மாடல்களாக பின்தங்க செய்திருக்கின்றன.
ஆனால், அதே கார்கள் மாருதி பிராண்டில் விற்பனை செய்யப்பட்டிருந்தால், அந்த கார்களின் தலையெழுத்தும் மாறியிருக்கும். அவை, மிகவும் வெற்றிகரமான மாடல்களாக வலம் வந்திருக்கும். அவ்வாறு, மாருதி பிராண்டில் விற்பனை செய்யப்பட்டிருந்தால், பெரும் வெற்றியை பெற்றிருக்கும்.
சிறப்பான டீலர் நெட்வொர்க், உதிரிபாகங்கள் விலை குறைவு, சிறந்த வாடிக்கையாளர் சேவை, சரியான விலை என மாருதியின் வர்த்தக கொள்கைகள், இந்த கார்களின் விற்பனையை பன்மடங்கு உச்சத்தில் கொண்டு சேர்ந்திருக்கும். இன்று இருந்த இடம் தெரியாமல், முடங்கி கிடக்கும், 10 லட்சம் வரையிலான பட்ஜெட்டில் சில சிறந்த கார் மாடல்களின் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

ஃபோக்ஸ்வேகன் போலோ
கட்டுமானத் தரத்திலும், பாதுகாப்பு அம்சங்களிலும் சிறந்த ஹேட்ச்பேக் கார். ஒரு ஹேட்ச்பேக் கார் டிசைன் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக கூற வேண்டிய மாடல். டிசைனில் மட்டுமல்ல, செயல்திறன் மிக்க எஞ்சின் மற்றும் வசதிகளிலும் குறைவில்லாத மாடல். அனைத்து வேரியண்ட்டுகளிலும் டியூவல் ஏர்பேக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கார் மாருதி நிறுவனத்தால் வர்த்தகம் செய்யப்பட்டிருந்தால், நிச்சயம் விற்பனையிலும் வெற்றிகரமான மாடலாக மாறியிருக்கும்.

நிசான் மைக்ரா
இந்தியாவில் இருக்கும் சிறந்த ஹேட்ச்பேக் கார் மாடல்களில் ஒன்று. இதன் விலை குறைவான ஆக்டிவ் மாடலில் கூட முன்புறத்திற்கான இரண்டு ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பெட்ரோல், டீசல் எஞ்சின், கச்சிதமான வடிவமைப்பு போன்றவை கொண்ட சிறந்த கார் மாடல். இந்த கார் மாருதி பிராண்டில் வந்திருந்தால், நிச்சயம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும்.

ஃபியட் லீனியா
இந்தியாவின் சிறந்த மிட்சைஸ் செடான் கார். கட்டுமானத் தரத்திலும், வடிவத்திலும் சிறப்பான மாடல். ஆனால், போதிய சர்வீஸ் நெட்வொர்க் இல்லாததால், இந்த காரின் விற்பனை பின்தங்கியிருக்கிறது. இந்த கார் மாருதி பிராண்டில் வந்திருந்தால், விற்பனையில் சாதித்திருக்கும். ஆனால், நீண்ட காலமாக மார்க்கெட்டில் இருந்தும் இந்த காரை சரியான தளத்திற்கு கொண்டு செல்ல முடியாமல் ஃபியட் தவித்து வருகிறது.

டொயோட்டா லிவா
ஹேட்ச்பேக் கார் செக்மென்ட்டில் சிறந்த மாடல்களில் ஒன்று. இடவசதியிலும், பாதுகாப்பு வசதிகளிலும் நிறைவான மாடல். இதன் பின்புற டிசைன் குறையாக சொல்லப்பட்டாலும், இந்த காரே மாருதி பிராண்டில் வந்திருந்தால், மிகச்சிறப்பான வர்த்தகத்தை பதிவு செய்திருக்கும்.

டாடா ஸெஸ்ட்
அடக்கமான வகை செடான் கார் மார்க்கெட்டில், மிகச்சிறந்த மாடல் டாடா ஸெஸ்ட். அனைத்து விதத்திலும் சிறப்பான மாடலாக இருந்தாலும், டாடா பிராண்டு கார்கள் மீதான தரம் தொடர்பான விஷயங்கள் மற்றும் விற்பனை கொள்கைகளால் பின்தங்கி நிற்கிறது. மாருதி பிராண்டில் சந்தைப்படுத்தப்பட்டிருந்தால், நிச்சயம் பெரும் வெற்றியை பெற்றிருக்க வாய்ப்புண்டு. டாடா போல்ட் காரும் இந்த நிலைமையில்தான் இருக்கிறது.

ஸ்கோடா ரேபிட்
மிட்சைஸ் மார்க்கெட்டில் மிகச்சிறந்த மாடல்களில் ஒன்று ஸ்கோடா ரேபிட். கட்டுமானத் தரம், வசதிகள், டிசைன் என சாமுத்ரிகா லட்சணம் பொருந்திய மிட்சைஸ் செடான் கார். ஆனால், ஸ்கோடா பிராண்டு மீதான அச்சமான உணர்வு வாடிக்கையாளர்களை வேறு பக்கம் திசை திருப்பி விட்டு வருகிறது. இந்த கார் மட்டும் மாருதி பிராண்டில் வந்திருந்தால் மிகப்பெரிய வெற்றியையும், நீண்ட நாள் வர்த்தக பங்களிப்பையும் வழங்கியிருக்கும்.

ஃபியட் புன்ட்டோ
பிரிமியம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் மிகச்சிறப்பான மாடல். செயல்திறன் மிக்க எஞ்சின், கட்டுமானத் தரம், டிசைன் என அனைத்திலும் நிறைவை தரும் கார் மாடல். ஆனால், ஃபியட் நிறுவனத்தின் டீலர் நெட்வொர்க் குறைவாக இருப்பதும், இந்த காரை பிரபலப்படுத்துவதற்கு ஃபியட் போதிய முயற்சிகள் எடுக்காததும் இந்த காரை பின்தங்க செய்துவிட்டன. இதுவே, மாருதி பிராண்டில் வந்திருந்தால், நிச்சயம் ஒரு பெரிய ரவுண்ட் வந்திருக்கும்.

ஹோண்டா பிரியோ
அதிக இடவசதி, சிறந்த பெட்ரோல் எஞ்சின் கொண்ட மாடல். ஆனால், இதன் பின்புற அமைப்பு பலரை கவரவில்லை. அதேநேரத்தில், மாருதி பிராண்டில் களமிறக்கப்பட்டிருந்தால், நிச்சயம் நல்ல விற்பனையை பதிவு செய்திருக்கும். அதிகளவிலான பிரியோ கார்களை இந்திய சாலைகளில் கண்டிருக்க முடியும்.

ஃபோர்டு ஃபியஸ்ட்டா
மாடர்ன் டிசைன், சிறப்பான இன்டிரியர் டிசைன், வசதிகளை பெற்றிருந்தும் மார்க்கெட்டில் எடுபடவில்லை. ஆனால், இந்த காரே மாருதி பிராண்டில் வந்திருந்தால், நிச்சயம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும்.

இப்படி பார்த்தா...?
சரி, மாருதியின் விற்பனை பட்டியலில் உள்ள கார் மாடல்கள், வேறு பிராண்டில் வந்தால், அதன் நிலைமை என்னவாயிருக்கும் என்பதை மற்றொரு செய்தித் தொகுப்பில் காணலாம்.


Click it and Unblock the Notifications








