லட்சங்களை செலவு செய்து வீடு வாங்குவதற்கு இது பெஸ்ட் - உள்ளே இல்லாத விஷயங்களே கிடையாது!!
கேரவன்களை பயன்படுத்துவது மனிதர்களாகிய நமக்கு ஒன்றும் புதியது அல்ல. ஒரு காலத்தில் சினிமா நட்சத்திரங்களும், பணக்காரர்களும் மட்டுமே கேரவன்களை பயன்படுத்தினர். ஆனால், இன்று, சில ஆயிர ரூபாய்களை செலழித்தாலே கேரவன் வாகனங்கள் வாடகைக்கு கிடைக்கின்றன. ஏனெனில், அந்த அளவிற்கு சமீப காலங்களில் பல்வேறு வாகனங்கள் கேரவன்களாக மாற்றப்பட்டுள்ளன. ஆனால், அவை அனைத்தையும் தூக்கி சாப்பிடும் வகையில் இங்கு ஒரு கேரவன் 5-ஸ்டார் ரூம்களுக்கு இணையாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கேரவன் வாகனம் குறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
கேரவன் என்றால் என்னவென்று உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன். படுக்கையறை, குளியலறை, சமையலறை என அனைத்தும் ஒரே வாகனத்திற்குள் இருப்பதன் பெயர் தான் கேரவன். சிம்பிளாக சொல்ல வேண்டுமென்றால், நகரும் வீடு. இதனாலேயே மற்ற வழக்கமான வாகனங்களில் இருந்து கேரவன்கள் வேறுப்பட்டு தெரிகின்றன.

தொழிற்நுட்பங்கள் வளர, வளர கேரவன்களும் பரிணாம வளர்ச்சியை அடைந்து வருகின்றன. இதன் மூலமாக, சிறிய அளவிலான வேன்களில் கூட நன்கு சவுகரியமான கேரவன் செட்-அப்பை கொண்டுவர முடிகிறது. இந்த வகையில், 5-ஸ்டார் ஓட்டல் ரூம் போன்று அலங்கரிக்கப்பட்ட கேரவன் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நெட்டிசன்கள் மத்தியில் கவனத்தை பெற்றுள்ள இந்த வீடியோவில் இந்த கேரவன் வாகனம் வெளியில் இருந்து பார்ப்பதற்கு எளிமையானதாக உள்ளது.
ஆனால், கதவை திறந்து உள்ளே சென்றால், வேறொரு உலகத்திற்குள் வந்தது போன்று ஓர் உணர்வை தருகிறது. ஆம்புலன்ஸ் வேன் போன்ற சிறிய அளவிலான வேனில் உருவாக்கப்பட்டுள்ளதால், இந்த கேரவனுக்குள் அனைத்து வசதிகளும் நெருக்கமாக உள்ளதை காணலாம். அதாவது, அனைத்து அறைகளும் அடுத்தடுத்து அருகருகே அமைந்துள்ளன. ஆனால், நேர்த்தியான வடிவமைப்பால், இந்த கேரவனின் உட்புறம் பார்ப்பதற்கு அசத்தலாக உள்ளது.

இந்த கேரவன் வாகனத்திற்குள் 3 படுக்கை வசதிகள், ஒரு குளியலறை மற்றும் குளிர்சாதன பெட்டியும் உள்ளது. படுக்கை அறைகளுள் ஒன்று வாகனத்தின் மேற்கூரைக்கு அடியில் வழங்கப்பட்டு இருப்பது கவர்ச்சிக்கரமானதாக உள்ளது. ஏனெனில், பொதுவாகவே கேரவன்களில் படுக்கை வசதி தான் முக்கியமானது ஆகும். இந்த படுக்கை அறையில் இருந்து வெளியே வந்தால், ஓர் சிறிய மொட்டை மாடி போன்று வாகனத்தின் பின்பக்க ரூஃப் உள்ளது. இந்த இடத்தில் தாராளமாக இருவர் அமரலாம்.
இதற்காகவே அந்த இடத்தில் மேட் வழங்கப்பட்டுள்ளது. பகல் நேரங்களில் சன்பாத் எடுப்பதற்கு இந்த பகுதி ஏற்றதாக இருக்கும். வாகனத்திற்குள் இருந்து மேற்கூரைக்கு செல்வதற்காக படிக்கட்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த படிக்கட்டு மிகவும் காம்பெக்ட்டாக இருப்பதை வீடியோவில் காணலாம். இந்த படிக்கட்டின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், படிக்கட்டிற்காக இடத்தை வீணடிக்க கூடாது என்பதற்காக, அந்த இடத்திலும் பொருட்களை வைப்பதற்கான பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளன.

வாகனத்திற்குள் அமர்வதற்கு 4 இருக்கை வசதிகள் உள்ளன. ஆனால், இந்த கேரவன் ஆனது 3 பேருக்கு மட்டுமே ஏற்றதாக இருக்கும். அதாவது, தொலைத்தூர பயணங்களுக்கு இந்த வாகனத்தை கொண்டு சென்றால், 3 பேர் மட்டுமே சவுகரியமாக நீண்ட நாட்களுக்கு வசிக்க முடியும். இந்த கேரவன் போர்ச்சுகல் நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அளவில் பெரியதான பொருட்களை கூட எளியதாக உருவாக்கிவிடலாம். ஆனால், இவ்வாறு காம்பெக்ட்டான விஷயங்களை உருவாக்குவதுதான் சிரமமாகும். ஆனால், இந்த கேரவனை வடிவமைத்தவர்கள் அதனை எளிமையாக கையாண்டுள்ளனர் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த கேரவனில் எந்தவொரு பகுதியையும் இவர்கள் வீணடிக்கவில்லை.


Click it and Unblock the Notifications









