இந்தியாவில் விற்பனையாகும் எலெக்ட்ரிக் வாகனங்களில் 40 சதவீதம் தமிழகத்தில் தயாரிக்கப்பட்டவை.. அவரே சொல்லிட்டாரா!
உலக நாடுகள் அனைத்தும் மின்சார வாகனங்களை, பெட்ரோல்-டீசல் வாகனங்களின் பயன்பாட்டில் இருந்து மீட்டெடுக்க வந்த தீர்க்கதரிசியாக பார்த்துக் கொண்டிருக்கின்றன. மேலும், எதிர்காலத்தில் ஐசிஇ எஞ்ஜின் கொண்ட வாகனங்களே இல்லாத உலகத்தை உருவாக்கும் பொருட்டும் அவை செயல்படத் தொடங்கி இருக்கின்றன. இந்தியாவிலும் கூட இந்த மாதிரியான முயற்சிகள் மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த மாதிரியான சூழலிலேயே பசுமை வாகன இயக்கத்தை ஊக்குவிக்க இந்தியா மேற்கொண்டு வரும் முன்முயற்சியில் தமிழ்நாடு மிகப் பெரிய மற்றும் முக்கிய பங்களிப்பை வழங்கிக் கொண்டிருப்பது தெரிய வந்திருக்கின்றது. இதை திமுக-வின் முன்னாள் ஐடி விங் செயலாளரும், இப்போதைய தொழில் துறை அமைச்சருமான டிஆர்பி ராஜாவும் உறுதி செய்திருக்கின்றார்.

அவர் சமீபத்தில் 'எக்ஸ்' (டுவிட்டர்) சமூக வலைதள பக்கத்தில் ஓர் பதிவை போட்டிருந்தார். அதில், நாட்டில் விற்பனையாகும் ஒட்டுமொத்த மின்சார வாகனங்களில் 40 சதவீதம் நம்முடைய தமிழகத்தில் தயாரிக்கப்பட்டவை தெரிவித்து உள்ளார். தமிழகத்தை மிகப் பெரிய வாகன உற்பத்தி மையமாக மாற்றும் நோக்கில் நாம் மேற்கொண்ட ஒவ்வொரு முயற்சிக்கும் கிடைத்த பலன் என்றும் அவர் கூறி உள்ளார்.
மின் வாகன தயாரிப்பாளர்கள் விரைந்து எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை தொடங்கவும், மேலும், உற்பத்தி அளவை அதிகரிக்கச் செய்வதையும் நாம் உறுதி செய்திருக்கின்றோம் என்றும் அவர் அந்த பதிவில் கூறி இருக்கின்றார். தொடர்ந்து, இந்த நிலை வெகு விரைவில் தமிழகத்தை உலகின் மிகப் பெரிய மின் வாகன உற்பத்தி மையமாக மாற்றும் எனவும் அவர் நம்பிக்கைத் தெரிவித்து இருக்கின்றார்.

இத்துடன், தமிழகத்தின் மின்வாகன தொழில்துறைக்கு மேலும் வலுவூட்டும் விதமாக வருகின்ற நவம்பர் 21 ஆம் தேதி அன்று சர்வதேச மின்வாகன மாநாட்டை நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே வரும் நாட்களில் மின் வாகன துறையில் தமிழகம் கோலோச்சி இருக்கும் என தெரிகின்றது.
தமிழகத்தில் டிவிஎஸ், ஓலா மற்றும் ஏத்தர் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் மின் வாகன உற்பத்தியை மேற்கொண்டு வருகின்றன. இவற்றில் ஓலா மற்றும் டிவிஎஸ் ஆகிய நிறுவனங்களின் மின்சார இருசக்கர வாகனங்களுக்கே இந்தியர்கள் மத்தியில் அமோகமான வரேவற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இவற்றிற்கு கிடைத்துக் கொண்டிருக்கும் அமோக வரேவற்பே நம்முடைய தமிழகத்தை மிகப் பெரிய மின் வாகன உற்பத்தி மையமாக மாற்றி இருக்கின்றது.

இந்த நிறுவனங்கள் மட்டுமில்லைங்க நம்முடைய தமிழகத்தை மையமாகக் கொண்டு இன்னும் பல நிறுவனங்கள் மின் வாகன உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. மேலும், தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் ராயல் என்பீல்டு கூட விரைவில் எலெக்ட்ரிக் பைக்குகளை உற்பத்தி செய்ய இருக்கின்றது.
ஆகையால், நிச்சயம் தமிழகம் இந்த விஷயத்தில் மிகப் பெரிய இந்திய மாநிலமாக உருவெடுக்கும் என்பது தெரிகின்றது. மாநிலத்தின் இந்த எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் விதமாக விரைவில் மிகப் பெரிய மின்வாகன மாநாட்டை தமிழக அரசு நடத்த இருக்கின்றது. தமிழகத்தின் ஆறு முக்கிய நகரங்களே மின்வாகன உற்பத்திக்கு மிகந்த நகரங்களாகக் காட்சியளிப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகியவையே அவை ஆகும். டிஆர்பி ராஜாவின் இந்த பதிவை நம்பலாமா வேண்டாமா என்கிற சந்தேகம் உங்களுக்கு எழும்பி இருக்கும். ஆனால், மத்திய அரசின் தளமான வாஹன் என்கிற தளம் வழங்கிய தரவுகளின் அடிப்படையிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டு இருக்கின்றது.
வாகனங்களுக்கான பிரத்யேக தளமே இந்த வாஹன் ஆகும். இந்த தளத்தில் உள்ள தரவுகளின்படி கடந்த செப்டம்பர் வரை நாட்டில் 10.44 லட்சம் மின்சார வாகனங்கள் விற்பனையாகி இருப்பதாகவும், அதில் 4.1 நம் தமிழகத்தில் தயாரிக்கப்பட்டவை என்பதும் தெரிய வந்திருக்கின்றது. இந்த 4.1 லட்சம் யூனிட்டுகளில் ஓலாவின் மின்சார இருசக்கர வாகனங்கள் மட்டுமே சுமார் 1.75லட்சம் யூனிட்டுகள் ஆகும். இதற்கு அடுத்தபடியாக டிவிஎஸ் 1.12லட்சம் யூனிட்டுகளையும், ஏத்தர் 77,764 யூனிட்டுகளையும் விற்றிருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு நாளுக்கு நாள் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. சொல்லப் போனால் இவற்றிற்குக் கிடைக்கும் வரவேற்பு இரட்டிப்பாகிக் கொண்டே இருக்கின்றது. இந்த நிலையிலேயே தமிழகம் மின்வாகன உற்பத்தியின் மிகப் பெரிய மையமாக உருவாகிக் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.


Click it and Unblock the Notifications









