சுதந்திர தினத்தின்போது கூட இப்படியெல்லாம் கார் ஓட்ட வேண்டுமா? நம் மக்களுக்கு இந்த விழிப்புணர்வு வர வேண்டும்!!
டிசி அவந்தி (DC Avanti), இந்தியாவில் உருவாக்கப்படும் சூப்பர் கார். இத்தகைய சூப்பர் கார் ஒன்று சமீபத்திய சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது, நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கி சேதமடைந்து உள்ளது. இந்த விபத்து குறித்தும், விபத்தில் சிக்கியுள்ள டிசி அவந்தி கார் குறித்தும் இனி விரிவாக பார்க்கலாம்.
நம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் எந்தவொரு நாட்டிலும் கொண்டாட்டங்கள் என்றாலே அசம்பாவிதங்களும் கூடவே நடக்கும். குறிப்பாக, புத்தாண்டு தினத்திற்கு அடுத்த நாளில் விபத்து குறித்த செய்திகளை அதிகளவில் பார்க்க முடியும். புத்தாண்டு அளவிற்கு இல்லையென்றாலும், சுதந்திர தின கொண்டாட்டங்களின் போதும் சில பல அசம்பாவிதங்கள் ஏற்படுவது வருத்தம் அளிக்கக்கூடிய ஒன்றாக உள்ளது.

இந்தியாவின் 77வது சுதந்திர தின விழா சமீபத்தில் நாடு முழுவதும் கொண்டாட்டப்பட்டது. பொதுவாகவே, சுதந்திர தினத்தின்போது வாகன ஓட்டிகள் பலர் தங்களது வாகனங்களில் தேசிய கொடிகளை ஏந்தியப்படி செல்வது வழக்கம். அவ்வாறு, டெல்லி-என்சிஆர் பகுதியில் நெடுஞ்சாலை ஒன்றில் சிலர் தங்களது வாகனங்களில், பெரிய அளவிலான தேசிய கொடிகளை பறக்க விட்டப்படி ஓர் சிறிய அணிவகுப்பு போன்று சென்றுள்ளனர்.
இந்த வாகன அணிவகுப்பில், விலையுயர்ந்த டிசி அவந்தி சூப்பர் ஸ்போர்ட்ஸ் கார் ஒன்றும் பங்கேற்றுள்ளது. நம் மக்களிடத்தில் உள்ள பிரச்சனையே, எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் அளவுக்கு அதிகமான சந்தோஷத்தை தேடுவதுதான். சுதந்திர தின அணிவகுப்பு எனும்போது, வாகனங்களில் அமைதியாக தேசிய கொடிகளை ஏந்தியப்படி செல்ல வேண்டும். ஆனால், டெல்லி-என்சிஆர் பகுதியில் நடந்த இந்த அணிவகுப்பில், டிசி அவந்தி கார் ஓட்டுனர் ஆக்ரோஷமாக காரை ஓட்ட முயற்சித்துள்ளார்.

நெடுஞ்சாலையில் குழுவாக இயங்கிய மற்ற வாகனங்களுக்கு இடையிடையே நுழைந்து டிசி அவந்தி கார் ஓட்டுனர் சாகசம் காட்ட முயற்சித்து உள்ளார். ஆனால் ஒரு கட்டத்தில் கார் முற்றிலுமாக கண்ட்ரோலை இழந்து, நெடுஞ்சாலையின் மையத்தில் இருந்த டிவைடரில் மோதியுள்ளது. இந்த மோதலினால் காரின் கண்ட்ரோலை ஓட்டுனர் முற்றிலுமாக இழந்துவிட்டார்.
டிவைடரில் மோதிய வேகத்தில், சாலையில் மறுப்பக்கத்திற்கு கார் தள்ளப்பட்டுள்ளது. அப்போது குறுக்கே கியா சொனெட் கார் ஒன்று வர, அதன் மீது மோதிய கண்ட்ரோலை இழந்த டிசி அவந்தி கார், பின்னர் சாலையின் ஓரத்திற்கு சென்று நின்றுள்ளது. இதுகுறித்து நமக்கு கிடைக்கப் பெற்றுள்ள வீடியோவில், டிசி அவந்தி கார் சம்பவத்தின்போது அதிக வேகத்தில் இயக்கப்பட்டு உள்ளதை காண முடிகிறது.

விபத்தில் டிசி அவந்தி ஸ்போர்ட்ஸ் கார் பலத்த சேதமடைந்துள்ளது. இந்த கார் மோதியதில், கியா சொனெட் காரின் பக்கவாட்டு பகுதியும் சேதமடைந்துள்ளது. நல்லவேளையாக, இந்த விபத்தில் எவரொருவருக்கும் காயம் ஏற்பட்டது போல் தகவல்கள் இல்லை. இத்தனைக்கும், மோதலுக்கு உள்ளான கியா சொனெட் காரின் சன்ரூஃப் வழியாக இருவர் வெளியே எட்டிப்பார்த்தப்படி சம்பவத்தின்போது பயணம் செய்துள்ளனர்.
நம் நாட்டில், கார் பயணத்தின்போது சன்ரூஃப் வழியாக எட்டிப்பார்க்கக் கூடாது என்கிற சட்டம் உள்ளது. இந்த சட்டம் ஏன் என்பதற்கான காரணத்தை மேற்கூறப்பட்ட சம்பவத்தின் மூலம் தெரிந்துக் கொள்ளலாம். டிசி அவந்தி கார் மோதிய வேகத்தில் கியா சொனெட் கார் கவிழ்ந்து இருந்தாலோ அல்லது சன்ரூஃப் வழியாக எட்டிப் பார்த்தவர்கள் மட்டும் வெளியே தூக்கி வீசப்பட்டு இருந்தாலோ அவர்களுக்கு என்ன ஆகியிருக்கும் என நினைத்தாலே பயமாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: உலகளவில் சாலை விபத்துகளில் இந்தியா ஏன் முன்னிலையில் உள்ளது என்பதற்கு இந்த சம்பவம் ஓர் சிறந்த உதாரணம் ஆகும். ஏனெனில், சுதந்திர தினத்தின் போது கூட இவ்வாறு ஆக்ரோஷமாக காரை ஓட்ட முயற்சிக்கின்றனர். இந்த ஒரு சம்பவத்தை வைத்து மட்டும் இவ்வாறு கூறவில்லை. தேடி பார்த்தீர்கள் என்றால், சுதந்திர அணிவகுப்பில் ஈடுப்பட்ட வாகனங்களின் விபத்துகளை இணையத்தில் நிறைய பார்க்க முடியும்.


Click it and Unblock the Notifications









