பல லட்ச ரூபாய் கொடுத்து பைக் வாங்குவது முக்கியமில்ல... மார்க்கெட்டுக்கு வரும் புதிய ஹெல்மெட்கள்!!
இந்திய பைக் வாரம் (India Bike Week) கண்காட்சி கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது புதிய பைக்குகளையும், அவற்றிற்கான ஆக்ஸஸரீகளையும் உலகிற்கு அறிமுகம் செய்துள்ளன. பிரபல டயர் உற்பத்தி நிறுவனமான ரேய்சே மோட்டோ (Reise Moto) தனது புதிய ஹெல்மெட்களை இந்திய பைக் வாரம் 2024 கண்காட்சியில் காட்சிப்படுத்தி உள்ளது. அதிவேகமாக இயங்கக்கூடிய மோட்டார்சைக்கிள்களுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ள இந்த ஹெல்மெட்களை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
பைக் மற்றும் அதனை தொடர்புக்கொண்ட பொருட்களின் கண்டுப்பிடிப்பை ஊக்கப்படுத்தும் விதமாகவும், விற்பனையை மேம்படுத்தும் முயற்சியாகவும் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதத்தில் இந்தியன் பைக் வாரம் கண்காட்சி கோவாவில் நடத்தப்படுகிறது. வழக்கம்போல், இந்த 2024ஆம் ஆண்டிற்கான இந்தியன் பைக் வார கண்காட்சியிலும் நமது டிரைவ்ஸ்பார்க் குழு கலந்துக் கொண்டுள்ளது.

பிரீமியம் தரத்திலான டயர்களை உற்பத்தி செய்வதில் நிபுணத்துவம் வாய்ந்த ரேய்சே மோட்டோ நிறுவனம் அதன் புதிய ஏசர்பிக் (Acerbis) மற்றும் நெக்ஸ் (Nexx) என்கிற பெயரில் புதிய பைக் ஹெல்மெட்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஹெல்மெட்களை ரேய்சே மோட்டோ நிறுவனம் உருவாக்கவில்லை. இதில், ஏசர்பிஸ் ஹெல்மெட்களை, மோட்டோஸ்போர்ட்ஸ் மற்றும் ஆஃப்-ரோடு கியர் பொருட்களை உருவாக்குவதில் 50 வருடங்களுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த ஏசர்பிஸ் நிறுவனம் உருவாக்கியது ஆகும்.
அதேபோல், நெக்ஸ் ஹெல்மெட்களை போர்சுக்கல் நாட்டை சேர்ந்த நெக்ஸ் நிறுவனம் உருவாக்கி உள்ளது. இந்த ஹெல்மெட்கள் இரண்டும் இந்திய பைக் ரைடர்களுக்கு ஏற்ப எடை குறைவானவை ஆகவும், ஸ்டைலிஷ் ஆனவை ஆகவும் மற்றும் பாதுகாப்பானவை ஆகவும் விளங்குகின்றன. இதில் குறிப்பாக, ஏசர்பிஸ் ஹெல்மெட்கள் அட்வான்ஸான மெட்டீரியல்களால், பல்வேறு சோதனைகளுக்கு மத்தியில் உருவாக்கப்பட்டுள்ளன.

மறுப்பக்கம், நெக்ஸ் ஹெல்மெட்கள் கட்டிங்-எட்ஜ் டிசைனில், துல்லியமாக அளவிடக்கூடிய டெக்னாலஜிகளின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், நெக்ஸ் ஹெல்மெட்களில் நிறைய கைவினையாளர்களின் கைவண்ணமும் இடம்பெற்றுள்ளது. நெக்ஸ் ஹெல்மெட்கள் இந்தியாவிற்காக உருவாக்கப்பட்டாலும், அவற்றில் இடம்பெற்றுள்ள டிசைன் ஆனது போர்ச்சுக்கல் நாட்டை பிரதிப்பலிக்கக் கூடியதாக உள்ளது.
இந்த ஹெல்மெட்களின் அறிமுகம் குறித்து ரேய்சே மோட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் யோகேஷ் மகான்சாரியா கூறுகையில், "இந்தியாவில் மோட்டார்சைக்கிள் கலாச்சாரம் தொடர்ந்து உருவாகி வருவதால், பாதுகாப்பு, ஸ்டைல் மற்றும் புதுமை ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் பிரீமியம் கியருக்கான தேவை அதிகரித்து வருவதை காண்கிறோம். நெக்ஸ் ஹெல்மெட்கள் உலக தரம் வாய்ந்த டிசைன்களுடன் இந்த தேவையை பூர்த்தி செய்கின்றன.

அதேநேரத்தில், இந்தியாவில் எண்டுரோ ரைடிங்கின் எழுச்சியினால், ஏசர்பிஸ் ஹெல்மெட்களை அறிமுகப்படுத்த இது சரியான தருணம் ஆகும். ஆஃப்-ரோடு ஆர்வலர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இவை இணையற்ற வசதி, பாதுகாப்பு மற்றும் நீடித்துழைப்பை வழங்குகின்றன. இவை இந்தியாவின் மாறுப்பட்ட மற்றும் சவாலான நிலப்பரப்புகளுக்கு ஏற்றதாக அமைகின்றன" என்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே இத்தாலி மற்றும் போர்ச்சுக்கலில் விற்பனையில் உள்ள ஹெல்மெட்களை இந்தியா பைக் வாரம் 2024 கண்காட்சியின் மூலமாக ரேய்சே மோட்டோ நிறுவனம் இந்தியாவிற்கு கொண்டுவந்துள்ளது. மற்றப்படி, இந்த ஹெல்மெட்களுக்கான விலைகள் தற்போதைக்கு அறிவிக்கப்படவில்லை. விரைவில் அறிவிக்கப்படலாம். இந்த ஹெல்மெட்களை ரேய்சே மோட்டோ நிறுவனத்தின் பைக் கியர் கிட்களில் இனி பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









