அரபு நாடுகளுக்கு செக் வைத்த மோடி அரசு... பெட்ரோல், டீசல் விவகாரத்தில் அதிரடி... ரொம்ப சந்தோஷமான விஷயம்
பெட்ரோல், டீசல் விவகாரத்தில் ஒன்றிய அரசு அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பெட்ரோல் உடன் 20 சதவீதம் எத்தனால் கலக்க வேண்டும் என்ற இலக்கை அடைவதற்கான காலக்கெடுவை ஒன்றிய அரசு தற்போது 2 ஆண்டுகள் விரைவுபடுத்தியுள்ளது. இதன்படி 2023ம் ஆண்டே பெட்ரோலுடன் 20 சதவீதம் எத்தனால் கலக்கப்பட வேண்டும் என ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் கச்சா எண்ணெய்க்காக வெளிநாடுகளை சார்ந்திருக்க வேண்டிய நிலை குறையும்.

பெட்ரோல், டீசலுடன் 10 சதவீதம் எத்தனால் கலக்கப்பட வேண்டும் என்ற இலக்கை 2022ம் ஆண்டிற்குள் எட்ட வேண்டும் என கடந்த 2020ம் ஆண்டு இலக்கு வைக்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில் 2030ம் ஆண்டிற்குள் 20 சதவீத எத்தனால் கலக்கப்பட வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. எனினும் இந்த இலக்கை எட்டுவதற்கான காலக்கெடுவில் மாற்றம் செய்யப்பட்டது.

இதன்படி எரிபொருளுடன் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கான இலக்கை 2030ம் ஆண்டில் இருந்து 2025ம் ஆண்டிற்கு ஒன்றிய அரசு விரைவுபடுத்தியது. அதாவது 2025ம் ஆண்டிற்குள் எரிபொருளுடன் 20 சதவீதம் எத்தனால் கலக்கப்பட வேண்டும். இதற்கான முடிவு நடப்பாண்டுதான் எடுக்கப்பட்டது. தற்போது இந்த காலக்கெடுவையும் ஒன்றிய அரசு 2 ஆண்டுகள் விரைவுபடுத்தியுள்ளது.

இதன்படி 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் எரிபொருளுடன் 20 சதவீதம் எத்தனால் கலக்கப்பட வேண்டும். உலகிலேயே கச்சா எண்ணெய்யை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 85 சதவீதம் இறக்குமதி மூலமாகவே பூர்த்தி செய்யப்படுகிறது.

இதற்காக வெளிநாடுகளை இந்தியா அதிகம் சார்ந்திருக்க வேண்டிய நிலை காணப்படுகிறது. மேலும் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக அதிக தொகையை செலவிட வேண்டியுள்ளதால், இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. ஆனால் எத்தனால் கலக்கும் திட்டத்தின் மூலம் கச்சா எண்ணெய்க்காக இந்தியா வெளிநாடுகளை சார்ந்திருக்கும் நிலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பு எத்தனால் வினியோக ஆண்டு கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. இதை பயன்படுத்தி கொண்டு பெட்ரோல் உடன் 10 சதவீத எத்தனாலை கலப்பதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளது. 10 சதவீதம் கலப்பு என்ற இலக்கை அடைவதற்கு, 4 பில்லியன் லிட்டர் எத்தனால் தேவை. அதே நேரத்தில் 2023ம் ஆண்டிற்குள் 20 சதவீதம் என்ற இலக்கை அடைய 10 பில்லியன் (1,000 கோடி) லிட்டர்கள் தேவைப்படும்.

எத்தனால் கலந்த எரிபொருளை வாகனங்களுக்கு பயன்படுத்துவதில் பிரேசில் உலகிற்கே முன்னோடியாக திகழ்கிறது. இந்தியாவிலும் தற்போது எரிபொருளுடன் எத்தனால் கலக்கும் பணிகளை மத்திய அரசு விரைவுபடுத்தியுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் விவசாயிகளுக்கும் பல்வேறு விதங்களில் நன்மை ஏற்படும்.

ஏனெனில் கரும்பு, தானியம் போன்றவற்றில் இருந்துதான் எத்தனால் தயாரிக்கப்படுகிறது. மேலும் எத்தனால் எரிபொருள் சுற்றுச்சூழலுக்கும் நன்மை பயப்பதாக இருக்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்தியாவின் காற்று மாசுபாடு பிரச்னைக்கும் ஓரளவு தீர்வு காணப்படும். ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications








