கார்களுக்கு 100% வரி குறையுறது ஒன்னும் நல்ல முடிவா தெரியல... அம்பானி குடும்பத்தை இனி கையில் பிடிக்க முடியாது!!
இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) இறுதியாக முடிவடைந்துள்ளது. இருப்பினும், இந்த ஒப்பந்தத்தின்படி என்னென்ன முடிவுகள் எடுக்கப்படவுள்ளன என்பது பின்னர்தான் தெரியவரும். இது உலகளாவிய வர்த்தக நிச்சயமற்ற தன்மை நிலவும் சூழலில், சுமார் 200 கோடி மக்கள் தொகையைக் கொண்ட இரு பெரும் பொருளாதாரங்களுக்கு இடையே ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைகிறது.
இந்த ஒப்பந்தம், இந்தியாவின் வர்த்தகக் கூட்டணி நிறுவனங்களாக உள்ள ஐரோப்பிய தனியார் நிறுவனங்களுக்கு இதுவரை வழங்கப்படாத மிக விரிவான வரி தளர்வை அளிக்கிறது. இதை 'அனைத்து ஒப்பந்தங்களுக்கும் தாய்' என ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் வர்ணித்துள்ளார். அந்த அளவிற்கு, உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடுகளுக்கு இடையேயான உறவை இது ஆழப்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புதிய வர்த்தக ஒப்பந்தம் ஆனது உள்நாட்டு பங்குச் சந்தையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. KPR மில், வெல்ஸ்பன் லிவிங், நிதின் ஸ்பின்னர்ஸ் போன்ற ஜவுளி நிறுவனங்களின் பங்குகள் எழுச்சி கண்டுள்ளன. தற்போது, இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதி 17% ஆகும். இந்த இருதரப்பு ஒப்பந்தம் இந்தியாவின் ஏற்றுமதியை சுமார் 5,000 கோடி டாலர் அளவுக்கு அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இது இந்தியாவின் நடுத்தர தொழில்நுட்ப உற்பத்தித் துறையின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும். ஆட்டோமொபைல் (Automobile) துறையை பொறுத்தவரையில் அடுத்த இரண்டு ஆண்டுகளில், இந்தியாவிற்கு கிரீன்ஹவுஸ் வாயு வெளியேற்றத்தை குறைக்க உதவுவதற்காகவும், நிலையான தொழில்துறை மாற்றத்தை மேம்படுத்தவும் ஐரோப்பிய ஒன்றியம் 50 கோடி டாலர் வரை நிதி உதவி வழங்க திட்டமிட்டுள்ளது.

ஐரோப்பிய நிறுவனங்கள் இந்தியாவின் நிதிச் சேவைகள் மற்றும் கடல்சார் போக்குவரத்து உள்ளிட்ட சேவைகளை எளிதாக அணுக இந்த புதிய ஒப்பந்தம் வழிவகை செய்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இந்தியா வழங்கும் வரிச் சலுகைகள், வேறு எந்த வர்த்தகக் கூட்டாளருக்கும் இதுவரை வழங்கப்படாத அளவுக்கு விரிவானவை. கார்கள் மீதான வரிகள் 110%-இல் இருந்து படிப்படியாக 10% ஆக குறையும்.
எனினும், இந்தியாவில் பெரும்பாலான சொகுசு கார்களின் விலைகளில் உடனடியாக பெரிய மாற்றம் இருக்காது என வல்லுநர்கள் கூறுகின்றனர். முழுமையாக ஐரோப்பாவில் உற்பத்தி செய்யப்பட்டு, இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கான வரி (CBU - Completely Build Up) முதலில் 40% ஆகவும், பின்னர் 10% ஆகவும் குறையலாம். ஆனால், பாகங்களாக ஐரோப்பிய நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்டு, இந்தியாவில் அசெம்பிள் (Assemble) செய்யப்படும் கார்களுக்கு தற்போது 16.5% வரி உள்ளதே உடனடி மாற்றமின்மைக்கு காரணம் ஆகும்.
இந்தியாவில் விற்பனையாகும் 90%க்கும் அதிகமான சொகுசு வாகனங்கள், அதாவது ஆண்டுக்கு சுமார் 51,000 முதல் 52,000 யூனிட்கள், உள்நாட்டிலேயே அசெம்பிள் செய்யப்படுகின்றன. மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-benz), பி.எம்.டபிள்யூ (BMW), ஜாகுவார் லேண்ட் ரோவர் (Jaguar Land Rover), ஆடி (Audi) போன்ற முன்னணி பிராண்டுகள் மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள தங்கள் ஆலைகளில் இந்த வாகனங்களை உற்பத்தி செய்கின்றன.
இவை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சி.கே.டி. (CKD - Completely Knocked Down) கிட்களால் அசெம்ப்ளி செய்யப்படுகின்றன. இவற்றுக்கு 15% இறக்குமதி வரி மற்றும் 1.5% சமூக நல வரி சேர்த்து மொத்தம் 16.5% வரி விதிக்கப்படுகிறது. மாறாக, முழுமையாக தயாராகும் CBU வாகனங்களுக்கு வாகன மதிப்பைப் பொறுத்து 70% அல்லது 110% வரி விதிக்கப்படுகிறது. இதுதான் 10% வரையில் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
உள்நாட்டில் அசெம்ப்ளி ஆகும் சொகுசு வாகனங்களுக்கு குறைந்த வரி இருப்பதால், FTA ஒப்பந்தத்தால் அவற்றின் விலைகளில் பெரிய மாற்றம் இருக்காது. மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிர்வாக இயக்குனர் சந்தோஷ் ஐயர், நிறுவனத்தின் 90% விற்பனை உள்நாட்டு உற்பத்தி செய்யப்படும் கார்களிலிருந்து வருவதால், உடனடி விலை நிவாரணத்தை எதிர்பார்க்கவில்லை என்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஐரோப்பிய ஒன்றியத்துடனான இந்த ஒப்பந்தம், இந்தியாவின் 2026ஆம் ஆண்டிற்கான தடையற்ற வர்த்தக உடன்பாடுகளின் இலக்கை நோக்கிய முக்கிய நகர்வாகும். இந்த ஒப்பந்தம் ஆனது முழுவதுமாக வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படும் அல்ட்ரா-லக்சரி வாகனங்களுக்கும், அவற்றை தயாரிக்கும் நிறுவனங்களுக்கும், அவற்றை வாங்கும் செல்வந்தர்களுக்கும் தான் பெரிதும் பலன் அளிக்கக்கூடியதாக உள்ளது.


Click it and Unblock the Notifications








