சுதந்திர இந்தியாவின் கனவு: 320 கிமீ வேகத்தில் செல்லும் முதல் புல்லட் ரயில் சேவை துவங்கும் தேதி வெளியானது!
மணிக்கு 320 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட உள்ள இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை தொடங்கும் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. சுதந்திர இந்தியாவின் முக்கிய கனவு திட்டங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த அதிவேக ரயில் சேவையின் கட்டுமானப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், புல்லட் ரயில் சேவை தொடங்கும் தேதி குறித்த தகவலை மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.
மிகப்பெரிய நிலப்பரப்பைக் கொண்ட இந்தியாவில், நீண்ட தூரப் பயணங்களுக்கு ரயில்கள் முக்கிய போக்குவரத்து வசதியாக இருந்து வருகின்றன. அதே நேரத்தில், வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் நகரமயமாக்கல் வேகமாக வளர்ந்து வரும் சூழலில், அதிவேக போக்குவரத்து கட்டமைப்பு அவசியமாகியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, இந்திய ரயில்வே துறை புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ், மும்பை மற்றும் அகமதாபாத் நகரங்களுக்கு இடையே 508 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான கட்டமைப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இந்த திட்டம் துவங்கும் தேதியை நாடு முழுவதும் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
மத்திய ரயில்வே அமைச்சர் தகவலின்படி, அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று, நாட்டின் முதல் புல்லட் ரயில் சேவை துவங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக, குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் - பிலிமோரா நகரங்களுக்கு இடையே இந்த சேவை துவங்கும். இதனைத் தொடர்ந்து, சூரத் - வபி மற்றும் வபி - அகமதாபாத் வழித்தடங்களில் படிப்படியாக சேவை விரிவுபடுத்தப்படும்.
மணிக்கு 320 கிலோமீட்டர் வேகத்தில் புல்லட் ரயில்கள் இயக்கப்படுவதால், மும்பை - அகமதாபாத் இடையிலான பயண நேரம் பெருமளவு குறையும். முழு திட்டமும் நிறைவடைந்த பின், இரண்டு நகரங்களுக்கும் இடையிலான பயணம் சுமார் 2.5 மணி நேரத்தில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டம் வெற்றிகரமாக நடைமுறைக்கு வந்தால், இந்தியாவில் அதிவேக ரயில் போக்குவரத்திற்கு புதிய பாதை உருவாகும். இதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும் புல்லட் ரயில் சேவைகளை படிப்படியாக விரிவுபடுத்தும் திட்டமும் இந்திய ரயில்வே துறையிடம் உள்ளது.
மேலும், தென்னிந்தியாவில் சென்னை - பெங்களூர் - மைசூர் இடையே புல்லட் ரயில் சேவை அறிமுகம் செய்வதற்கான சாத்தியக்கூறுகளும் தற்போது ஆராயப்பட்டு வருகின்றன. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், இரு நகரங்களுக்கும் இடையிலான பயண நேரம் 2 மணிநேரத்திற்கும் குறைவாக இருக்கும்.
இதற்கிடையில், மும்பை - அகமதாபாத் இடையிலான புல்லட் ரயில் பாதை கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், புல்லட் ரயிலை இயக்கும் ஓட்டுனர்களுக்கான பயிற்சியும் ஜப்பானில் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தேர்வு செய்யப்பட்ட இந்திய ரயில் ஓட்டுனர்கள் தற்போது ஜப்பானில் நேரடியாக புல்லட் ரயிலை இயக்கி பயிற்சி பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








