280 கி.மீ வேகம்.. 2027ல் அறிமுகமாகும் இந்தியாவின் சொந்த புல்லட் ரயில்... பெங்களூரில் தயாராகிறது!
இந்தியாவில் பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட அதிவேக புல்லட் ரயில் சேவை பணிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ளன. மும்பை - அகமதாபாத் இடையே உருவாக்கப்பட்டு வரும் அதிவேக ரயில் பாதையில், வரும் 2027ஆம் ஆண்டு முதல் கட்ட சேவையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த சேவையில் முக்கிய திருப்பமாக, இந்தியாவிலேயே சொந்த தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் பி28 (B28) ரயில் பயன்படுத்தப்பட உள்ளது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் இந்தியாவின் அதிவேக ரயிலாக உருவாகி வரும் பி28 என்ற குறிப்பிடப்படும் புல்லட் ரயிலை பெங்களூருவைச் சேர்ந்த பிஇஎம்எல் (BEML) நிறுவனம் தயாரித்து வருகிறது. மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் செல்லும் வகையில் இந்த ரயில் வடிவமைக்கப்படுகிறது. ஆரம்பகட்ட வர்த்தக சேவையில் இதன் இயக்க வேகம் மணிக்கு 250 கிமீ வேகம் என்ற அளவில் குறைவாக இருக்கும். ஆனால், அடுத்த சில ஆண்டுகளில் இதன் அடிப்படையில் 350 கிமீ வேகம வரை செல்லும் B35 ரயிலையும் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

விரைவில் சோதனை ஓட்டம்
இந்தியாவின் முதல் புல்லட் ரயிலாக வரும் பி28 ரயிலின் சோதனை ஓட்டங்கள் வரும் ஆண்டு மே அல்லது ஜூன் மாதத்தில் தொடங்கும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இந்த ரயிலின் அதிகபட்ச இயக்குதல் வேகம், பிரேக்கிங் சிஸ்டம், மின்சார அமைப்பு, சிக்னல் சிஸ்டம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் சோதிக்கப்படும். இந்த சோதனைகள் முடிந்த பிறகு வர்த்தக சேவையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போதைய திட்டத்தின்படி அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15ந் தேதி சுதந்திர தினத்தன்று முதல் புல்லட் ரயில் சேவையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக குஜராத்தில் உள்ள சூரத் - வாபி இடையேயான சுமார் 97 கி.மீ. பகுதி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது. அதாவது, மும்பை-அகமதாபாத் இடையிலான இந்த வழித்தடத்தில் முழுமையாக பணிகள் முடிக்கப்பட்ட வழித்தடத்தில் புல்லட் ரயில் சேவை கொண்டு வரப்பட உள்ளது.
சின்கென்சன் தொழில்நுட்பம்
மும்பை - அகமதாபாத் அதிவேக ரயில் திட்டம் ஜப்பானின் ஷின்கன்சென் (Shinkansen) புல்லட் ரயில் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது. பாதை அமைப்பு, மின்சாரம், சிக்னல் சிஸ்டம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல முக்கிய தொழில்நுட்பங்களில் ஜப்பானின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. மேலும், இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டத்தில் ஜப்பானில் ஓடும் சின்கன்சென் புல்லட் ரயில்கள்தான் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், தற்போது இந்தியாவிலேயே சொந்தமாக உருவாக்கப்படும் சுதேசி புல்லட் ரயிலை பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வரும் 2027ல் ஆரம்பமாகும் சேவைக்கு தற்போது பி28 ரயிலை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜப்பான் சின்கன்சென் திட்டம் கைவிடப்பட்டது. ஜப்பானின் அடுத்த தலைமுறை இ10 (E10) சின்கன்சென் ரயில் பின்னர் இந்த திட்டத்தில் பயன்படுத்தப்படலாம். ஆரம்ப சேவையை தாமதப்படுத்தாமல் இந்திய ரயிலை கொண்டு தொடங்குவதே தற்போதைய அணுகுமுறையாக உள்ளது.
அதிகபட்ச வேகம்
மும்பை - அகமதாபாத் அதிவேக ரயில் பாதை 508 கிமீ நீளத்திற்கு அமைக்கப்படுகிறது. இதில் மும்பை, தானே, விரார், போய்சர், வாபி, பிலிமோரா, சூரத், பரூச், வடோதரா, ஆனந்த், அகமதாபாத் மற்றும் சபர்மதி என 12 நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இந்த பாதையில் ரயில்கள் அதிகபட்சமாக மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும் வகையில் உள்கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது. இதன் வடிவமைப்பு வேகம் மணிக்கு 350 கிமீ என்ற அளவில் கட்டமைப்பு பணிகள் நடக்கிறது. முழு வழித்தடமும் செயல்பாட்டுக்கு வந்த பிறகு, மும்பை - அகமதாபாத் பயண நேரம் கணிசமாக குறையும்.
பி28க்கு அடுத்ததாக அதிக வேகத்தில் இயங்கக்கூடிய பி35 (B35) என்ற இந்திய அதிவேக ரயில் உருவாக்கும் திட்டமும் உள்ளது. இது எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு உருவாக்கப்படும் அடுத்த தலைமுறை ரயில் திட்டமாக இருக்கும். இதனிடையே, ஜப்பானில் உருவாக்கப்பட்டு வரும் E10 என்ற அடுத்த தலைமுறை புல்லட் ரயிலும் இந்தியாவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. தற்போது உருவாக்கப் பணிகள் நடந்து வருவதால், ஓரிரு ஆண்டுகளில் சின்கென்சன் புல்லட் ரயிலும் இந்தியாவில் பயன்பாட்டுக் கொண்டு வரப்படலாம்.


Click it and Unblock the Notifications


