சீனா, ஜப்பான்லாம் ஓரமா போய் விளையாடு... இந்தியாவை பாத்து உலக நாடுகள் எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்க போகுது!
இந்திய ரயில்வே தற்போது அதிநவீனமான ஒன்றாக மாற தொடங்கியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சீறி பாய்ந்து கொண்டுள்ள வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் (Vande Bharat Express Trains) இதற்கு ஒரு உதாரணம். ஆனாலும் இந்தியாவில் புல்லட் ரயில்கள் (Bullet Trains) இல்லை என்ற குறை, மக்கள் மத்தியில் இருக்கவே செய்கிறது.
இந்த குறை கூடிய விரைவில் நிவர்த்தியாக உள்ளது. ஆம், மும்பை-அகமதாபாத் (Mumbai-Ahmedabad) நகரங்களுக்கு இடையே இன்னும் ஒரு சில ஆண்டுகளில் புல்லட் ரயில் இயங்கவுள்ளது. இதுதான் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் ஆகும். ஆனால் இந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு, ஜப்பானைதான் (Japan) இந்தியா பெரிதும் நம்பியுள்ளது. தொழில்நுட்பம் மற்றும் நிதி உதவி என 2 முக்கியமான விஷயங்களிலும், ஜப்பான்தான் இந்தியாவிற்கு உதவி செய்து கொண்டுள்ளது. எனவே மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தை முழுக்க முழுக்க இந்தியாவின் முயற்சி என கூற முடியாது.

ஆனால் மும்பை-அகமதாபாத் புல்லட் ரயிலை தொடர்ந்து, இந்திய மக்கள் அனைவரும் பெருமைப்படும் வகையில், முழுக்க முழுக்க இந்தியாவின் முயற்சியில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் புதிய புல்லட் ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இது இந்தியாவின் சொந்த புல்லட் ரயில்கள் ஆகும். இங்கே ஆச்சரியம் அளிக்கும் விஷயம் என்னவென்றால், இந்தியாவின் சொந்த புல்லட் ரயில்களை உருவாக்குவதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டன என்பதுதான்!
இந்திய ரயில்வே தற்போது இயக்கி கொண்டுள்ள எந்தவொரு ரயிலை காட்டிலும், இந்த புதிய புல்லட் ரயில்கள் மிகவும் அதிவேகத்தில் பயணம் செய்யக்கூடியதாக இருக்கும். இந்தியாவின் இந்த புதிய புல்லட் ரயில்கள் மணிக்கு 250 கிலோ மீட்டர்களுக்கும் அதிகமான வேகத்தில் பயணம் செய்யும் என இந்த விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அனேகமாக பிரான்ஸ் (France) மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் இயக்கப்படும் புல்லட் ரயில்களுக்கு இணையான வேகத்தில், இந்தியாவின் சொந்த புல்லட் ரயில்கள் பயணம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். சென்னை (Chennai) நகரில் உள்ள ஐசிஎஃப் (ICF - Integral Coach Factory) தொழிற்சாலையில்தான், இந்த புல்லட் ரயில்களை உருவாக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது இந்திய ரயில்வேயின் அடையாளமாக மாறி வரும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலைதான் தயாரித்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் உருவாக்கப்பட்டு வரும் அதே பிளாட்பார்ம் அடிப்படையில்தான் இந்தியாவின் சொந்த புல்லட் ரயில்களும் உருவாக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. நாட்டின் வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில், இந்த மேட்-இன்-இந்தியா புல்லட் ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இது நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டிய விஷயம் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: புல்லட் ரயில்கள் உண்மையிலேயே இந்தியாவிற்கு அவசியமான ஒன்றுதான். அதிவேகத்தில் பயணம் செய்வதால், இவை பயண நேரத்தை வெகுவாக குறைக்கும். எனவே ஒரு வகையில் பொருளாதார வளர்ச்சிக்கும் (Economic Growth) இந்த புல்லட் ரயில்கள் உதவி செய்ய போகின்றன என்பது உறுதி.
ஆனால் கட்டணம் அதிகமாக இருக்கும் என்பதால், புல்லட் ரயில்கள் சாமானிய மக்களுக்கு ஏற்றதாக இருக்குமா? என்பது சந்தேகம்தான். எனினும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டபோதும் கூட, ஆரம்பத்தில் கட்டணம் அதிகம் என்ற விமர்சனங்கள் வரவே செய்தன. ஆனால் தற்போது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைவராலும் ஏற்று கொள்ளப்பட்டுள்ளதை போல், புல்லட் ரயில்களும் அனைவராலும் ஏற்று கொள்ளப்படும் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








