இனி ஃபாஸ்ட் டேக் தேவையில்லை! டோல்கேட் கட்டணம் வசூலிக்க புதிய டெக்னிக்!
இந்தியாவில் தற்போது சுங்கச்சாவடி கட்டணம் செலுத்த ஃபாஸ்ட்டேக் முறை அமலில் இருக்கும் நிலையில் விரைவில் அந்த முறை நீக்கப்பட்டு நேரடியா நம்பர் பிளேட் ரீடிங் கேமரா மூலம் சுங்கச்சாவடி கட்டண வசூல் முறையை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விவாக காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் சுங்கச்சாவடிகளில் நேரடியாகப் பணம் செலுத்தும் முறைதான் ஆரம்பக் காலத்திலிருந்து நடைமுறையிலிருந்தது. இப்படியாக சுங்கச்சாவடிகளில் பணம் செலுத்திச் செல்வதால் பல வாகனங்கள் நீண்ட நேரம் சுங்கச்சாவடியில் காத்திருக்க வேண்டிய நிலை வந்தது. ஏதாவது சிறு பிரச்சனை ஏற்பட்டால் கூட வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. இதையடுத்து மத்திய அரசு இ்நதியாவில் வாகனங்களுக்கு ஃபாஸ்ட் டேக் முறையைக் கட்டாயமாக்கியது.

ஆர்எஃப் ஐடி மூலம் சுங்க சாவடி கட்டணத்தை டிஜிட்டல் முறையில் பெறுவதற்கான வழியை ஏற்படுத்தியது. இன்று இந்தியாவில் 97 சதவீதமான சுங்கச்சாவடி கட்டணங்கள் எல்லாம் பாஸ்ட் டேக் முறையில் தான் செலுத்தப்பட்டு வருகிறது. இருந்தாலும் சுங்கச்சாவடிகளில் நீளமாக வாகனங்கள் அணி வகுத்து நிற்கும் முறை இன்னும் மாறவில்லை. பல சுங்கச்சாவடிகளில் இன்னும் வாகனங்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று கொண்டு தான் இருக்கின்றனர். இதை மாற்ற தற்போது மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
தற்போது வரை மத்திய அரசு ANPR என்ற முறையை அமல் படுத்த ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. இந்த ANPR என்பது தானியங்கியாக வாகனத்தின் நம்பர் பிளேட்களை எடுக்கும் சிஸ்டம். இந்த சிஸ்டத்தின் படி ஒரு வாகனம் தேசிய நெடுஞ்சாலையில் பயணித்தால் அந்த வாகனத்தின் நம்பர்பிளேட்டை வாசித்து அதன் மூலம் வாகனத்தின் உரிமையாளரின் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக சுங்கச்சாவடி கட்டணத்தைக் கழித்துக் கொள்ளும் முறைதான் இது.
இந்தமுறை நடைமுறைக்கு வந்தால் தற்போது உள்ள சுங்கச்சாவடிகள் எல்லாம் அகற்றப்படும். அதற்கு பதிலாக ஒரு தேசிய நெடுஞ்சாலைக்குள் உள்ளே நுழைவும் மற்றும் வெளியே செல்லும் பகுதிகளில் நம்பர் பிளேட்டை கண்காணிக்கும் கேமராக்கள் பொருத்தப்படும். இந்த கேமராக்கள் வாகனத்தின் நம்பர் பிளேட்டை எடுத்து எந்த இடத்தில் இந்த வாகனம் தேசிய நெடுஞ்சாலைக்குள் நுழைந்துள்ளது என்று சிஸ்டத்திற்கு தகவல் தெரிவிக்கும். பின்னர் எங்குத் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து வெளியேறுகிறது என்பதையும் தெரிவிக்கும்.
இப்படியாக இந்த கேமராக்களிலிருந்து வந்த தகவலின் அடிப்படையில் எவ்வளவு தூரம் இந்த வாகனம் தேசிய நெடுஞ்சாலையில் பயணித்துள்ளது என்பதைக் கணக்கிட்டு அவர்கள் பயணம் செய்த தூரத்திற்கு ஏற்ப சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு வாகனத்திற்கான சுங்கச்சாவடி கட்டண செலவு குறைய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த முறை செயல்பாட்டிற்கு வருவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.
கடந்த 2019ம் ஆண்டு தான் வாகனங்களுக்கு வாகன தயாரிப்பு நிறுவனங்களே நம்பர் பிளேட்களை வழங்கத் துவங்கினர். அதற்கு முன்னர் வாங்கப்பட்ட வாகனங்களில் நம்பர் பிளேட்கள் ஒவ்வொரு வாகனத்திற்கும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். ஆஃப்டர் மார்கெட் நம்பர் பிளேட்களை இந்த கேமராக்கள் எந்த அளவிற்கு துல்லியமாக்கக் கணிக்கும் என்பதற்கு எந்த வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இப்படியான வாகனங்களுக்கான சுங்க கட்டணம் வசூலிக்கும் முறை குறித்த தெளிவில்லை.
இது போக தற்போது உள்ள நம்பர் பிளேட் ரீடிங் சிஸ்டம் 9 இலக்க எண்ணை மட்டுமே கண்டுபிடிக்கும் திறன் கொண்டது. வருங்காலத்தில் அதைவிட அதிக இலக்க எண் கொண்ட நம்பர் பிளேட் வந்தால் அதை எப்படி இந்த கேமராக்கள் கண்டுபிடிக்கும் என்பதற்கான விளக்கம் இதுவரையில்லை. தற்போது இந்தியாவில் நம்பர் பிளேட்டில் பெயர்களை எழுதுவது, கடவுள் புகைப்படங்களை ஓட்டுவது போன்ற பழக்கம் இருக்கிறது. இது சட்டப்படி தவறு என்றாலும் இப்படியாகச் செய்யப்பட்ட நம்பர் பிளேட்களை எந்த அளவிற்கு துல்லியமாக்க இந்த கேமராக்கள் கண்காணிக்கும் என்பது கேள்விக் குறியாக இருக்கிறது.
இதே போல ஒரு வேலை வேண்டுமென்றோ, அல்லது தெரியாமலோ நம்பர் பிளேட் மறைக்கப்பட்டிருந்தாலோ அதில் மணல் போன்ற விஷயங்கள் படிந்திருந்தாலோ அப்படியான நம்பர் பிளேட்களை எப்படி இந்த கேமரா கண்காணிக்கும் என்ற தகவல் இல்லை. இதே போல நம்பர் பிளேட்டே இல்லாமல் இந்த சிஸ்டத்தை ஏமாற்றக் கடந்து செல்லும் வாகனங்களை எப்படிக் கண்டுபிடித்துத் தடுக்கும், அல்லது அவர்களுக்கு நம்பர் பிளேட் இல்லாமல் காரை இயக்கியதற்கான அபராதம் விதிக்கும் என்பதற்கான விளக்கமும் இதுவரையில்லை.
இவை எல்லாவற்றையும் தாண்டி, இந்த பிரச்சனைகளை எல்லாம் சரி செய்து டோல்கேட்களுக்கு பதிலாக இப்படியாக கேமரா மூலம் நம்பர் தட்டுகளை வாசித்து அதன் மூலம் சுங்க கட்டணம் வசூலிக்கும் முறை எப்படி நடைமுறைக்கு வரப்போகிறது என்பது அதை அமல்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கே வெளிச்சம்.


Click it and Unblock the Notifications