தொலச்சிருவேன்... இந்திய மண்ணில் சீன நிறுவனம் செய்ய போகும் காரியத்திற்கு முட்டுக்கட்டை போட்ட மோடி அரசு!
சீனாவை சேர்ந்த மிக பிரபலமாக நிறுவனங்களில் ஒன்று பிஒய்டி (BYD). Build Your Dreams என்பதன் சுருக்கம்தான் BYD. எலெக்ட்ரிக் வாகனங்கள் (Electric Vehicles) மற்றும் ப்ளக்-இன் ஹைப்ரிட் (Plug-in Hybrid Vehicles) வாகனங்களை பிஒய்டி நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் மொத்தம் 2 எலெக்ட்ரிக் கார்களை பிஒய்டி நிறுவனம் விற்பனை செய்து கொண்டுள்ளது. அவை பிஒய்டி அட்டோ 3 (BYD Atto 3) மற்றும் பிஒய்டி இ6 (BYD e6) ஆகும். சென்னைக்கு (Chennai) அருகே உள்ள பிஒய்டி நிறுவனத்தின் ஆலையில் இந்த 2 எலெக்ட்ரிக் கார்களும் அசெம்பிள் செய்யப்படுகின்றன.

இந்த சூழலில் இந்தியாவில் புதிய தொழிற்சாலை ஒன்றை அமைத்து, அங்கு சொகுசு எலெக்ட்ரிக் கார்கள் மற்றும் ஹேட்ச்பேக் ரக எலெக்ட்ரிக் கார்கள் என பல்வேறு தயாரிப்புகளை தயாரிப்பதற்கு பிஒய்டி நிறுவனம் திட்டமிட்டு வந்தது. ஐதராபாத் நகரில் இந்த புதிய தொழிற்சாலையை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டது.
இதற்காக 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியாவில் முதலீடு செய்வதற்கு பிஒய்டி நிறுவனம் முன்வந்தது. அத்துடன் இந்த பணிகளுக்காக ஐதரபாத்தை சேர்ந்த மெஹா இன்ஜினியரிங் (Megha Engineering) நிறுவனத்துடன் கூட்டு சேர்வதற்கான பணிகளையும் பிஒய்டி நிறுவனம் செய்து வந்தது என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

ஐதராபாத் நகரில் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் புதிய தொழிற்சாலையை அமைப்பதற்கான விண்ணப்பத்தை, இந்திய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையிடம் இந்த 2 நிறுவனங்களும் சமர்ப்பித்திருந்தன. ஆனால் இந்த திட்டத்தை இந்திய அரசு அதிரடியாக நிராகரித்து விட்டதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மற்ற துறைகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு, இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மிகப்பெரிய முதலீடு என்றாலும் கூட, சீனாவை சேர்ந்த நிறுவனம் என்பதால், புதிய எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி தொழிற்சாலையை அமைக்கும் திட்டத்தை நிரகாரிக்கும் முடிவை இந்திய அரசு எடுத்திருக்கலாம் என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த தகவல் உண்மையெனில், இது பிஒய்டி நிறுவனத்திற்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கலாம். இது சீன நிறுவனங்களுக்கு எதிரான இந்திய அரசின் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகதான் கருதப்படுகிறது. ஆனால் இந்திய சந்தையில் சீன கார் நிறுவனங்கள் இல்லாமல் எல்லாம் இல்லை. எம்ஜி மோட்டார் (MG Motor) இதற்கு ஒரு உதாரணம்.
இது சீனாவை சேர்ந்த செயிக் மோட்டார் (SAIC Motor) குழுமத்தின் ஒரு அங்கமாக செயல்பட்டு வருகிறது. சீன அடையாளத்தை மாற்றி இந்திய நிறுவனமாக உருவெடுப்பதற்காகவும், தொழிலை மேம்படுத்த இந்திய முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும் எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது பங்குகளை விற்பனை செய்ய தற்போது முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவை சேர்ந்த முன்னணி தொழில் அதிபர்கள் பலரும், எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் பங்குகளை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே கூடிய விரைவில் எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவை சேர்ந்த உயர்மட்ட நிர்வாக அதிகாரிகளுடன், இந்திய நிறுவனமாக மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சீனா அல்லது அந்நாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் பெருகுவதை தடுக்கும் முயற்சிகளை மத்திய அரசு மிக நீண்ட காலமாகவே மிகவும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாகதான் பிஒய்டி நிறுவனத்தின் முதலீட்டிற்கு மத்திய அரசு முட்டுக்கட்டை போட்டிருக்கும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications








