2014இல் இத்தனை ஏர்போர்ட் மட்டுமே இருந்துச்சு, ஆனால் இப்போ...!! மத்திய அமைச்சரின் பெருமிதமான பேச்சு...
இந்தியா இன்னும் 2 முதல் 3 வருடங்களில் சுமார் 220 விமான நிலையங்களை (Air Ports) கொண்ட நாடாக இருக்கும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். எதை வைத்து நம்பிக்கையாக இந்த விஷயத்தை அமைச்சர் கூறியுள்ளார்? தற்சமயம் இந்தியாவில் எத்தனை விமான நிலையங்கள் உள்ளன? என்பது குறித்த முழுமையான விபரங்களை இனி பார்க்கலாம்.
விமானங்கள், நமது போக்குவரத்து முறையை கடந்த ஒரு நூற்றாண்டில் பெரிய அளவில் மாற்றம் செய்துள்ளன என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு காலத்தில் விமானங்கள் வசதி மிகுந்தவர்கள் மற்றும் வணிகர்களுக்கானதாகவே பார்க்கப்பட்டது. ஆனால் இன்றைய காலத்திலோ அருகில் உள்ள மாநகரங்களுக்கு செல்வதற்கு கூட விமானத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், டெல்லியில் கடந்த ஜூன் 7ஆம் தேதி நடைபெற்ற ஊடக கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்ற விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா பேசுகையில், "இந்தியா அடுத்த 2- 3 வருடங்களில் 200 - 220 விமான நிலையங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் நீரிலும் இயங்கும் ஹெலிகாப்டர்களான வாட்டர் ஏரோடைனாமிக்ஸை கொண்டிருக்கும்" என உறுதிப்பட கூறியுள்ளார்.
இதுகுறித்து மேலும் பேசிய அமைச்சர், "2014 வரையில் நாட்டில் வெறும் 74 விமான நிலையங்கள் மட்டுமே செயல்பாட்டில் இருந்தன. ஆனால் 2023 மார்ச்சில் கூடுதலாக 74 விமான நிலையங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் வாட்டர் ஏரோடைனாமிக்ஸ் உள்ளன" என பெருமிதத்துடன் கூறியவர், 2024-25ஆம் நிதியாண்டு முடிவதற்குள் இந்த எண்ணிக்கையை மொத்தமாக 220 ஆக உயர்த்தும் திட்டம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், திருப்பதி, விஜயவாடா, குஷிநகர் மற்றும் மோபா நகரங்களில் உள்ள விமான நிலையங்களை சர்வதேச விமான நிலையங்களாக மாற்றும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் தற்சமயம் 30 சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. இந்தியாவில் தற்சமயம் வருடத்திற்கு 22.1 கோடி பேர் விமான போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர்.
இதனை அடுத்த 10 வருடங்களில் இரட்டிப்பாக, அதாவது வருடத்திற்கு 45.6 கோடி பயணிகளாக மாற்றும் முனைப்பில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் உள்ளது. இதற்கேற்ப விமான நிலையங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்து மத்திய அமைச்சர் கூறுகையில், "டெல்லி, பெங்களூர், சென்னை மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்களின் விரிவாக்க பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன அல்லது நிறைவடைந்துவிட்டன.

அத்துடன் உத்திர பிரதேசத்தின் ஜெவர் மற்றும் மஹாராஷ்டிராவின் நவி மும்பையில் உருவாக்கப்பட்டு வரும் க்ரீன் ஃபீல்டு விமான நிலையங்கள் டெல்லி மற்றும் மும்பை நகரங்களில் விமான சேவையை விரிவாக்கம் அடைய செய்யும்" என்றார். இந்தியாவின் முன்னேற்றம் காணா பகுதி என அழைக்கப்படும் வடகிழக்கு பகுதியில் கூட விமான நிலையங்களின் எண்ணிக்கை டபுள் மடங்காக அதிகரித்துள்ளது. 2014இல் 9 விமான நிலையங்கள் மட்டுமே இந்திய வடகிழக்கு மாநிலங்களில் இருந்த நிலையில், தற்போது 17 ஆக உள்ளன.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: எப்போதும் நாங்கள் கூறுவதுதான், ஒரு நாடு வளர்ச்சி அடைய வேண்டுமெனில் போக்குவரத்து ரீதியாக முதலில் அந்த நாடு முன்னேற்றம் காண வேண்டும். இந்த விஷயத்தில் ஆளும் மத்திய அரசு கடந்த பல வருடங்களாகவே முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. ஏனெனில் நாட்டின் விமான போக்குவரத்தை மேம்படுத்தும் அதேவேளையில், சாலை போக்குவரத்தும் மேம்படுத்தப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications









