இக்கட்டான சூழ்நிலையில் இலங்கைக்கு உதவி கரம் நீட்டும் இந்தியா... 40,000 டன் டீசல் அனுப்பி வைக்க முடிவு!
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் இலங்கை அரசிற்கு இந்தியா உதவி கரம் நீட்டியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம், வாங்க.

இலங்கை அரசு தற்போது மிக பெரிய பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றது. அன்னியச் செலாவணி கையிருப்பு தீர்ந்து போனதால் அது மேலும் பல்வேறு சிக்கல்களைச் சந்திக்கத் தொடங்கியிருக்கின்றது. இதன் காரணமாக வரலாறு காணாத வகையில் விலைவாசி அந்நாட்டில் உயர்ந்துள்ளது. ஏழை மக்கள் தினம் பருகும் டீ முதல் எரிபொருள் வரையிலான பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் பன் மடங்கு அதிகரித்து காணப்படுகின்றது.

இதனால், அந்நாட்டில் வசிக்கும் ஏழை-எளிய மக்கள் கடும் துயரத்திற்கு ஆளாகியிருக்கின்றனர். இந்த நிலையில், அண்மையில் இலங்கை அரசு இந்திய அரசிடம் தங்களுக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்திருந்தது. குறிப்பாக, சமீபத்தில் டீசல் வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தது. இதன் அடிப்படையில் தற்போது இந்திய அரசு மிக அதிகளவிலான டீசலை அந்நாட்டிற்கு அனுப்ப முடிவு செய்துள்ளது.

சுமார் 40 ஆயிரம் டன் டீசலை இலங்கைக்கு அனுப்பி வைக்க மத்திய அரசு சம்மதித்துள்ளது. இதனை 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் திட்டத்தின்கீழ் அனுப்பி வைக்கப்பட இருக்கின்றது. பெட்ரோல், டீசல் விலை இலங்கையில் மட்டுமல்ல உலக நாடுகள் பலவற்றிலும் தொடர்ச்சியாக உயர தொடங்கியிருக்கின்றது.

ரஷ்யா-உக்ரைன் போரால் எரிபொருள் விலை உயர தொடங்கியிருக்கின்றது. இந்தியாவிலும் கூட தொடர்ச்சியாக பெட்ரோல் - டீசல் விலை தற்போது உயர தொடங்கியிருக்கின்றது. இந்த நிலையிலேயே பொருளாதார நெருக்கடியில் ஸ்ரீலங்கா சிக்கியிருக்கின்றது.

மேலும், இந்த நிலை அந்நாட்டு அரசை மட்டுமின்றி ஒட்டுமொத்த மக்களையும் திக்க முக்காட செய்ய வைத்திருக்கின்றது. இதன் விளைவாக இலங்கை வாழ் தமிழர்கள் சிலர் ஸ்ரீலங்கா தற்போது வாழ தகுதியற்ற நாடாக மாறியிருப்பதாகக் கருதி அகதிகளாக தமிழகம் வர தொடங்கியிருக்கின்றனர்.

தற்போது இலங்கையில் ஒரு லிட்டர் டீசல் அந்நாட்டு ரூபாய் மதிப்பில் 250 க்கும், பெட்ரோல் 280 க்கும் அதிகமான விலையில் விற்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையை சமாளிக்க இந்தியாவின் டீசல் அனுப்பி வைப்பு உதவும் என நம்பப்படுகின்றது.

நேற்றைய தினம் வரை சென்னையில் ரூ. 102.91 க்கு விற்பனைச் செய்யப்பட்டு வந்த ஒரு லிட்டர் பெட்ரோல், இன்று (மார்ச் 25) ரூ. 103.67-க்கு விற்கப்படுகின்றது. இதேபோல், ரூ. 92.95-க்கு விற்கப்பட்டு வந்த டீசல் இன்று ரூ. 93.71-க்கும் விற்பனைச் செய்யப்படுகின்றது. மிக விரைவில் இந்த விலையிலும் மாற்றம் ஏற்படும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதாவது, 80 காசுகள் வரை உயர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தொடர் எரிபொருள் விலை உயர்விற்கு ரஷ்யா - உக்ரைன் இரு நாடுகளுக்கு இடையிலான போரே காரணம் ஆகும். போர் தற்போதும் தொடர்ச்சியாக நீடித்துக் கொண்டிருப்பதால் இன்னும் பல மடங்கு எரிபொருட்களின் விலை உலகளவில் உயரும் என அஞ்சப்படுகின்றது. இந்த நிலை இந்திய ஏழை மற்றும் நடுத்தர குடும்ப மக்கள் கடுமையாக பாதிக்கும். இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே அண்டை நாட்டிற்கு உதவும் வகையில் மத்திய அரசு கடன் அடிப்படையில் டீசல் உதவியை வழங்க தொடங்கியிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








