எலக்ட்ரிக் வாகன போட்டியில் சீனாவை விரட்டும் போதி தர்மர் மண்... சென்னை, கிருஷ்ணகிரியில் முதல் திட்டம்
இந்தியாவின் முதல் லித்தியம் இயான் பேட்டரி உற்பத்தி திட்டம், தமிழகத்தின் சென்னை மற்றும் கிருஷ்ணகிரியில் செயல்படுத்தப்படவுள்ளது.
இந்தியாவின் முதல் லித்தியம் இயான் பேட்டரி உற்பத்தி திட்டம், தமிழகத்தின் சென்னை மற்றும் கிருஷ்ணகிரியில் செயல்படுத்தப்படவுள்ளது. இதன்மூலம் எலக்ட்ரிக் வாகன உற்பத்தி உள்பட பல்வேறு துறைகளில் சீனாவுக்கு, இந்தியாவால் கடும் சவால் அளிக்க முடியும்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, அவை சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தும் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால், எலக்ட்ரிக் வாகனங்களுக்கு உடனடியாக மாற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. வரும் 2030ம் ஆண்டுக்குள், இந்தியாவில் ஓடும் அனைத்து வாகனங்களும் எலக்ட்ரிக் வாகனங்களாக இருக்க வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதற்கான நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட்டு வந்தாலும், ஒரு சில தடைக்கற்கள் இருக்கத்தான் செய்கின்றன. எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிப்பதில், இந்தியாவுக்கு இருக்கும் மிகப்பெரிய பின்னடைவு லித்தியம் இயான் பேட்டரிகள்தான். லித்தியம் இயான் பேட்டரிகள், எலக்ட்ரிக் வாகனங்களுக்கு இதயம் போன்றவை.

எனர்ஜியை தக்க வைத்து கொள்வதில், லித்தியம் இயான் பேட்டரிகள் வல்லவை. மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்ததாக கருதப்படும் லித்தியன் இயான் பேட்டரிகளில், நீண்ட நேரம் சார்ஜ் நிலைத்து நிற்கும். எலக்ட்ரிக் வாகனங்களில், நீண்ட நேர பயணம் மேற்கொள்பவர்களுக்கு, லித்தியம் இயான் பேட்டரிகள் பேருதவி செய்யும்.

லித்தியம் இயான் பேட்டரிகளை ஒரு மாதம் வரை சும்மா வைத்திருந்தாலும் கூட, வெறும் 5 சதவீதம்தான் சார்ஜ் குறையும். இவை சுமார் 10 ஆண்டுகள் வரை நீடித்து உழைக்கும். லித்தியம் இயான் பேட்டரிகளின் எடை குறைவு என்பது அதன் மற்றொரு சிறப்பம்சம்.

எனவேதான் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்களின் முதல் 'சாய்ஸ்' ஆக லித்தியம் இயான் பேட்டரிகள் உள்ளன. ஆனால் லித்தியம் இயான் பேட்டரிகளின் விலை சற்று அதிகம் என்பதுதான் ஒரு மைனஸ். லித்தியம் இயான் பேட்டரிகளின் விலை அதிகமாக இருப்பதால், எலக்ட்ரிக் வாகனங்களின் விலையும் உயர்வாகவே உள்ளன.

போதாக்குறைக்கு இந்தியாவில் லித்தியம் இயான் பேட்டரி உற்பத்தி பிளாண்ட்களும் இல்லை. இதனால் சீனா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு லித்தியம் இயான் பேட்டரிகள் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன.

இறக்குமதி செய்யப்படும்போது, லித்தியம் இயான் பேட்டரிகளின் விலை இன்னும் உயர்ந்து விடுகிறது. கடந்த 2017ம் ஆண்டில் மட்டும், சுமார் 10 ஆயிரம் கோடி மதிப்பிலான லித்தியம் இயான் பேட்டரிகளை இந்தியா இறக்குமதி செய்துள்ளது.

எனவே எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற வேண்டுமானால், லித்தியம் இயான் பேட்டரி உற்பத்தி பிளாண்ட்களை இந்தியாவில் அதிகரித்தே ஆக வேண்டும் என மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பும் கூட பரிந்துரை செய்திருந்தது.

லித்தியம் இயான் பேட்டரிகளை இறக்குமதி செய்வதற்கு பதிலாக, இந்தியாவிலேயே உற்பத்தி செய்தால், அதன் விலை வெகுவாக குறைந்து விடும். லித்தியம் இயான் பேட்டரிகளின் விலையை குறைத்தால் மட்டுமே, அனைத்தும் எலக்ட்ரிக் வாகனங்கள் என்ற மத்திய அரசின் கனவு 2030ம் ஆண்டு பலிக்கும் என்ற சூழல் நிலவு வருகிறது.

ஏனெனில் வெறுமனே வெளிநாடுகளில் இருந்து பொருட்களை எல்லாம் இறக்குமதி செய்து, இந்தியாவில் 'அசெம்பிள்' மட்டும் செய்து கொண்டிருந்தால், எலக்ட்ரிக் வாகனங்களில் விலையை குறைக்க முடியாது அல்லவா? எனவே லித்தியம் இயான் பேட்டரிகளை தயாரிக்கும் முயற்சியில், இந்தியா தீவிரமாக இறங்கியது.

தற்போது அதற்கு பலன் கிடைத்து விட்டது. ஆம், இந்தியா மிக விரைவில் உள்நாட்டிலேயே லித்தியம் இயான் பேட்டரிகளை தயாரிக்க போகிறது. எனவே சீனா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளை சார்ந்து இருக்க வேண்டிய நிலை இனி ஏற்படாது என கருதப்படுகிறது.

இந்தியாவின் முதல் லித்தியம் இயான் பேட்டரி திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், மத்திய அரசின் கவுன்சில் ஆப் சயின்டிபிக் மற்றும் இன்ட்ஸ்ட்ரியல் ரிசர்ச் (CSIR) அமைப்பின் கீழ் செயல்படும் சென்ட்ரல் எலக்ட்ரோ கெமிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (CECRI) மற்றும் ராசி சோலார் பவர் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு இடையே கையெழுத்தாகியுள்ளது.

இதில், முக்கியமானதாக கருதப்படும் CECRI இன்ஸ்டிடியூட், தமிழகத்தின் காரைக்குடியில் செயல்பட்டு வருகிறது என்பது கவனிக்கத்தக்கது. இதனிடையே மத்திய அரசின் CSIR அமைப்பின் கீழ் CECRI மட்டுமின்றி, மேலும் பல லேபராட்டரிகளும், பீல்டு ஸ்டேஷன்களும் நாடு முழுவதும் இயங்கி வருகின்றன.

எனவே லித்தியம் இயான் பேட்டரி திட்டத்தில், CSIR அமைப்பின் கீழ் செயல்படும் புது டெல்லி தேசிய இயற்பியல் ஆய்வகம் (CSIR-NPL), கொல்கத்தா சென்ட்ரல் கிளாஸ் அண்டு செராமிக் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (CSIR-CGCRI), ஐதராபாத் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜி (CSIR-IICT) ஆகியவையும் பங்கேற்கின்றன.

எனினும் தமிழகத்தின் CECRIதான் முக்கியமான இன்ஸ்டிடியூட் ஆக திகழ்கிறது. எனவே புரோட்டோடைப் (சாம்பிள், மாடல்) லித்தியம் இயான் பேட்டரிகளை உருவாக்குவதற்கான டெமோ வளாகம் ஒன்று, தமிழகத்தின் தலைநகர் சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் புரிந்துணர்வு ஒப்பந்தப்படி, லித்தியம் இயான் பேட்டரி உற்பத்தி வளாகம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை ராசி சோலார் பவர் பிரைவேட் லிமிடெட் எடுக்கவுள்ளது.

எலக்ட்ரிக் வாகன உற்பத்தில், உலக வல்லரசான அமெரிக்காவை கூட பின்னுக்கு தள்ளிவிட்டு, சீனா வெகு வேகமாக முன்னேறி கொண்டிருக்கிறது. லித்தியம் இயான் பேட்டரிகளை சீனா அதிகமாக தயாரிப்பதும் அதற்கு ஒரு காரணமாக உள்ளது.

இனி இந்தியாவும் லித்தியம் இயான் பேட்டரிகளை தயாரிக்க தொடங்கி விட்டால், இறக்குமதி செய்யப்படும் அதன் அளவு, தொடக்கத்திலேயே கணிசமாக குறைந்து விடும். எனவே எலக்ட்ரிக் வாகன உற்பத்தி உள்பட பல்வேறு துறைகளில், சீனாவுக்கு கடும் சவால் அளிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் லித்தியம் இயான் பேட்டரிகள் வெறுமனே எலக்ட்ரிக் வாகனங்களில் மட்டும் பயன்படுத்தப்படுவது கிடையாது. டெலிபோன் டவர்கள், மருத்துவ உபகரணங்களிலும் கூட லித்தியன் இயான் பேட்டரிகளின் பயன்பாடு பெரிய அளவில் உள்ளது.

முன்னதாக இ மோஷன், ஆம்பியர் உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனங்கள், இந்திய அளவில் வெகு வேகமாக முன்னேறி கொண்டிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் மூலமாக தனது எலக்ட்ரிக் வாகன தேவையை இந்தியா பூர்த்தி செய்து கொண்டு, சீனாவுக்கு பதிலடி கொடுத்தால், அது நாம் பெருமைப்பட வேண்டிய விஷயமாகதான் இருக்கும்!


Click it and Unblock the Notifications








