ஆளில்லா விமானத்தை உருவாக்க இந்தியா- அமெரிக்கா கூட்டணி... எரிச்சலில் சீனா!
இந்திய எல்லைப்பகுதிகளில் சீனா அவ்வப்போது வாலாட்டுவது வழக்கமான விஷயமாக இருந்து வந்தது ஆனால், கடந்த மாதம் இந்திய எல்லைக்குள் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைந்ததால் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். சீன தரப்பிலும் பல ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இம்சைகளை பொறுத்துக் கொண்டு அமைதியை கடைபிடித்து வந்த இந்தியாவுக்கு ராணுவ வீரர்களின் உயிரிழப்பு பெரும் சினத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான சமாதான பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்து வரும் இவ்வேளையில், நேரடி மோதலில் ஈடுபடாமல், சீனாவுடனான வர்த்தக, ராஜ்ய ரீதியிலான உறவுகளை முறித்துக் கொள்ளும் நடவடிக்ககளை தீவிரம் காட்டி வருகிறது.

சீனாவுக்கு எதிராக இந்தியா எடுத்து வரும் இந்தியா எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகள் உலக அளவில் பல்வேறு நாடுகளின் கவனத்தை பெற்றிருக்கிறது. குறிப்பாக, சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள அமெரிக்கா இந்தியாவுடனான தனது நெருக்கத்தை அதிகரித்து வருவதுடன், ராணுவ ரீதியில் பல்வேறு உதவிகளை வெளிப்படையாக அறிவித்து வருகிறது.

இந்த சூழலில் ராணுவ பயன்பாட்டிற்கான புதிய ஆள் இல்லா விமானத்தை தயாரிக்கும் திட்டத்தை இந்தியா- அமெரிக்கா இணைந்து செயல்பட உள்ளது தெரிய வந்துள்ளது. அமெரிக்காவில் நடந்த அமெரிக்க- இந்திய வர்த்தக கருத்தரங்கு ஒன்றில், அமெரிக்க ராணுவத் தலைமையகத்தின் உயர் அதிகாரி பங்கேற்று பேசினார்.

அப்போது, ராணுவ பயன்பாட்டுக்கான புதிய ஆள் இல்லா விமானத்தை இரு நாடுகளும் இணைந்து தயாரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். வரும் செப்டம்பர் 14ந் தேதி இந்த திட்டத்தை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான ஆலோசனைக் கூட்டணம், இரு நாடுகளை சேர்ந்த அதிகாரிகளுக்கு மத்தியில் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆள் இல்லாமல் இயங்கும் இந்த புதிய விமானத்தை அமெரிக்க விமானப்படை ஆராய்ச்சி மையம், இந்திய விமானப்படை, மத்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகம் மற்றும் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்க உள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த புதிய ஆள் விமானம் பல நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் உருவாக்கப்படும். எல்லையோர கண்காணிப்பு, தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் வகையில் இந்த ஆள் விமானம் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இந்தியா - அமெரிக்கா இடையில் COMCASA என்ற ஒப்பந்தம் கையெழுத்தாகியது. இந்த திட்டத்தின் கீழ், சீனாவுக்கு சொந்தமான போர் கப்பல் அல்லது நீர் மூழ்கி கப்பல்களின் நடமாட்டம் அல்லது எல்லைக்குள் வருவதை கண்டறிந்தால் இந்தியாவுடன் உயர் பாதுகாப்பு முறையில் என்கிரிப்ட் செய்யப்பட்ட தகவல்களை பரிமாறிக் கொள்ள வழிவகை செய்யப்பட்டது.

மேலும், இந்தியாவின் பாதுகாப்பு துறைக்கு தேவையான தொழில்நுட்ப பகிர்மானம், செயற்கைகோள் தகவல்களை இருநாடுகளும் பகிர்ந்துகொள்வதற்கான வழிமுறைகள் ஏற்பட்டன. இது ஏற்கனவே சீனாவுக்கு கடும் எரிச்சலை தந்தது. இந்த சூழலில், அதிநவீன ஆள் இல்லா விமானத்தை இந்தியாவுடன் இணைந்து தயாரிக்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது சீனாவுக்கு புது தலைவலியை தரும் விஷயமாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








