இந்தியா ஏழை நாடுனு யாருங்க சொன்னா? வாகனங்கள் உற்பத்திக்கு மட்டும் எவ்வளவு செலவாகுது தெரியுமா?
உலகளவில் மிக பெரும் ஆட்டோமொபைல் சந்தைகள் வரிசையில் சமீபத்தில்தான் ஜப்பானை முந்தி நமது இந்தியா 3வது இடத்தை பிடித்தது. இந்த நிலையில் கடந்த 2022-23 நிதியாண்டில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கைகள் எவ்வளவு என்ற விபரம் வெளியாகியுள்ளது. கேட்போரை வாய் பிளக்க வைக்கும் அந்த விபரங்களை விரிவாக இனி பார்க்கலாம்.
கொரோனா வைரஸ் பரவலினால் உலகமே தலைக்கீழானதை பற்றி நான் கூற வேண்டியது இல்லை. இதில் ஆட்டோமொபைல் துறை மட்டும் தப்பித்து இருக்க முடியுமா என்ன? கிட்டத்தட்ட அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் சில மாதங்களுக்கு தொழிற்சாலையை 2020ஆம் ஆண்டில் ஒருமுறையும், 2021ஆம் ஆண்டில் ஒருமுறையும் மூடின.

இதனால் ஏற்பட்ட நஷ்டங்களுக்கு இப்போதுவரையில் சில நிறுவனங்கள் கஷ்டப்பட்டு கொண்டிருப்பதை மறுப்பதற்கில்லை. இருப்பினும், சமீப காலத்தில், குறிப்பாக கடந்த 2022ஆம் ஆண்டில் இருந்து இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் வாகனங்கள் விற்பனை மீண்டும் மெல்ல மெல்ல அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இதனால் வாகன உற்பத்தியும் உயர துவங்கியுள்ளது.
இதனை கடந்த நிதியாண்டில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்கள் எண்ணிக்கை தெளிவாக வெளிக்காட்டுகிறது. 2022 ஏப்ரல் 1ஆம் தேதி ஆரம்பித்து கடந்த 2023 மார்ச் 31ஆம் தேதியோடு முடிவுற்ற 2022-23 நிதியாண்டில் இந்தியாவில் சுமார் 2.7 கோடி ஆட்டோமொபைல் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. பிரிமஸ் பார்ட்னர்ஸ் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையின்படி, வாகன உற்பத்தி ஆனது அனைத்து விதமான பிரிவுகளிலும் அதிகரித்துள்ளது.

2.7 கோடி வாகன உற்பத்திக்கு செலவிடப்பட்ட தொகை 108 பில்லியன் டாலர்கள் ஆகும். இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.8 இலட்சத்து 86 ஆயிரத்து 238 கோடி ஆகும். இவ்வளவு அதிக தொகை வாகன உற்பத்திக்காக செலவிடப்பட்டாலும் உலகின் மிக பெரும் ஆட்டோமொபைல் மார்க்கெட் வரிசையில் நம் இந்தியா 3வது இடத்திலேயே உள்ளது. அப்படியென்றால், முதல் இரு இடத்தில் இருக்கும் சீனா மற்றும் அமெரிக்கா நாடுகளில் எவ்வளவு தொகைக்கு ஆட்டோமொபைல் வாகனங்கள் ஒவ்வொரு வருடத்திலும் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதை நினைத்து பாருங்கள்.
இந்தியர்கள் எப்போதுமே விலை குறைவான வாகனங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பர் என்பது எல்லாருக்கும் தெரிந்ததே. அதிலிலும் குறிப்பாக, கார்களை வாங்குவோரை காட்டிலும் இருசக்கர வாகனமே நமக்கு போதும் என நினைப்போரே நம் நாட்டில் அதிகம். இதன் காரணமாகவே, கடந்த 2022-23 நிதியாண்டில் விற்கப்பட்ட 2.7 கோடி வாகனங்களில் கிட்டத்தட்ட 2 கோடி வாகனங்கள் இருசக்கர வாகனங்களாகும்.

உலகின் மிக பெரும் ஆட்டோமொபைல் சந்தையாக விளங்கும் சீனாவிலும் இதே எண்ணிக்கையிலான 2-வீலர்களே கடந்த நிதியாண்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன என்பது கூடுதல் தகவல். 2 கோடி 2-வீலர்கள் போக, மீதி இருக்கும் 70 இலட்சம் வாகனங்களில் 10 இலட்ச வாகனங்கள் கமர்ஷியல் வாகனங்களாகும், அதாவது பயணிகள் கார்கள் அல்லாத வாகனங்கள். கார்களில் மிட்-சைஸ் மற்றும் ஃபுல்-சைஸ் எஸ்யூவி கார்கள் அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இந்தியா எந்த அளவிற்கு பெரிய ஆட்டோமொபைல் சந்தை என்பதை இந்த புள்ளி விபரங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். அதிலிலும் குறிப்பாக, சீனாவிற்கு டஃப் கொடுக்கும் வகையில் ஒரே வருடத்தில் சுமார் 2 கோடி இருசக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டு இருப்பது உண்மையில் ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. முதலீடுகள் அதிகரிப்பதால், வரும் காலங்களில் சீனா மற்றும் அமெரிக்காவை இந்தியா முந்தினாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை.


Click it and Unblock the Notifications









