கார்கள் பரிசளித்து இந்திய ராணுவத்துக்கு ஐஸ் வைக்கும் வெளிநாட்டு கார் நிறுவனம்!! என்ன மேட்டரா இருக்கும்?
ரெனால்ட் (Renault) நிறுவனத்தில் இருந்து கார்கள் நமது இந்திய இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இருந்து இந்திய இராணுவத்திற்கு பல்வேறு விதமான கார்கள் பல்வேறு விதமான கார் பிராண்ட்களில் இருந்து சென்றுள்ளன. அந்த வகையில்தான் தற்போது ரெனால்ட் இந்தியா நிறுவனத்தில் இருந்து கார்கள் இராணுவத்தின் பயன்பாட்டிற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த கார்கள் ரெனால்ட் இந்தியா நிறுவனத்தால் பரிசாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, இராணுவத்திற்கு கார்கள் விலைக்கு கொடுக்கப்படவில்லை. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பொதுவாகவே இராணுவத்தினர் பயன்படுத்தும் வாகனங்களை எல்லாம் பார்த்தால், மிகவும் ஆக்ரோஷமானதாகவும், வித்தியாசமான வடிவங்களிலும் இருக்கும். ஏனெனில், அந்த அளவிற்கு அவர்கள் செல்லும் பாதைகள் கரடு முரடானதாக இருக்கும். அதேநேரம், சில இலகுவான வேலைகளுக்காக பொது மக்கள் பயன்படுத்தக்கூடிய சாதாரண கார்களும் இராணுவத்திற்கு வழங்கப்படுகின்றன.

கடந்த காலங்களில் இருந்து இந்திய இராணுவத்திற்கு மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ் போன்ற இந்திய கார் நிறுவனங்கள் பல்வேறு விதமான கார்களை வழங்கியுள்ளன. சில கார்கள் பிரத்யேகமாக இராணுவத்திற்கு என்றே உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், தற்போது இந்திய இராணுவத்திற்கு கார்களை வழங்கி இருப்பது பிரெஞ்சு நாட்டை சேர்ந்த பிரபல கார் நிறுவனமான ரெனால்ட் ஆகும். இந்தியாவில் செயல்படும் ரெனால்ட் இந்தியா நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கார்களை இராணுவத்திற்கு வழங்கியுள்ளது.
ரெனால்ட் நிறுவனத்தின் க்விட், கிகர் மற்றும் டிரைபர் கார்கள் இந்திய இராணுவத்தின் தீ மற்றும் சீற்றம் படைப்பிரிவிற்கு பரிசாக வழங்கி உள்ளது. இந்த படைப்பிரிவு ஆனது ஜம்மூ-காஷ்மீரில் உள்ள உதாம்பூரில் அமைந்துள்ளது. 14 கார்ப்ஸ் என்கிற பெயரிலும் இந்த யூனிட் அறியப்படுகின்றது. மிகுந்த கவனத்திற்குரிய கார்கில்-லே பகுதி மற்றும் சியாசென் பனிப்பாறை பகுதியை கண்காணிப்பதே இந்த யூனிட்டின் முக்கிய பணியாகும்.

மேற்கூறப்பட்ட பகுதிகள் பாகிஸ்தான் மற்றும் சீன எல்லைகளுக்கு அருகே அமைந்துள்ளதால், இவை மிகுந்த கவனத்திற்குரிய இடங்களாக கருதப்படுகின்றன. இத்தகைய பகுதிகளை கண்காணிக்கும் படைவீரர்களுக்கு கார்களை வழங்கியிருப்பது குறித்து ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் விற்பனை & சந்தைப்படுத்துதல் பிரிவின் துணை தலைவர் சுதிர் மல்ஹோத்ரா கூறுகையில், "இந்த வாகனங்கள் மூலம் 14 கார்ப்ஸ் பிரிவிற்கு எங்கள் ஆதரவை வழங்குவதில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்.
இராணுவத்தின் முக்கியமான சேவைக்கு நன்றி தெரிவிக்கவும். அவர்களின் இயக்கம் மற்றும் செயல்திறனை மேம்படுத்தவும் இந்த பங்களிப்பு ஒரு வழியாகும்" என்றார். ரெனால்ட் நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் தற்சமயம் க்விட், கிகர் மற்றும் டிரைபர் என 3 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. இதில் ரெனால்ட்டின் விலை குறைவான ஹேட்ச்பேக் காரான க்விட் ஆர்.எக்ஸ்.இ, ஆர்.எக்ஸ்.எல் (ஆப்ஷ்னல்), ஆர்.எக்ஸ்.டி மற்றும் கிளிம்பர் என மொத்தம் 4 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகின்றன.

க்விட் காரில் 1 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 68 பிஎஸ் மற்றும் 91 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த பெட்ரோல் என்ஜினை 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் உடன் வாங்கலாம். கிகர் ஆனது ரெனால்ட்டின் சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார் ஆகும். இது மொத்தம் 5 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.
கிகரில் 1 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1 லிட்டர் டர்போ பெட்ரோல் என இரு விதமான என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. ரெனால்ட் டிரைபர் ஆனது சப்காம்பெக்ட் க்ராஸ்ஓவர் எம்பிவி கார் ஆகும். இந்தியாவில் ரெனால்ட் விற்பனை செய்வதிலேயே அளவில் பெரிய காரான டிரைபரில் 6இல் இருந்து 7 நபர்கள் சவுகரியமாக அமர்ந்து பயணம் செய்யலாம். இந்த காரில் 1 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், இந்திய இராணுவத்திற்கு மஹிந்திரா, டாடாவில் இருந்து பல்வேறு வாகனங்கள் சென்றுள்ளன. ஆனால், ரெனால்ட்டில் இருந்து கார்கள் அனுப்பப்படுவது அரிதான ஒன்றே. இந்த கார்களை பரிசாக வழங்கியுள்ளதாக ரெனால்ட் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. திடீரென இந்த பரிசு பொருளுக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை.


Click it and Unblock the Notifications









