ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கிய பிக்பாஸ் போட்டியாளர்.. முதல்ல வீட்ட விட்டு வெளிய வந்தவரா இவரு!!
பிரபல இந்திய குத்துச்சண்டை வீரரும், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான நீரஜ் கோயத், மிகவும் சொகுசு அம்சங்கள் நிறைந்த ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) காரை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் அவர் அந்த காருடன் இருக்கும் வீடியோ மற்றும் படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. அவர் வாங்கி இருப்பது ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் (Rolls Royce Phantom) கார் மாடலாகும். இந்திய தொழிலதிபர்கள் மற்றும் முன்னணி திரை நட்சத்திரங்கள் பலரின் பிரியமான கார் மாடலாக ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் காட்சியளிக்கின்றது.
இதையே தற்போது நீரஜ் கோயத் வாங்கி இருக்கின்றார். மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் வைத்தே இந்த சொகுசு வாகனத்தை அவர் வாங்கியிருக்கின்றார். தன்னுடைய இந்த கொள்முதலை அவரே அவருடைய யுட்யூப் சேனல் வாயிலாக தெரிவித்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரின் டெலிவரி தொடங்கி அனைத்து நிகழ்வுகளையும் காட்சிப்பதிவு செய்து அவர் வெளியிட்டிருக்கின்றார்.

குத்துச் சண்டை வீரராக இவரை அறிந்தவர்களைவிட, பிக்பாஸ் போட்டியின் வாயிலாக அவரை அறிந்தவர்களே அதிகம் ஆகும். ஏனெனில், அந்த நிகழ்ச்சியில் இருந்து முதலாவது ஆளாக வெளியேறிய போட்டியாளர் அவரே ஆவார். நீரஜ் கோயத் வாங்கியிருப்பது முந்தைய தலைமுறை ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் ஆகும்.
இது சீரிஸ் VII என அழைக்கப்படுகிறது. ஆமாங்க, இது யூஸ்டு கார் மாடல்தான். தற்போது, விற்பனையில் இருப்பது சீரிஸ் VIII ஆகும். அதன் விலை ரூ. 8.99 கோடிக்கும் அதிகம் ஆகும். இந்த காரை வாடிக்கையாளர்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப தனிபயனாக்கும் செய்துக் கொள்ளும் வாய்ப்பை ரோல்ஸ் ராய்ஸ் வழங்குகின்றது.
இதை செய்யும்பட்சத்தில் அதன் விலை இன்னும் அதிகமாகவே இருக்கும். அந்தவகையில், நீரஜ் கோயத்-ம் இந்த காரில் அவரின் விருப்பத்திற்கு ஏற்ப கூடுதல் சில அம்சங்களைச் சேர்த்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளையில், இது பழைய வெர்ஷன் மற்றும் யூஸ்டு கார் என்பதால் இப்போது விற்பனையில் இருப்பதைவிட ரூ. 3 கோடி முதல் ரூ. 4 கோடி வரை குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் கார் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் பதிப்பில், பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் டெயில்லைட்கள் ஆகியவை புதுப்பிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், வெளிப்புறத்தின் கவர்ச்சியான தோற்றத்திற்காக பளபளப்பான கருப்பு வண்ண் பூசப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதன் உட்பக்கம் மாற்று நிறத்தால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும்.
குறிப்பாக, நீரஜ் கோயத் வாங்கியிருக்கும் பாந்தம் காரின் உட்பக்கம் பழுப்பு வண்ணத்தால் அழகுப்படுத்தப்பட்டு உள்ளது. கண்களைக் கவரும் தோற்றத்தை மட்டுமல்ல மனதைக் கொள்ளையடிக்கும் சிறப்பம்சங்களும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக, இதன் இருக்கை மிகவும் மிருதுவானதாக இருக்கும். மேலும், சாலையில் பயணிக்கும் மிதக்கின்ற அனுபவத்தையே இந்த கார் வழங்கும்.
இதுதவிர, இந்த காரில் சன்ரூஃப் வழங்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து, உட்பக்கத்தில் பிரீமியம் உணர்வைக் கூடுதலாக்கும் பொருட்டு நட்சத்திரத்தை பிரதிபலிக்கும் ரூஃப் லைட்டுகள், 15 ஸ்பீக்கர்கள் அடங்கிய மியூசிக் சிஸ்டம், பிஎம்டபிள்யூ 7 சீரிஸிலிருந்து பெறப்பட்ட தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவற்றை இந்த கார் தாங்கியிருக்கின்றது.
ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் VIII காரில் 6.7 லிட்டர் நேச்சுரல் அஸ்பிரேட்டட் வி12 வகை எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 460 பிஎஸ் பவரையும், 720 என்எம் டார்க்கையும் உற்பத்தி செய்யும் ஆற்றல்மிக்கது. இதன் பின் சக்கரங்களுக்கு 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வாயிலாகவே ஆற்றல் கடத்தப்படுகின்றது.
இதுபோன்று எஞ்சின் விஷயத்திலும், சிறப்பம்சங்கள் விஷயத்திலும் இந்த கார் தலை சிறந்த வாகனமாக இருப்பதால்தான் இந்திய தொழிலதிபர்கள் மற்றும் பணக்கார நடிகர்கள் மத்தியில் அதற்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், பாலிவுட் திரையுலகின் ஜாம்பவான் நடிகரான அமிதாப் பச்சன் கூட பாந்தம் காரின் பழைய தலைமுறை வெர்ஷனை வைத்திருந்தார். ஆனால், அது இப்போது அவரிடத்தில் இருக்கின்றதா என்பது தெரியவில்லை. இவரை இன்னும் பலரும் இந்த காரை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையிலேயே நீரஜ் அவர்களின் வரிசையில் ஒருவராக இணைந்திருக்கின்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நீரஜ் கோயத், பிக் பாஸ் வீட்டிலிருந்து ஆரம்பத்திலேயே வெளியேற்றப்பட்டாலும் அவர் சொந்த வாழ்க்கையில் தொடர்ச்சியாக வெற்றியைச் சந்தித்து வருகின்றார் என தெரிகின்றது. இதற்கு சான்றாகவே அவரின் இந்த ஆடம்பர கார் கொள்முதல் அமைந்திருக்கின்றது. மேலும், இதுபோன்று இன்னும் பல விலை உயர்ந்த கார்களை அவர் வாங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








