யூஸ் ஆகாம ஓரமா கிடந்த காருக்கு 10 லட்ச ரூபாயில் அடித்த ஜாக்பாட்! 10 மடங்கு அதிக விலையில் வாங்கிய தொழிலதிபர்!
மாருதி 800 (Maruti 800), இந்தியாவில் இந்த காருக்கு அறிமுகமே தேவை இருக்காது என நினைக்கிறேன். அந்த அளவிற்கு ஒரு காலத்தில் மிக பிரபலமாக இருந்த இந்த காரை இப்போது தொழிலதிபராக உள்ள பலரும் அவர்களது இளம் பருவத்திலும், தொழில் துவங்கிய புதியதிலும் பயன்படுத்தி உள்ளனர். அவ்வாறு மாருதி 800 காரை ஒரு காலத்தில் பயன்படுத்தியவர், 1991ஆம் ஆண்டில் கான்ஃபிடண்ட் ரியல் எஸ்டேட் (Confident Real Estate) குழுமத்தைத் தொடங்கி, தற்போது நாட்டின் பணக்கார வர்த்தகர்களில் ஒருவராகத் திகழும் டாக்டர் சி.ஜே ராய் (C.J Roy) ஆவார்.
பல கோடீஸ்வரர்களைப் போலவே இவரிடமும் பல விலையுயர்ந்த கார்கள் சொந்தமாக இருந்தாலும், அவரது முதல் கார் ஒரு சாதாரண மாருதி 800 ஆகும். இருப்பினும், ஒரு கட்டத்தில் தனது முதல் காரை சி.ஜே ராய் விற்றுள்ளார். இந்த நிலையில், இந்த கோடீஸ்வரர் அந்த மாருதி 800 காரை 27 ஆண்டுகளுக்குப் பிறகு 10 லட்சம் ரூபாய்க்கு மீண்டும் வாங்கியுள்ளார்.

கடந்த வாரம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் சி.ஜே ராய் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில், 1994-ஆம் ஆண்டில் 25 வயதில் வாங்கிய தனது முதல் காரான மாருதி 800 பற்றிப் பேசியிருந்தார். சில ஆண்டுகள் பயன்படுத்திய பின், எஸ்டீம் (Esteem) கார் வாங்கியபோது அதை விற்றுவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
அதன்பிறகு பல கார்களை வாங்கியிருந்தாலும், தனது முதல் கார் பற்றிய ஏக்கம் இவரது மனதில் இருந்திருக்கிறது. சி.ஜே ராய் என்கிற தனது பெயரின் சுருக்கமாக சி.கே.ஜே 3637 என பதிவு எண் கொண்ட தனது முதல் மாருதி 800 காரைக் கண்டுபிடித்துத் தர உதவ வேண்டும் என்று தனது சமூக வலைத்தள பின்தொடர்பாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.

மேலும், காரை மீண்டும் வாங்க சுமார் 10 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யத் தயாராக இருப்பதாகவும் அந்த வீடியோவில் குறிப்பிட்டிருந்தார். அந்த வீடியோ வெளியானதும் உடனடியாக வைரலானது. ஒரு வாரத்திற்குள்ளாகவே, ராய் தனது முதல் மாருதி 800 காருடன் நிற்கும் புதிய வீடியோ வெளியாகி உள்ளது. அந்தக் கார் தற்போதைய உரிமையாளர்களால் கைவிடப்பட்டு, செயல்படாத நிலையில் இருந்திருக்கிறது.
காரின் தற்போதைய உரிமையாளர் அந்த வீடியோவையும், 10 லட்சம் ரூபாய் சலுகையையும் அறிந்திருக்க வேண்டும். அவர் காரின் வீடியோவை சி.ஜே ராயின் மேலாளருடன் பகிர்ந்துகொண்டார். அதன் மூலமாகவே ராய்க்கு தனது கார் இருப்பதைப் பற்றித் தெரியவந்துள்ளது. அந்த வீடியோவில், தற்போது தன்னிடம் புகாட்டி வேய்ரான் (Bugatti Veyron) உட்பட பல விலையுயர்ந்த கார்கள் சொந்தமாக இருந்தாலும், தனது முதல் காரைப் போல் எதுவும் சிறப்பானது இல்லை என்று ராய் கூறியுள்ளார்.

உணர்வுபூர்வமான மதிப்பு காரணமாகவே, அந்தக் காரைக் கண்டுபிடித்து மீண்டும் வாங்க அவர் முடிவு செய்தார். 1994ஆம் ஆண்டில் 1.10 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய காரை, தற்போது கிட்டத்தட்ட 10 மடங்கு அதிக விலை கொடுத்து மீண்டும் வாங்கியிருப்பதாக சமூக வலைத்தள பதிவில் ராய் குறிப்பிட்டுள்ளார். முன்பு பயன்படுத்திய முதல் வாகனத்தைத் தேடிச்சென்று பலர் வெற்றிகரமாக வாங்கிய நிகழ்வுகளை இதற்கு முன்னரும் சிலமுறை பார்த்துள்ளோம்.
இருப்பினும், மாருதி 800 போன்ற ஒரு காருக்கு இவ்வளவு பெரிய தொகையைச் செலுத்தி வாங்கியது எங்களுக்கு தெரிந்தவரையில் இதுவே முதல்முறை. சி.ஜே ராய் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் என்றாலும், அவரும் அவரது குடும்பத்தினரும் துபாயில் வசிக்கின்றனர். அங்கே அவருக்கு ரோல்ஸ் ராய்ஸ் (Rolls-Royce), லம்போர்கினி (Lamborghini) மற்றும் புகாட்டி வேய்ரான் போன்ற விலையுயர்ந்த கார்கள் சொந்தமாக உள்ளன.

அவரது கேரேஜில் உள்ள கார்களின் மொத்த மதிப்பு சுமார் 10 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. இந்தியாவிலும் அவருக்கு சொத்துக்களும் கார்களும் உள்ளன. சமீபத்தில், தனது 12வது ரோல்ஸ் ராய்ஸ் காரை ராய் வாங்கும் வீடியோ ஒன்று வெளியானது. அவர் இந்தியாவில் வாங்கிய அந்தக் கார், ஒரு ரோல்ஸ் ராய்ஸ் பாண்டோம் VIII ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மற்ற புத்திசாலித்தனமான தொழிலதிபர்களைப் போலவே, சி.ஜே ராய் அவர்களும் ஒரு புதிய காரை வாங்குவதை விடக் குறைந்த செலவில் ஒரு பயன்படுத்திய காரை வாங்குவதை விரும்பக் கூடியவராக உள்ளார். சமீபத்தில் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் பாண்டோம் VIII காரையும் பிக் பாய் டாய்ஸ் மூலமாகவே வாங்கி இருந்த நிலையில், தற்போது தனது முதல் காரை ரூ.10 லட்சத்தில் மீண்டும் வாங்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications









