மனதை கொள்ளை கொள்ளும் தேக்கு மர கார்... பஞ்சாப் இளைஞர் அசத்தல்!!
கார்பன் ஃபைபர், அலுமினிய பாகங்கள் என்று நவீன கட்டுமானத்திற்கு கார் தயாரிப்பு சென்று கொண்டிருக்கும் நிலையில், பஞ்சாபை சேர்ந்த இளைஞரும், அவரது தந்தையும் இணைந்து தேக்கு மர பாகங்களை வைத்து ஒரு காரை தயாரித்துள்ளனர்.
அழகு பொருளாக வைக்கும்படி இல்லாமல், சாலையில் ஓட்டிச் செல்லத்தக்க அனைத்து தகுதிகள் மற்றும் அம்சங்களுடன் இந்த கார் வடிவமைக்கப்பட்டிருப்பதே முக்கிய விஷயம். மிக அட்டகாசமாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மரத்தாலான கார் பற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

பாட்டியாலா வாலா
பஞ்சாப் மாநிலம், பாட்டியாலாவை சேர்ந்த அமன்தீப் சிங் என்ற இளைஞர்தான் இந்த மரத்தாலான காரை ஊக்கமுடன் வடிவமைத்து உருவாக்கியுள்ளார். கல்லூரி படிக்கும்போதிலிருந்து இந்த காரை உருவாக்குவது பற்றி கனவு கொண்டிருந்தார். அது எப்படி சாத்தியமானது தெரியுமா?

தந்தை ஒத்துழைப்பு
அமன்தீப் சிங்கின் தந்தை ஒரு தச்சு தொழிலாளி. 45 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தச்சுத் தொழிலில் அனுபவம் கொண்டவர். தந்தையின் தச்சு தொழிலில் அவ்வப்போது உதவுவதால் அமன்தீப் சிங்கிற்கும் சற்று அனுபவம் இருந்துள்ளது. தனது விருப்பத்தை தந்தையிடம் தெரிவித்தவுடன் அவரும் ஓகே சொல்லிவிட்டாராம். உடனே இந்த கார் தயாரிப்பை துவங்கிவிட்டனர்.

இரண்டரை மாதங்களில்...
இரண்டரை மாதங்களில் இரவு பகல் பாராமல் உழைத்து இந்த மரத்தாலான காரை உருவாக்கியதாக தெரிவித்துள்ளார் அமன்தீப் சிங். அவரது தந்தை மிகுந்த சிரத்தையுடன் இந்த காரை உருவாக்குவதற்கு ஒத்துழைப்பு தந்துள்ளார்.

அதிக செலவு
இந்த காரின் பாடி பேனல்கள் அனைத்தும் தேக்கு மரத்தில் வடிக்கப்பட்டிருக்கிறது. அதிக உறுதியும், பளபளப்பும் இருப்பதற்காக தேக்கு மரத்தை பயன்படுத்தியதாகவும் அமன் தீப் சிங் கூறினார். மேலும், இதற்கு அதிக செலவு பிடித்ததாகவும் தெரிவித்தார்.

மாருதி 800 எஞ்சின்
மரத்தாலான இந்த கார் காட்சி பொருளாக இல்லாமல், சாதாரண கார்களை போன்று நல்ல ஓடும் கண்டிஷனில் தயாரித்துள்ளனர். மாருதி 800 காரின் எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் போன்ற மெக்கானிக்கல் பாகங்களை பயன்படுத்தியுள்ளனர்.

சிறப்பான பயணம்
இதுவரை 20,000 கிமீ தூரம் இந்த காரை ஓட்டியிருப்பதாக அமன்தீப் சிங் தெரிவித்தார். மேலும், சாலைகளில் செல்லும்போது அனைவரும் இந்த காரை பார்த்து ஆச்சரியப்பட்டு போவதாகவும் பெருமிதத்துடன் கூறுகிறார்.

முயற்சி தொடரும்
நண்பர்களை வைத்து இந்த காரில் அவ்வப்போது ரவுண்டு சென்று, அவர்களுக்கும் ஒரு புதுவித அனுபவத்தை வழங்கி வருகிறார் அமன்தீப் சிங். பழைய கார்களையும், விண்டேஜ் அந்தஸ்து கொண்ட கார்களையும் இதுபோன்று மரத்தாலான காராக மாற்றும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட போவதாக அமன்தீப் தெரிவித்தார்.

சுத்தமாக வைத்திருப்பேன்...
அவ்வப்போது இந்த காரை தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தப்படுத்துவதுடன், பாலிஷ் போட்டும் மெருகு குலையாமல் பாதுகாத்து வருவதாக அமன்தீப் சிங் கூறினார்.


Click it and Unblock the Notifications