இந்தியாவில் இந்த காரை வாங்கிய முதல் நபர் தல டோனிதான்... விலையை கேட்டு மயக்கம் போட்டு விடாதீர்கள்...
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் தல டோனி மலைக்க வைக்கும் வகையில் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவர் மகேந்திர சிங் டோனி. தல என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் டோனி கார் மற்றும் பைக்குகள் மீது மிகுந்த காதல் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். இவரிடம் ஏராளமான விலை உயர்ந்த கார் மற்றும் மோட்டார்சைக்கிள்கள் உள்ளன.

ஃபெராரி 599 ஜிடிஓ, ஹம்மர் எச்2 மற்றும் ஜிஎம்சி சியரா ஆகியவை மகேந்திர சிங் டோனியிடம் உள்ள நான்கு சக்கர வாகனங்களில் குறிப்பிடத்தகுந்தவை. இரு சக்கர வாகனங்கள் என எடுத்து கொண்டால், கவாஸாகி நின்ஜா எச்2, கான்ஃபெடரேட் ஹெல்கேட், சுஸுகி ஹயபுசா உள்ளிட்டவற்றை குறிப்பிடலாம். இவை அனைத்தும் ஒரு சிறிய எடுத்துக்காட்டு மட்டுமே.

இன்னும் ஏராளமான விலை உயர்ந்த பெர்ஃபார்மென்ஸ் வாகனங்களை மகேந்திர சிங் டோனி சொந்தமாக வைத்துள்ளார். இந்த சூழலில் தல டோனி தற்போது புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். ஜீப் கிராண்ட் செரோகி எஸ்ஆர்டி (Jeep Grand Cherokee SRT) கார்தான் டோனி வீட்டின் புதுவரவு. இது எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும்.

ராணுவத்தில் சேவையாற்றுவதற்காக தல டோனி சுமார் 2 மாத காலத்திற்கு கிரிக்கெட்டில் இருந்து விடுப்பு எடுத்து கொண்டுள்ளார். தற்போது அவர் காஷ்மீரில் சேவையாற்றி வருகிறார். எனினும் டோனி புதிதாக வாங்கியிருக்கும் கார் குறித்த தகவலை அவரது மனைவி சாக்ஸி இன்ஸ்டாகிராம் மூலமாக வெளியிட்டுள்ளார்.
டோனி புதிதாக வாங்கியுள்ள ஜீப் கிராண்ட் செரோகி எஸ்ஆர்டி எஸ்யூவி ரக காரில், 6.2 லிட்டர் வி8 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 463 பிஎச்பி பவர் மற்றும் 624 என்எம் டார்க் திறனை வாரி வழங்கி சாலைகளில் சீறிப்பாய்ந்து செல்லக்கூடியது. இந்த காரில் 8 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது.

ஜீப் கிராண்ட் செரோகி எஸ்ஆர்டி காரில், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளுடன் 8.4 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. டோனி புதிதாக வாங்கியுள்ள இந்த காரின் விலை எவ்வளவு தெரியுமா? 1.12 கோடி ரூபாய். இது எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே. ஆன் ரோடு விலை இன்னும் கூடுதலாக வரும். ஆனால் டோனியை பொறுத்தவரை இதெல்லாம் சர்வ சாதாரணம்.

ஆனால் இதில் குறிப்பிடத்தகுந்த மற்றொரு விஷயம் அடங்கியுள்ளது. இந்தியாவில் ஜீப் கிராண்ட் செரோகி எஸ்ஆர்டி எஸ்யூவி காரை வாங்கிய முதல் நபர் டோனிதான் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இதற்கு முன் கடந்த 2017ம் ஆண்டில், ஜீப் இந்தியா நிறுவனம் பாலிவுட் நடிகர் சைப் அலி கானுக்கு புதிய கிராண்ட் செரோகி கார் ஒன்றை பரிசாக வழங்கியிருந்தது.

சைப் அலி கான் கூட அந்த படத்தை பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே டோனியின் மனைவி சாக்ஸி வெளியிட்ட புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் டோனியின் ரசிகர்கள் ஆர்வத்துடன் அதனை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








