அவரை போலவே ஸ்டைலான காரை வாங்கிய கிரிக்கெட் வீராங்கனை! 100kmph வேகத்திற்கு 3.2 வினாடிகள் மட்டுமே!
ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் (JSW MG Motor) நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்வதில் சமீப காலமாக தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது. இந்தியாவின் விலை குறைவான எலெக்ட்ரிக் காராக கோமெட் இவி (Comet EV) எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தி ஷாக் கொடுத்த எம்ஜி, அதன்பின் BaaS என்கிற பேட்டரி சுழற்சி முறை உடன் அறிமுகம் செய்த விண்ட்சர் இவி (Windsor EV) எலெக்ட்ரிக் காரை ஒவ்வொருத்தரும் போட்டிப் போட்டு வாங்கி வருகின்றனர்.
இந்த சூட்டோடு சூடாக தனது அதிவேகமான ஸ்போர்ட்ஸ் காரான சைபர்ஸ்டர் இவி (cyberster EV) எலெக்ட்ரிக் காரையும் ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. வேகமான பயணத்திற்கு ஏற்ப சற்று விலையுயர்ந்ததாக இருக்கும் எம்ஜி சைபர்ஸ்டர் இவி காரை செல்வந்தர்களால் மட்டுமே வாங்க முடிகிறது. அப்படியிருக்க, தற்போது ஒரு இந்திய கிரிக்கெட் வீராங்கனை உலகின் அதிவேக எம்ஜி காரான எம்ஜி சைபர்ஸ்டரை புத்தம் புதியதாக டெலிவிரி பெற்றுள்ளார்.

அவர் வேறு யாருமில்லை... நம் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஷஃபாலி வெர்மா (Shafali Verma) ஆவார். அச்சமற்ற துணிச்சலான மற்றும் பவர்ஃபுல் பேட்டிங்கிற்கு பெயர்போன ஷஃபாலி வெர்மாவின் இந்த காரும் துணிச்சலான வடிவமைப்பு, அட்வான்ஸ்டு தொழில்நுட்பங்கள் மற்றும் சிறப்பான செயல்திறன் ஆகியவற்றில் சிறந்ததாக விளங்குகிறது.
சர்வதேச கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் இந்தியா சார்பில் விளையாடியுள்ள இளம் வீராங்கனை ஷஃபாலி, சமீபத்திய 2025 ஐசிசி மகளிர் உலகக் கோப்பை வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அதேபோல், எம்ஜி சைபர்ஸ்டர் இவி காரும் உலக அரங்கில் அதன் சிறப்பான செயல்பாடு மூலமாக வெற்றி பெற்று வெற்றியாளர் மனநிலையை கொண்டுள்ளதாக எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

செயல்திறன் மற்றும் சாலையில் அழகாக இயங்கும் ஸ்டைலை விரும்புவோருக்காக வடிவமைக்கப்பட்ட சைபர்ஸ்டர், கிளாசிக் ரோட்ஸ்டர் ரக கார்களை போன்று ஆக்டிவ் ஏரோடைனமிக் பாகங்கள் மற்றும் முன்பக்கத்தில் நீண்ட ஹூட் அமைப்பை கொண்டுள்ளது. மேற்கூரையை திறந்துக் கொண்டு, திறந்தவெளி பயணத்திற்கான நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட எம்ஜி சைபர்ஸ்டர், பிரிட்டிஷ் ரோட்ஸ்டர் கார்களின் பாரம்பரியத்தை அதிநவீன எலெக்ட்ரிக் வாகன கண்டுபிடிப்புகளுடன் ஒருங்கிணைக்கிறது.
இரண்டே இரண்டு கதவுகள் உடன் செதுக்கப்பட்ட வடிவமைப்பில், ஓட்டுநருக்கு தேவையான அம்சங்களுடன் டிஜிட்டல் காக்பிட்டை எம்ஜி சைபர்ஸ்டர் கொண்டுள்ளது. இந்த காரின் முன்பக்கத்தில் உள்ள நீண்ட, வளைந்த பொனட், பழமையான ரோட்ஸ்டர் கார்களை நினைவூட்டுகிறது. சைபர்ஸ்டர் ஆனது இரு மோட்டார்கள் உடன் ஆல்-வீல்-டிரைவ் அனுபவத்தை வழங்கும் எலெக்ட்ரிக் கார் ஆகும்.

இரு எலெக்ட்ரிக் மோட்டார்களும் சேர்ந்து அதிகப்பட்சமாக 510 பிஎஸ் ஆற்றலையும், 725 என்.எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்யக்கூடியவைகளாக உள்ளன. 0-வில் இருந்து 100 கி.மீ வேகத்தை வெறும் 3.2 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய எம்ஜி சைபர்ஸ்டர் காரை வடிவமைத்தவர், ஃபார்முலா 1 (Formula 1) பொறியியல் ஜாம்பவான் மார்கோ ஃபைனெல்லோ (Marco Fainello) ஆவார்.
எலெக்ட்ரிக் மூலம் 10 வினாடிகளில் மூடி/ திறக்கக்கூடிய கன்வெர்டிபிள் கூரையுடன் வரும் சைபர்ஸ்டர் இவி இந்திய மார்க்கெட்டில் கடந்த 2025 ஜூலை மாத இறுதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.74.99 லட்சம் என்கிற அறிமுக ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த எலெக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகள் உடனடியாக துவங்கப்பட்ட நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து புக் செய்தவர்கள் சைபர்ஸ்டர் இவி கார்களை டெலிவிரி பெற்று வருகின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: திறந்தவெளியில் சுற்றுசூழல் உடன் சுதந்திரமாக இயங்க உதவுவதுடன், ஸ்போர்ட்ஸ் கார்களுக்கே உண்டான ஆக்ரோஷத்தனத்தையும் சரியான கலவையை வழங்கும் எம்ஜி சைபர்ஸ்டர் இவி காரை வாங்கியிருப்பதன் மூலம், ஸ்போர்ட்ஸ் கார் ஆர்வலர்கள் மத்தியிலும் கிரிக்கெட் வீராங்கனை ஷஃபாலி வெர்மா கவனத்தை ஈர்த்துள்ளார். இது அவரது ரசனையை பிரதிபலிக்கிறது. இவரை போலவே, எம்ஜி செலக்ட் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்கள் அனைத்திலும் சைபர்ஸ்டர் இவி எலெக்ட்ரிக் கார்கள், டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்து அனுபவிப்பதற்கும் முன்பதிவு செய்வதற்கும் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications









