சீன கார் கம்பெனியை உள்ளே விடும்போதே ஒரு டவுட் இருந்துச்சி... டெஸ்லாவுக்காக என்னென்ன செய்ய வேண்டி இருக்கு!!
எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars)-க்கு உலகம் முழுக்கவே சிறப்பான தேவை உருவாகி வருகிறது. நம் இந்தியாவிலும் எலக்ட்ரிக் கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுபோல் தோன்றலாம். ஆனால், உண்மையில், அமெரிக்கா (America), சீனா (China) உள்ளிட்ட வெளிநாடுகள் உடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களுக்கு இப்போதுதான் மார்க்கெட் பெரியதாகி வருகிறது. இதன் காரணமாகவே, உலகின் முன்னணி எலக்ட்ரிக் கார் நிறுவனமான டெஸ்லா (Tesla) இந்தியாவிற்கு வர தயக்கம் காட்டுகிறது. ஆனால், இந்த நிலை விரைவில் இந்தியாவில் மாற போகிறது. இதனை மத்திய அமைச்சரே தெரிவித்து இருப்பதுதான் இதில் ஆச்சிரியமான விஷயமே.
இந்தியாவில் போதிய அளவிற்கு எலக்ட்ரிக் கார்களுக்கு மார்க்கெட் இல்லை என்பது மட்டுமின்றி, இந்தியாவிற்குள் நுழைய டெஸ்லா தயக்கம் காட்டுவதற்கு இன்னொரு காரணம் உள்ளது. அதுதான், மத்திய அரசாங்கத்தின் இறக்குமதி வரி ஆகும். வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்வதில் மத்திய அரசாங்கம் சில கட்டுப்பாடுகளை கொண்டுள்ளது.

அதாவது, இந்தியாவில் தொழிற்சாலை அமைத்து அதன் மூலம் தொழிலாளர்களுக்கு வாழ்வளித்து வாகனங்களை உற்பத்தி செய்வதாக இருந்தால், மத்திய அரசுக்கே ஓகே. இன்னும் சொல்லப்போனால், இந்தியாவிலேயே எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு சார்பில் மானியங்கள் கூட வழங்கப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாகவே, கடந்த 10 வருடங்களில் பல்வேறு எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனங்கள் தோன்றியுள்ளன. அதுவே, வாகனங்களை வெளிநாட்டில் உற்பத்தி செய்து இந்தியாவிற்கு கொண்டுவந்து விற்பனை செய்வதாக இருந்தால் மத்திய அரசுக்கு ஓகே கிடையாது. அதன் காரணமாகவே, வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்படும் வாகனங்களுக்கு இந்தியாவில் அதிகப்படியான இறக்குமதி வரிகள் விதிக்கப்படுகின்றன.

இதில்தான் டெஸ்லா நிறுவனம் தனக்கு சிறப்பு சலுகையை வழங்க கடந்த சில வருடங்களாக கேட்டு வருகிறது. அதாவது, வெளிநாட்டில் இருந்து தனது எலக்ட்ரிக் கார்களை கொண்டுவந்து இந்தியாவில் டெஸ்லா விற்பனை செய்யுமாம்... ஆனால் அதற்காக அந்த நிறுவனத்திடம் இறக்குமதி வரி கேட்க கூடாதாம். டெஸ்லா நிறுவனத்துக்கு தற்போதைக்கு அமெரிக்காவிலும், சீனாவிலும் மட்டுமே கார் உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளது.
சீனாவில் இருந்து எலக்ட்ரிக் கார்களை கொண்டுவரலாம் என்பதுதான் டெஸ்லாவின் திட்டம் ஆகும். இதன் காரணமாகவே மத்திய அரசு டெஸ்லாவின் இந்த திட்டத்துக்கு சம்மதிக்கவில்லை. இருப்பினும், இந்திய அரசுக்கு டெஸ்லாவை எப்படியாவது இந்தியாவிற்கு கொண்டுவந்துவிட வேண்டும் என்பது விருப்பமாக உள்ளது. இதன் வெளிப்பாடாகவே அமெரிக்காவுக்கு சென்ற இந்திய பிரதமர் டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் (Elon Musk)-ஐ சந்தித்த நேர்காணலை செய்திக்களில் பார்த்திருப்பீர்கள்.

இருப்பினும், டெஸ்லாவின் இந்திய வருகை குறித்து எந்தவொரு உறுதியான அறிவிப்பும் இதுவரையில் வெளிவராத நிலையில், டெஸ்லாவின் வருகை குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் (Piyush Goyal) தனது சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார். அமைச்சர் பியூஷ் கோயலின் பேட்டியின்படி பார்க்கும்போது, இந்திய அரசாங்கம் அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனத்தை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க தயாராகி வருகிறது.
அதேநேரம், சீனாவின் பிஒய்டி (BYD) நிறுவனத்தை இந்திய மார்க்கெட்டில் இருந்து ஓரங்கட்டும் திட்டத்தில் மத்திய அரசு இருப்பதையும் அறிய முடிகிறது. சீனாவின் முன்னணி எலக்ட்ரிக் கார் நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் பிஒய்டி, இந்தியாவில் கடந்த 2021ஆம் ஆண்டில் தனது முதல் எலக்ட்ரிக் காராக இ6 (e6) மாடலை அறிமுகம் செய்தது. தற்சமயம் சீலயன் 7 (Sealion 7), இமேக்ஸ் 7 (EMAX 7) மற்றும் அட்டோ 3 (Atto 3) என 3 விதமான எலக்ட்ரிக் கார்கள் பிஒய்டி நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிஒய்டி ஆனது உலகளவில் பிரபலமான சீன எலக்ட்ரிக் கார் நிறுவனம் என்பது நிச்சயமாக 2021 சமயத்தில் மத்திய அரசாங்கத்திற்கு தெரிந்திருக்கும். ஆனால், அப்போது பிஒய்டி எலக்ட்ரிக் கார்களை அரசாங்கம் சார்பில் விளம்பரப்படுத்திவிட்டு தற்போது ஓரங்கட்ட மத்திய அரசு விரும்புவது எதற்காக என்பது தெரியவில்லை. ஒருவேளை... டெஸ்லாவை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக இருக்குமோ?


Click it and Unblock the Notifications









