வாழ்வில் ஒருமுறையாவது இந்த சாலைகளில் சென்று பார்த்துவிடுங்கள்! இந்தியாவில் இருக்கும் சொர்க்கங்கள்...
1947இல் சுதந்திரம் பெற்ற இந்தியா தனது 78வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நம் இந்தியா கொஞ்சம் ஸ்பெஷலானது என்றுதான் சொல்ல வேண்டும். இங்கு வெப்பமான பாலைவன பகுதியும் உள்ளது; அதேநேரம் இமயமலை தொடரின் தாங்க முடியாத குளிரும் உள்ளது. ஆறுகள் உள்ளன, மாங்குரோவ் காடுகளும் உள்ளன. இதனால், நம் நாட்டில் ஒரு இடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு செல்வதற்குள் பல்வேறு விதமான காலச்சூழல்களை பார்க்க முடியும். அவ்வாறு, இந்தியாவில் லாங் ட்ரிப் மேற்கொள்வதற்கு ஏற்ற 7 நெடுஞ்சாலைகளை பற்றித்தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

மணாலி - லே நெடுஞ்சாலை: ஹிமாச்சல பிரதேசம் மணாலியில் இருந்து ஜம்மூ & காஷ்மீரின் லே வரையில் 479கிமீ தொலைவிற்கு நீண்டுள்ள இந்தியாவின் மிக அழகான நெடுஞ்சாலை இதுவாகும். இமயமலை தொடருக்கு அடிவாரத்தில் அமைந்துள்ள காரணத்தினாலேயே வழியெங்கிலும் ஆர்ப்பரித்து ஓடும் ஆறுகள், ஆங்காங்கே ஏரி, குளம், பச்சை பசேல் என்று மட்ட மல்லாக்க கிடக்கும் மலைகள் என பார்ப்பதற்கு இரு கண்கள் போதது. குளிர்காலங்களில் ஆறுகள் உள்பட எல்லாமே பனியில் உறைந்துப் போய் இருக்கும்.

சிம்லா - ஸ்பிதி பள்ளத்தாக்கு: மேலே கண்ட மணாலி- லே நெடுஞ்சாலையை போன்று நீண்ட தொலைவிற்கு இல்லாமல், சிம்லா நகரம் மற்றும் ஸ்பிதி பள்ளதாக்கு என அருகருகே அமைந்துள்ள இரு பகுதிகளை இணைக்கும் நெடுஞ்சாலை இதுவாகும். இமயமலை தொடரில் அமைந்துள்ளதால், இந்த பகுதிகளை சுற்றிக் கொண்டு செல்ல வேண்டியிருக்கும். இதனால், அந்த குறிப்பிட்ட பகுதியில் உள்ள மொத்த அழகையும் உங்களால் காண முடியும்.

டெல்லி - ரிஷிகேஷ்: டெல்லியில் இருந்து இமயமலை தொடரை நோக்கி செல்ல பலரும் பயன்படுத்தும் வழித்தடம் இதுவாகும். சந்திரபாகா, சாங் உள்ளிட்ட ஆறுகளுடன் இணைந்து கங்கை ஆறு ஆக்ரோஷமானதாக மாறும் இடம் என்பதினாலேயே ரிஷிகேஷ் இந்து மத புனித ஸ்தலமாக பார்க்கப்படுகிறது. பண்டைய காலத்தில் இருந்தே முனிவர்களும், துறவிகளும் அதிகம் பயன்படுத்திய வழித்தடம் இதுவாகும்.

மும்பை - கோவா கடற்கரை சாலை: இவ்வளவு நேரம் இமயமலை தொடரை பார்த்து வந்தோம். இப்போது அப்படியே இந்தியாவின் தென்மேற்கில் அரபிக்கடலுக்கு அருகே அமைந்துள்ள கடற்கரை சாலையை பற்றி பார்ப்போம். இந்தியாவின் மிகவும் பிசியான சாலைகளுள் ஒன்று இது என சொல்லலாம். நம்ம சென்னையில் இருந்து பாண்டிச்சேரிக்கு செல்ல எந்த அளவிற்கு ஆர்வம் காட்டுகிறோமோ அதனை காட்டிலும் டபுள் மடங்கு மும்பைவாசிகள் கோவாவிற்கு செல்ல பயன்படுத்தும் சாலை இதுவாகும்.

கொல்கத்தா - புரி: இந்தியாவின் கிழக்கு தொடர்ச்சி மலை தொடருக்கும், வங்காள விரிகுடா கடலுக்கும் மத்தியில் அமைந்துள்ள கடற்கரை சாலை இதுவாகும். மும்பை - கோவா போன்று பரபரப்பாக இல்லாமல் அமைதியான கடற்கரை ஒட்டிய சாலை பயணத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு ஏற்ற ஜாலியான சாலை பயணம் இதுவாக இருக்கும். மேலும், ஒடிசிய பாரம்பரியத்தில் இன்னும் பழமை மாறாத கட்டிடங்களையும் இந்த வழித்தடத்தில் காணலாம்.

பெங்களூர் - ஊட்டி: நீண்ட வருடங்களாக பயன்பாட்டில் இருக்கும் சுற்றுலா வழித்தடம் இதுவாகும். மேற்கு தொடர்ச்சி மலையின் அழகையும், ஏக்கர் கணக்கில் பரந்து விரிந்து கிடக்கும் தேயிலை தோட்டங்களையும் பார்த்துக் கொண்டே ஜாலியாக பயணம் மேற்கொள்ள ஏற்ற வழித்தடம் இதுவாகும். குறிப்பாக, குளிர்காலங்களில் உங்களை மெய்சிலிர்க்க கூடிய பல்வேறு இடங்கள் இந்த வழித்தடத்தில் அமைந்துள்ளன.

ஜெய்பூர் - ரான் ஆஃப் கட்ச்: இவ்வளவு நேரம் குளிர்பிரதேசங்களை பார்த்து வந்தோம் அல்லவா... இறுதியாக இந்தியாவின் சூடான சாலை வழித்தடத்தை பற்றி பார்ப்போம். தார் பாலைவனத்திற்கு அருகாமையில் செல்வதால் சூடாக இருக்கும் என்றாலும், குளிர்காலங்களில் இரவு நேர பயணங்களில் கடும் குளிரையும் சந்திக்க வேண்டியிருக்கும். சாலையை ஒட்டி பாலைவன மணல் இல்லாமல், வித்தியாசமான வெள்ளை நிறத்திலான உப்பு சதுப்பு மணலை காண முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த சாலை பயணங்கள் அனைத்தையும் ஒரே நாட்டிற்குள் மேற்கொள்ள முடியும் என்பது உண்மையில் ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. முறையான சாலை வசதிகள் இல்லாத பகுதிகளையும் சேர்த்து பார்த்தால், சில வழித்தடங்கள் நம்மை இன்னும் பிரம்மிப்பில் ஆழ்த்தக்கூடியவையாக உள்ளன. இதன் மூலமாக, நம் இந்தியா எந்த அளவிற்கு சிறப்புமிக்க மற்றும் இயற்கைவளம் மிக்க நாடு என்பதை அறியலாம்.


Click it and Unblock the Notifications









