எல்லாமே இந்து முறைப்படி தான் நடக்கும்... வெளிநாட்டில் இந்தியர் செய்த செயல் - வைரலாகும் வீடியோ!!
இந்தியர்கள் தாங்கள் வாங்கும் புது வாகனங்களை தங்களது குடும்பத்தில் ஒருவராகவே பார்ப்பார்கள். அதன் வெளிப்பாடாக, புது வாகனங்களை கோயிலுக்கு எடுத்து சென்று பூஜை போட்ட பின்னரே பயன்படுத்த துவங்குவர். இந்தியாவில் இருக்கும்போது மட்டுமில்லாமல், நம் மக்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களது பாரம்பரியமும், கலாச்சாரமும் கூடவே இருக்கும் என்பதை பலமுறை பல சம்பவங்களில் பார்த்துள்ளோம். அந்த வகையில், வெளிநாட்டில் வசிக்கும் ஒருவர் தான் வாங்கிய விலையுயர்ந்த சிறிய ரக விமானத்திற்கு இந்து முறைப்படி தேங்காய் உடைத்து, பூஜை போடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
முதித் ஆனந்த் என்பவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. வீடியோவில், சிறிய ரக விமானத்திற்கு பூஜை போடுபவரின் பெயர் தான் முதித் ஆனந்த் என நினைக்கிறோம். இவ்வாறான ஒரு விமானத்தை வாங்க வேண்டும் என்பது இவரது கனவாக இருந்துள்ளது. இதனை கஷ்டப்பட்டு நிஜமாக்கி உள்ள முதித் ஆனந்த், வெளிநாட்டில் வசித்தாலும் தனது இந்து முறைப்படி ஓட்டுவதற்கு முன் அதற்கு பூஜை போட்டுள்ளார்.

வீடியோவில், விமானத்திற்கு முன்னால் ஒரு தட்டில் கற்பூரம், தேங்காய், எலுமிச்சை பழம் மற்றும் ஊதுபத்தியை வைக்கப்பட்டு இருப்பதை பார்க்க முடிகிறது. கற்பூரத்தை ஏற்றி விமானத்தை நோக்கி 3 சுற்று சுற்றிய முதித் ஆனந்த் பின்னர், தேங்காய் உடைத்து இந்து முறைப்படி விமானத்தை வணங்குகிறார். தேங்காய் உடைத்த பின், விமானத்தின் முன்பக்க மூக்கு பகுதியில் சுவஸ்திகா சின்னத்தை தனது கையால் முதித் ஆனந்த் போடுவதையும் வீடியோவில் காண முடிகிறது.
அதேபோல் விமானத்திற்கு உள்ளேயும் அந்த சின்னத்தை இவர் போட்டுள்ளார். இந்து மதத்தில் சுவஸ்திகா சின்னம் ஆனது செழிப்பான வளமை மற்றும் நல்ல சகுணத்தை குறிக்கிறது. இந்த சின்னத்தை விமானத்திற்கு உள்ளேயும், வெளியேயும் சில இடங்களில் வரைந்துவிட்டு, எலுமிச்சை பழத்தை கையில் எடுத்து அவற்றை விமானத்தின் சக்கரங்களுக்கு அடியில் சொருகினார்.

இந்த பூஜை அனைத்தையும் முடித்த பின், உடனடியாக விமானத்திற்குள் ஏறி அமர்ந்த முதித் ஆனந்த், விமானத்தை எடுத்துக் கொண்டு ஒரு சிறிய ரவுண்ட் பறந்து வந்தார். இதனையும், இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் காண முடிகிறது. முதித் ஆனந்த் வைத்திருக்கும் சிறிய ரக விமானம் ஆனது பைபர் செரோக்கி 140 (Piper Cherokee 140) ஆகும்.
பைபர் ஏர்கிராஃப்ட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இது ஓர் எடை குறைவான சிங்கிள்-என்ஜின் விமானம் ஆகும். இந்த விமானத்தினுள் மொத்தம் 4 இருக்கைகள் உள்ளன. இத்தகைய விமானங்கள் பெரும்பாலும் விமானிகளுக்கான பயிற்சி வகுப்புகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன. வெளிநாடுகளில் ஏர் டாக்ஸி சேவைகளிலும் இத்தகைய சிறிய ரக விமானங்களை பரவலாக பார்க்க முடியும்.

மேலும், முதித் ஆனந்த் போன்று தனி பயன்பாட்டிற்காகவும் இந்த விமானங்களை நிறைய பேர் வாங்குகின்றனர். செரோக்கி 140 விமானங்கள் 1964ஆம் ஆண்டில் இருந்து உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆரம்பத்தில், விமானிகளுக்கான பயிற்சிக்காக வெறும் 2 இருக்கைகள் உடன் மட்டுமே இவை வடிவமைக்கப்பட்டன. பின், 4 இருக்கைகளை கொண்ட வெர்சன் 1971ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த விமானத்தில் பொருத்தப்படும் என்ஜின் அதிகப்பட்சமாக 150 பிஎஸ் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. முதித் ஆனந்த் வாங்கியிருப்பது பழைய செரோக்கி 140 விமானம் ஆகும். எவ்வளவு விலை கொடுத்து இந்த விமானத்தை முதித் ஆனந்த் வாங்கியுள்ளார் என்பது தெரியவில்லை. இந்தியாவிலும் சிலர் இவ்வாறான சிறிய ரக விமானங்களை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறான சிறிய ரக விமானம் அல்ல... அளவில் பெரியதான விமானத்தை சொந்தமாக வாங்கினால் கூட நம் இந்தியர்கள் அதற்கு பூஜை போட்ட பின்னரே பயன்படுத்த துவங்குவர். அந்த அளவிற்கு பூஜை சடங்குகள் நம் மக்களுடன் நெருக்கமாக பிணைந்துள்ளது. இருப்பினும், டயருக்கு அடியில் எலுமிச்சை பழம் வைப்பதை தவிர்க்கலாம். ஏனெனில், ஆரம்ப காலக்கட்டத்தில் எதற்காக குதிரை வாகனத்திற்கு முன்னால் எலுமிச்சை பழத்தை வைத்தார்கள் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்.


Click it and Unblock the Notifications









