நாம எலக்ட்ரிக் பைக் வாங்கவே பயப்படுகிறோம்... ஆனா இங்க ஒருத்தர் மேட்-இன்-இந்தியா பைக்கில் நாடு நாடாக சுத்துறார்
பைக்கில் நீண்ட தொலைவிற்கு பயணம் செல்வது நம்மில் நிறைய பேருக்கு பிடித்தமான விஷயமாக இருக்கும். குறிப்பாக, அதிக சிசி என்ஜின் உடன் பவர்ஃபுல்லான பைக்கை வைத்திருப்பவர்கள் எப்போது தொலைத்தூர பைக் பயணங்களை மேற்கொள்வோம் என ஆவலாக இருப்பார்கள். ஒருமுறை லடாக் வரை சென்று வந்தாலே 7,000- 8,000கிமீ தொலைவிற்கு ஸ்பீடோ மீட்டரில் பயண தூரம் அதிகரித்துவிடும். பல நாட்கள் எடுத்துக் கொள்ளக்கூடிய அந்த 8 ஆயிரம் கிமீ தொலைவு பயணத்திற்கு பிறகு எவரொருவக்கும் அடித்து போட்டது போல் உடம்பு வலிக்கும்.
அப்படியிருக்கையில், இங்கு ஒருவர் 1 வருடத்தில் சுமார் 65 ஆயிரம் கிமீ தொலைவிற்கு பைக் பயணம் செய்துள்ளார். அதாவது, ஒவ்வொரு மாதமும் சராசரியாக 5,500கிமீ தொலைவிற்கு பைக்கை ஓட்டியுள்ளார். இதனை இந்த நபர் தொடர்ச்சியாக செய்திருக்க வாய்ப்பில்லை. இடையிடையே சில நாட்களுக்கு இடைவெளி விட்டு பைக்கை நீண்ட தொலைவிற்கு ஓட்டியிருக்கலாம். இருப்பினும், ஒரே வருடத்தில் 65,000கிமீ தொலைவு பைக் பயணம் என்பது ஆச்சிரியமான ஒன்றாகும்.

இந்த அளவிற்கு ஆச்சிரியமான காரியத்தை செய்திருக்கும் இந்த நபரின் பெயர், ஹரிஷ் சூரம்படே (Harish Surampade) ஆகும். இந்த 65,000கிமீ-க்கும் அதிகமான தொலைவிலான பைக் பயணத்தை தனது அல்ட்ராவொய்லெட் எஃப்77 மேக் 2 (Ultraviolette F77 Mach 2) எலக்ட்ரிக் பைக்கில் (Electric Bike) ஹரிஷ் சூரம்படே செய்துள்ளார். இதனை அல்ட்ராவொய்லெட் ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தின் சிஇஓ நாராயண் சுப்ரமணியம் தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் படங்களுடன் தெரிவித்துள்ளார்.
அல்ட்ராவொய்லெட் எஃப்77 மேக் 2 எலக்ட்ரிக் பைக் அறிமுகம் செய்யப்பட்ட உடனே அதனை முதலாவதாக வாங்கிய கஸ்டமர்களுள் ஒருவரான ஹரிஷ் சூரம்படே, ஆரம்பத்தில் இருந்தே அதனை தொலைத்தூர பயணங்களுக்கு அதிகமாக கொண்டு செல்ல ஆரம்பித்தார். பொதுவாகவே, எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்கள் அந்த வாகனத்தை தொலைத்தூர பயணங்களுக்கு கொண்டு செல்ல மாட்டார்கள்.

செல்லும் இடங்களில் சார்ஜிங் வசதி இருக்குமா என்கிற சந்தேகத்தினால் முடிந்தவரையில் நகரத்திற்குள் ஓட்டுவதற்காக மட்டுமே எலக்ட்ரிக் வாகனங்கள் மக்களால் வாங்கப்படுகின்றன. இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை வேகம் எடுக்காததற்கு காரணம் இதுதான் என ஆரம்பத்தில் இருந்து நாம் கூறி வருகிறோம். ஆனால், ஹரிஷ் சூரம்படே அதை பற்றி எல்லாம் எந்த பயமும் இல்லாமல், 65,000கிமீ-க்கும் அதிகமான தொலைவிற்கு தனது எஃப்77 எலக்ட்ரிக் பைக்கை கொண்டு சென்றுள்ளார்.
இதில், ஹரிஷ் சூரம்படேவின் கடின உழைப்பு முக்கியமான பங்கு வகிக்கிறது என்றாலும், அல்ட்ராவொய்லெட் எஃப்77 பைக்கின் திறனையும் நாம் கண்டுக்கொள்ளாமல் இருக்க முடியாது. இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் சூப்பர் பைக் அல்ட்ராவொய்லெட் எஃப்77 ஆகும். இதன் அப்டேட் வெர்சன் தான் பின்னர் எஃப்77 மேக் 2 என அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த பவர்ஃபுல்லான & விலைமிக்க எலக்ட்ரிக் பைக்கில் எங்கெல்லாம் ஹரிஷ் சூரம்படே சென்றுள்ளார் என தெரிந்தால் ஆச்சிரியப்படுவீர்கள். ஆரம்பத்தில் இந்தியாவிற்குள் 4,000கிமீ- 5,000கிமீ தொலைவு பயணங்களை தனது எஃப்77 மேக் 2 எலக்ட்ரிக் பைக்கில் மேற்கொண்ட ஹரிஷ் சூரம்படே, பின்னர் இந்தியாவை தாண்டி வெளிநாடுகளுக்கும் தனது இந்த பைக்கில் செல்ல ஆரம்பித்தார்.
பெங்களூரில் இருந்து துவங்கிய 10,000கிமீ-க்கான பைக் பயணத்தை நேபாளம் நாட்டின் தலைநகர் காத்மண்டு வழியாக சீனா, பூட்டான் மற்றும் வங்காள தேசம் நாடுகளின் எல்லையோரமாக சென்று சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்புதான் ஹரிஷ் சூரம்படே நிறைவு செய்தார். இந்த அல்ட்ராவொய்லெட் எலக்ட்ரிக் பைக்கை இந்தியாவின் அனைத்து விதமான வெப்ப காலநிலைகளிலும் ஹரிஷ் சூரம்படே ஓட்டியுள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இன்றைய கால எலக்ட்ரிக் பைக்குகளின் திறன்களை வெளிக்காட்டும் விதமாக ஹரிஷ் சூரம்படேவின் இந்த தொலைத்தூர பைக் பயணங்கள் அமைந்துள்ளன. அதிலிலும் குறிப்பாக, அல்ட்ராவொய்லெட் எஃப்77 எலக்ட்ரிக் பைக்குகளை நாடு முழுவதும் விளம்பரத்தும் விதமாக இந்த பயணங்கள் அமைந்துள்ளன. நாடு முழுவதும் இவி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிகளை அதிக இடங்களில் கொண்டுவந்தால், இவ்வாறான தொலைத்தூர எலக்ட்ரிக் பைக் பயணங்களை வருங்காலத்தில் அதிகமாக பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








