சாதாரணமான போர் விமானம் இல்ல... இந்திய ஜனாதிபதி பயணம் செய்தது வெறும் 30 நிமிடம்தான்... ஆனா 200கிமீ கடந்துட்டாரு
இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு (Droupadi Murmu), ஹரியானாவின் அம்பாலாவில் உள்ள விமானப்படை நிலையத்தில், ரஃபேல் போர் விமானத்தில் இன்று (அக்டோபர் 29) பயணம் மேற்கொண்டுள்ளார். இந்திய நாட்டின் பாதுகாப்புத் திறன்களை உலகிற்கு வெளிக்காட்டும் வகையிலும், பாகிஸ்தான் அரசாங்கம் கூறி வந்த பொய்யை அம்பலப்படுத்தும் விதமாகவும் அமைந்த இந்திய ஜனாதிபதியின் இந்த போர் விமான பயணம் குறித்தும், இதில் பயன்படுத்தப்பட்ட ரஃபேல் போர் விமானம் குறித்தும் இனி கொஞ்சம் விரிவாக பார்க்கலாம்.
சம்பிரதாய அணிவகுப்பு மரியாதைகளுக்கு மத்தியில் விமானப்படை நிலையத்திற்கு வருகை தந்த குடியரசுத் தலைவர் முர்மு, விமானப்படை நிலையத்தின் பார்வையாளர் புத்தகத்தில் தனது வருகையை பதிவு செய்த பின்னர், "இந்திய விமானப்படையின் ரஃபேல் விமானத்தில் எனது முதல் பயணத்திற்காக அம்பாலா விமானப்படை நிலையத்திற்கு வருகை தந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்" என பேட்டி அளித்தார்.

பின்னர், இரு இருக்கைகளை மட்டுமே கொண்ட ரஃபேல் போர் விமானத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு பயணம் செய்தார். ரஃபேல் ஜெட்டில் ஏறுவதற்கு முன், குடியரசுத் தலைவர் ஒரு ஜி-சூட் மற்றும் சன்கிளாஸ் அணிந்து கொண்டார். பின்னர், ஹெல்மெட்டை கையில் பிடித்தபடி விமானியுடன் ஜனாதிபதி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் கவனத்தை பெற்றுள்ளன.
ஜெட் விமானத்திற்கு உள்ளே நுழைந்த பின் கை அசைத்து சுற்றியிருந்தவர்களை உற்சாகப்படுத்தினார். சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்த பயணம், சுமார் 200 கிலோமீட்டர் தூரத்தை கடந்து மீண்டும் விமானப்படை நிலையத்திற்குத் திரும்பியது. இந்த விமானத்தை 17வது படைப்பிரிவின் தளபதி குழு கேப்டன் அமித் கெஹானி இயக்கியதாக குடியரசுத் தலைவர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் விமானம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 15,000 அடி உயரத்தில், மணிக்கு சுமார் 700 கிலோமீட்டர் வேகத்தில் பறந்ததாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. விமானப்படை தளபதி ஏ.பி. சிங் அதே விமானத் தளத்திலிருந்து வேறொரு தனி விமானத்தில் பயணம் செய்தார். பயணம் முடித்த பின்னர், அம்பாலா விமானப்படை நிலையத்தில் ரஃபேலின் செயல்பாட்டுத் திறன்கள் மற்றும் இந்திய விமானப்படை குறித்து குடியரசுத் தலைவருக்கு விளக்கப்பட்டது.
இந்திய ஆயுதப்படைகளின் உச்ச தளபதியாக நாட்டின் குடியரசு தலைவர் இருக்கும் போதிலும், திரௌபதி முர்மு இந்திய விமானப்படையின் இரண்டு போர் விமானங்களில் பயணம் செய்த முதல் இந்திய குடியரசுத் தலைவர் ஆவார். முன்னதாக 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், அசாம் மாநிலத்தின் தேஜ்பூர் விமானப்படை நிலையத்தில் சுகோய்-30 MKI போர் விமானத்தில் பயணம் செய்திருந்தார்.

முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர்களான ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மற்றும் பிரதிபா பாட்டில் முறையே ஜூன் 8, 2006 மற்றும் நவம்பர் 25, 2009 அன்று புனே அருகே உள்ள லோஹேகான் விமானப்படை நிலையத்தில் சுகோய்-30 MKI போர் விமானங்களில் பயணம் மேற்கொண்டிருந்தனர்.
இந்த பயணத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு பயணம் செய்துள்ள ரஃபேல் போர் விமானத்தை பற்றி சொல்ல வேண்டுமென்றால், பிரெஞ்சு விண்வெளி நிறுவனமான டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ரஃபேல் போர் விமானங்கள், 2020 செப்டம்பரில் அம்பாலா விமானப்படை நிலையத்தில் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டன.

பிரான்ஸ் நாட்டில் இருந்து 2020 ஜூலை 27 அன்று இந்தியா கொண்டுவரப்பட்ட முதல் ஐந்து ரஃபேல் விமானங்கள், 'கோல்டன் அம்பு' என அழைக்கப்படும் 17வது படைப்பிரிவில் சேர்க்கப்பட்டன. ஏப்ரல் 22 அன்று நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா மே 7 அன்று தொடங்கிய 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலின் போது ரஃபேல் ஜெட்கள் பயன்படுத்தப்பட்டன.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று அம்பாலா விமானப்படை நிலையத்தில் பயன்படுத்தியது, இரு இருக்கைகளை மட்டுமே கொண்ட B வகை ரஃபேல் போர் விமானம் ஆகும். ரஃபேல் "B" வகை என்பது நிலம் சார்ந்த நடவடிக்கைகளுக்காக வடிவமைக்கப்படும் போர் விமானங்களின் ஒரு பதிப்பாகும். அதுவே, ஒற்றை இருக்கை கொண்ட பதிப்பு "C" வகை என அழைக்கப்படுகிறது.

ரஃபேல் B-வகை போர் விமானங்கள் இந்திய மற்றும் இந்தோனேசிய விமானப்படைகளில் பயன்படுத்தப்படுவது மட்டுமின்றி, உற்பத்தி செய்யப்படும் பிரான்ஸ் நாட்டின் வான் மற்றும் விண்வெளி படையிலும் உள்ளது. ரஃபேல்-B இரண்டு சஃப்ரான் ஸ்னெக்மா எம்88-2 ஆப்டர்-பர்னிங் டர்போஃபேன் என்ஜின்களால் இயக்கப்படுகிறது. இது சிறந்த த்ரோட்டில் எதிர்வினையையும் அதிக உந்துதல்-எடை விகிதத்தையும் வழங்குகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நாட்டின் ஜனாதிபதியே நேரடியாக விமான படையின் போர் விமானத்தில் பயணம் செய்துள்ளார் என்பதில் இருந்து அந்த நாட்டு அரசாங்கம் அதன் விமான படைகளின் மீது எந்த அளவிற்கு நம்பிக்கை வைத்துள்ளது என்பதை அறியலாம். இருப்பினும், இவ்வாறான போர் விமானங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் அளவிற்கு இன்னும் நம் இந்தியா வளரவில்லை. டசால்ட் ஏவியேஷன் கடந்த 2025 ஜூன் மாதத்தில், இந்தியாவின் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் (TASL) உடன் இணைந்து இந்தியாவில் முதன்முறையாக ரஃபேல் விமானங்களின் மைய பகுதியை உற்பத்தி செய்யப் போவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications









