சபரிமலைக்கு ஜனாதிபதி வந்தது மட்டும் தானே தெரியும்... இவ்வளவு கம்மி விலையிலான காரில் வந்தாரா?
இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு நேற்று (அக்டோபர் 22) வருகை தந்ததை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். இருமுடி கட்டி சபரிமலை கோயிலுக்கு சென்றவர்களுக்கு, இந்த புனித பயணம் ஆனது எந்த அளவிற்கு காடுகளுக்குள் அட்வென்ச்சர் பயணம் என்பது தெரியும்.
இருப்பினும், ஐயப்ப பக்தர்கள் கால்நடையாகவே செல்வார்கள். உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள் டாலி (Dolly) சேவையில் சன்னிதானம் செல்வது வழக்கம். ஆனால், குடியரசுத் தலைவரின் உடல்நலம் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக, அவர் பம்பையிலிருந்து சன்னிதானம் செல்ல போர்ஸ் குர்கா (Force Gurkha) என்கிற ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனத்தைப் பயன்படுத்தி உள்ளார்.

குடியரசுத் தலைவர் முர்மு, சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்த முதல் பெண் அதிகாரி மற்றும் இரண்டாவது இந்திய குடியரசு தலைவர் ஆவார். இதைவிட முக்கியம், பம்பையில் இருந்து சன்னிதானம் வரையில் வாகனத்தில் மலை ஏறிய முதல் யாத்ரீகர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இதற்கு முன்பு, 1973-ல் அப்போதைய குடியரசுத் தலைவர் வி.வி. கிரி சபரிமலைக்கு வந்தபோது கூட டாலி சேவையை தான் பயன்படுத்தினார். பம்பை- சன்னிதானம் வரையிலான 5கிமீ-க்கு அவசரகால ஆம்புலன்ஸ் மற்றும் கோயிலுக்கு பொருட்களை கொண்டுவருவதற்கு டிராக்டர்கள் மட்டுமே இந்த பாதையில் அனுமதிக்கப்படுகின்றன.

ஆனால், குடியரசுத் தலைவர் முர்மு அவர்களின் பயன்பாட்டிற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஃபோர்ஸ் குர்கா வாகனம் அனுமதிக்கப்பட்டு உள்ளது. குடியரசு தலைவர் பயன்படுத்திய ஃபோர்ஸ் குர்கா வாகனத்தின் வெளிப்புற வடிவமைப்பில், கூர்கா பேட்ஜ் கொண்ட முன்புற கிரில், எல்இடி பகல்நேர விளக்குகளுடன் கூடிய ரெட்ரோ பாணியிலான வட்ட வடிவ எல்இடி ஹெட்லேம்ப்கள் இருந்தன.
முன்பக்க ஹெட்லைட்களுக்கு நடுவில் சிறிய ஏர் டேம் கொண்ட கருப்பு நிற பம்பர் மற்றும் வட்ட வடிவ ஃபாக் விளக்குகள் ஆகியவை தனித்துவமான சிறப்பம்சங்கள் ஆக இடம்பெற்று இருந்தன. மேலும், 10 ஸ்போக் வடிவமைப்புடன் கூடிய 18 அங்குல இரட்டை வண்ண அலாய் சக்கரங்கள், தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்ட ஸ்நோர்கெல் (snorkel) உள்ளிட்டவையும் இந்த குர்கா வாகனத்தில் இருந்தன.

பின்பக்கத்தில் டெயில்கேட்டில் பொருத்தப்பட்ட ஸ்டெப்னி வீல், ஒரு சிறிய ஏணி மற்றும் எல்இடி டெயில்லைட்கள் ஆகியவை குர்காவின் பிற முக்கிய அம்சங்களாகும். வாகனத்தின் உட்புறத்தில், 9 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், மேனுவல் ஏசி, டில்ட் & டெலஸ்கோபிக் ஸ்டீயரிங் வீல் அட்ஜஸ்ட்மென்ட், பவர் விண்டோஸ் போன்ற வசதிகள் உள்ளன.
பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை, இரட்டை ஏர்பேக்குகள், ஏபிஎஸ் (ABS), பின்பக்க பார்க்கிங் சென்சார்கள் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் ஆகியவை இந்த ஆஃப்-ரோடர் எஸ்யூவியின் சிறப்பம்சங்களாகும். ஃபோர்ஸ் குர்கா, 2.6 லிட்டர், 4-சிலிண்டர் டீசல் என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது 140 bhp சக்தியையும், 320 Nm டார்க்கையும் உற்பத்தி செய்யக்கூடியதாக உள்ளது.

இந்தியாவின் மற்றொரு பிரபலமான ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனமான மஹிந்திரா தாரின் 2.2 லிட்டர் என்ஜினுடன் ஒப்பிடும்போது, குர்காவின் என்ஜின் அதிக சக்தி வாய்ந்தது. குர்கா எஸ்யூவி, ஸ்டாண்டர்டாக 4-வீல் டிரைவ் (4x4) வசதியுடன் வருகிறது. இது சென்டர் கன்சோலில் உள்ள ஒரு ஸ்விட்ச் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 4-வீல் டிரைவ் சிஸ்டத்துடன், எலெக்ட்ரானிக் ஷிஃப்ட், ஏர் இன்டேக் ஸ்நோர்கெல் மற்றும் டிஃபரன்ஷியல் லாக்குகள் ஆகியவை ஃபோர்ஸ் குர்காவை ஆஃப்-ரோடிங்கில் தனித்து நிற்கச் செய்கின்றன. குடியரசுத் தலைவர் முர்மு, குர்கா வாகனத்தில் பயணித்ததன் மூலம், ஆஃப்-ரோடிங் திறன் கொண்ட இந்த வாகனத்தின் மதிப்பு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









