ரூ.915 கோடி ஆர்டரை தட்டி தூக்கிய இந்திய ரயில்வே நிர்வாகம்! உலகமே வியந்து பாக்குது!
இந்திய ரயில்வே தயாரிக்கும் பயணிகள் பெட்டியில் 200 பெட்டிகளை வங்கதேசத்திற்கு அனுப்ப இந்திய ரயில்வேயின் ஏற்றுமதி பிரிவான ரைட்ஸ் பிரிவு புதிய ஆர்டர் ஒன்றை பெற்றுள்ளது. சர்வதேச அளவில் நடந்த இந்த ஆர்டரை பெறும் முயற்சியில் இந்திய ரயில்வே வெற்றி பெற்றுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
சர்வதேச அளவில் இந்திய ரயில்வே நிர்வாகம் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்று வருகிறது. சர்வதேச தரத்திற்கு தகுந்தார் போல பல்வேறு விதமான தயாரிப்புகளை இந்திய ரயில்வே நிர்வாகம் தயாரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியா தயாரிக்கும் ரயில் பெட்டிகளை மற்ற நாடுகளுக்கு விற்பனை செய்வதற்காக இந்திய ரயில்வே நிர்வாகம் ரைட்ஸ் என்ற அமைப்பை துவங்கி அதன் மூலம் சர்வதேச நாடுகளில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்நிலையில் வங்கதேசத்தில் ரயில் இயக்கத்திற்காக 200 பயணிகள் ரயில் பெட்டிகள் தேவைப்பட்டுள்ளது. இதற்கான டெண்டரை சர்வதேச அளவில் அந்நாடு கோரியது. இந்நிலையில் அதில் பங்கேற்ற இந்திய ரயில்வே நிர்வாகம் தற்போது 200 பிராட்கேஜ் பயணிகள் கோச்களை தயாரிப்பதற்கான ஆர்டரை பெற்றுள்ளது. இதில் 106 பெட்டிகள் ஏசி பெட்டிகளாகவும், 94 பெட்டிகள் ஏசி அல்லாத பெட்டிகளாகவும் உருவாக்கப்படுகின்றன.
இந்த பெட்டிகள் எல்லாம் பஞ்சாப் மாநிலம் கபூர்த்தலா என்ற பகுதியில் இயங்கி வரும் ஆர்சிஎஃப் ஆலையில் வைத்து தயாரிக்க திட்டமிடப்பட்டு வருகிறது. இந்த மொத்த ஆர்டருக்கான விலை என்பது 111.26 மில்லியன் அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 915 கோடியாகும். இந்தத் திட்டத்திற்காக ஐரோப்பிய முதலீட்டு நிறுவனமான ஐரோப்பியன் இன்வெஸ்ட்மென்ட் பேங்க் என்ற நிறுவனம் முதலீடு செய்கிறது.

இந்த ஆர்டர் உடன் சேர்த்து இந்திய ரயில்வே நிர்வாகம் வங்கதேசத்திற்கு வெறும் பெட்டிகளை மட்டும் செய்து அனுப்பப் போவதில்லை. அதனுடன் சேர்த்து டிசைன் எக்ஸ்பர்டைஸ், உதிரி பாகங்கள் சப்போர்ட் மற்றும் பயிற்சி ஆகியவையும் வழங்கப்படுகின்றன. ஆர்டர் வழங்கப்பட்டு 36 மாதத்திற்குள் டெலிவரி செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆர்டர் மூலம் பெறப்பட்ட பெட்டிகளுக்கு 24 மாதங்கள் வரை இந்திய ரயில்வே நிர்வாகம் வாரண்டி வழங்கவும் சம்மதம் தெரிவித்துள்ளது. இதை வைத்து இந்திய ரயில்வே நிர்வாகமும் வங்கதேச அரசும் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து உள்ளது. இந்திய ரயில்வே நிர்வாகம் இதை மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச அளவில் தரமான ரயில் பெட்டிகளை தயாரிக்கும் நாடாக இந்தியா மாறியுள்ளது.

வங்கதேச நாட்டிற்கு இந்தியா ரயில் பெட்டிகளை தயாரித்து அனுப்புவது இது ஒன்றும் முதல் முறை அல்ல. இதற்கு முன்னர் 120 பிராட்கேஜ் பயணிகள் கோச்சிகள் 36 பிராட் கேஜ் ரயில் இன்ஜின்கள் இதுபோக பத்து மீட்டர் கொண்ட ரயில் இன்ஜின்கள் எல்லாம் தயாரிக்கப்பட்டு ஏற்கனவே வங்கதேசத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
வங்கதேச நாட்டில் ஓடும் பெரும்பாலான ரயில்களில் இந்திய ரயில்வே தயாரித்த ரயில்களாகவே இருக்கின்றன. இந்தியாவில் தான் குறைந்த விலையில் அந்நாட்டிற்கு தகுந்தார் போல ரயில்களை தயாரிக்க முடியும் என்பதால் வங்கதேசம் பெரும்பாலும் இந்திய ரயில்வேக்கே இந்த ஆர்டரை வழங்கி வருகிறது. இந்த முறையும் இந்திய ரயில்வே நிர்வாகமே அடுத்த ரயில் பெட்டிகளுக்கான ஆர்டரையும் பெற்றுள்ளது.
இந்தியாவில் ரயில்வே நிர்வாகம் மிகப்பெரிய அளவு வளர்ச்சியை பெற்றுள்ளது. முக்கியமாக வந்தே பாரத் ரயிலை தயாரித்ததன் மூலம் சர்வதேச தரத்தில் பல்வேறு ரயில்களை தயாரிக்கும் திறனை இந்திய ரயில்வே நிர்வாகம் பெற்றுள்ளது. உலகின் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்கை கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒரு நாடு என்பதால் இந்தியா இந்த துறையில் மிகப்பெரிய அளவு வளர்ச்சி பெற்று வருகிறது என்பது மறுக்க முடியாத விஷயமாக இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா ரயில் பெட்டிகளுக்கான ஆர்டரை பெற்றுள்ளது நிச்சயம் வரவேற்கப்பட வேண்டிய விஷயம் தான். வங்கதேசம் மட்டுமல்லாமல் மற்ற நாடுகளுக்கான ரயில் தேவைகளையும் இந்தியா பூர்த்தி செய்யும் திறனை பெற்றுள்ளது. தொடர்ந்து இந்தியா வளர்ச்சி பெற்று பல வளர்ந்த நாடுகளுக்கும் ரயில் சேவையை பூர்த்தி செய்யும் நாடாக மாற வேண்டும் என்பது இந்திய மக்களின் எண்ணமாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications









