180 கி.மீ வேகத்தில் சீறிப் பாய்ந்த ரயில்... இந்திய ரயில்வே நடத்திய சோதனை வெற்றி...
இந்திய ரயில்வே நிர்வாகம் 180 கி.மீ வேகத்தில் பயணிக்கும் ரயில் பெட்டி ஒன்றைத் தயாரித்து ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் சோதனை செய்தது. இந்த வீடியோக்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. இந்த சோதனை முடிவுகள் என்ன? முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்

இந்தியாவில் மிக முக்கியமான போக்குவரத்து என்றால் அது ரயில் தான் ஒரே நிறுவனத்தால் இந்தியா முழுவதும் இயக்கப்படும் ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்கிறார்கள். இந்த ரயில்வே துறை இயங்கவும் லட்சக்கணக்கான மக்கள் வேலை செய்கிறார்கள். இப்படியாக அதிகமான ஆச்சரிய விஷயங்கள் எல்லாம் நடந்து கொண்டே இருக்கும். பல விஷயங்கள் நம் கண் முன்னே இருந்தும் நமக்கு தெரியாமல் இருக்கும். இந்தியாவில் ரயில்வே துறையின் கட்டமைப்பு உலகில் வேறு எந்த துறையிலும் இல்லாத அளவிற்கு இருக்கிறது.

இந்தியாவில் தற்போது ரயில்வேயில் எலெக்டரிக் இன்ஜின், டீசல் இன்ஜின் என இரண்டு வகையான இன்ஜின்கள் இருக்கிறது. பெரும்பாலான பகுதிகளில் ரயில் பாதைகள் மின் மயமாக்கப்பட்டுள்ளதால் எலெக்டரிக் இன்ஜின் தான் அதிகமான பயன்பாட்டில் இருக்கிறது. தற்போது இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் இன்ஜின்கள் எல்லாம் 180 கி.மீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டவை

ஆனால் இந்தியாவில் தயாரிக்கப்படும் ரயில் பெட்டிகள் மற்றும் ரயில் நீளம் உள்ளிட்டவற்றை மனதில் வைத்து 100 முதல் அதிகபட்சமாக 160 கி.மீ வேகம் வரை தான் இயக்க அனுமதிக்கப்படுகிறது. அதுவும் காட்டிமன் ரயில் தான் 160 கி.மீ வேகத்திற்குப் பயணிக்கிறது.

இந்நிலையில் ரயில்வே நிர்வாகம் 180 கி.மீ வேகத்தில் பயணித்தாலும் எந்த பிரச்சனை ஏற்படுத்தாத ஏசி டபுள் டக்கர் ரயில் பெட்டியை ரயில்வே நிர்வாகம் உருவாக்கியுள்ளது. LHB கோச்சாக உருவாக்கப்பட்ட இந்த ரயில் பெட்டி சமீபத்தில் ராஜஸ்தான் நிலத்தில் சோதனை செய்யப்பட்டது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவிலிருந்து நாக்டா பகுதி வழியாக இந்த சோதனை நடத்தப்பட்டது.

இதில் ரயில் இன்ஜின் உடன் ஒரே ஒரு பெட்டியை இணைத்து ரயிலை 180 கீ.மீ வேகத்தில் இயக்கினர். ரயில் எந்த பிரச்சனையும் இல்லாமல் 180 கி.மீ வேகத்தில் பயணித்தது. இந்த வீடியோவை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில் ரயில் 180 கி.மீ வேகத்தில் பயணித்தது ஸ்பீடாமீட்டரில் பதிவாகியுள்ளது.
இந்த சோதனையை மேற்கு மத்திய ரயில்வே நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டது. அதனால் அதன் ட்விட்டர் பக்கத்திலும் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேகம் அதிகமாக்குவது விரைவில் நடைமுறைக்கு வரும். ஆனால் அது குறிப்பிட்ட வகை ரயில் பெட்டிகளைக் கொண்ட ரயில்களுக்கு மட்டுமே பொருந்தும் எனத் தெரிகிறது.

தற்போது இந்தியாவில் எந்தெந்த ரயில்கள் எவ்வளவு வேகத்தில் செல்லும் என காணலாம் வாருங்கள் சதாப்தி எக்ஸ்பிரஸ் 150 கி.மீ வேகம், துரந்தோ எக்ஸ்பிரஸ் 135 கி.மீ வேகம், வந்தேபாரத், ராஜ்தானி எக்ஸ்பிரஸ், தேஜஸ் எக்ஸ்பிரஸ்,யுவா எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் 130 கி.மீ வேகத்திலும், ஏசி எக்ஸ்பிரஸ், துரந்தோ- மும்பை, ராஜ்கோட் எக்ஸ்பிரஸ் 120கி.மீ வேகத்திலும், ஜன் சதாப்தி, சம்பக்கரென்டி, சூப்பர் பாஸ்ட், சுவிதா சூப்பர் பாஸ்ட் ஆகிய ரயில்கள் 110 கி.மீ வேகத்திலும், எக்ஸ்பிரஸ் ரயில்கள் 100 கி.மீ வேகத்திலும் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

தற்போது டில்லி - ஜான்சி இடையே இயக்கப்படும் காட்டிமன் எக்ஸ்பிரஸ் ரயில் தான் இந்தியாவிலேயே வேகமான ரயில். இது மணிக்கு 160 கி.மீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது. இந்த ரயிலில் வேகத்தையும் தாண்டி 180 கி.மீ வேகத்தில் செல்லும் ரயிலைத் தான் தற்போது ரயில்வே நிர்வாகம் சோதனை செய்துள்ளது.


Click it and Unblock the Notifications








