ரயில்களில் பொருத்தப்படும் கருப்பு பெட்டி! இனி தப்பு செய்ய முடியாது... செஞ்சாலும் தப்பிக்க முடியாது!
விமானங்களில் பயன்படுத்தப்படுவதைப் போல பயணிகள் ரயில்களிலும் பிளாக் பாக்ஸ் (Black Box Technology) எனப்படும் கருப்பு பெட்டி தொழில்நுட்பத்தை நிறுவும் பணியை இந்தியன் ரயில்வேஸ் (Indian Railways) கையிலெடுத்து இருக்கின்றது. இது குறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

விமானம் மற்றும் ஹெலிகாப்டர்களில் பயன்படுத்துவதைப் போல இனி ரயில்களிலும் பிளாக் பாக்ஸ் (Black Box Technology)எனப்படும் கருப்பு பெட்டி தொழில்நுட்பம் பொருத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரயில்களைக் கண்கானிக்கும் விதமாக கருப்பு பெட்டி தொழில்நுட்பத்தை பயன்படுத்த இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையாகவே இந்த திட்டத்தை இந்திய ரயில்வே கையில் எடுத்திருக்கின்றது.

முதலில் மேற்கு மத்திய ரயில்வேவிலேயே கருப்பு பெட்டி நிறுவும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆகையால், வெகுவிரைவில் அங்குள்ள அனைத்து ரயில் எஞ்ஜின்களிலும் இந்த கருப்பு பெட்டிகள் காட்சியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது பணியாளர்களின் குரல் மற்றும் வீடியோ பதிவுகளை சேமிக்கும். இதன் வாயிலாக அனைத்து குளறுபடிகளையும் தவிர்க்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக தவறுகள் மற்றும் தவறான செயல்களையும் தவிர்க்க இது உதவியாக இருக்கும்.

மேற்கு மத்திய ரயில்வேவைத் தொடர்ந்து நாட்டின் பிற ரயில்வேக்களிலும் கருப்பு பெட்டி நிறுவும் பணியை விரிவாக்கம் செய்ய இந்தியன் ரயில்வே திட்டமட்டிருப்பதாக கூறப்படுகின்றது. எனவே விரைவில் நாட்டில் உள்ள அனைத்து பயணிகள் ரயில்கள் எஞ்ஜினிலும் கருப்பு பெட்டி தொழில்நுட்பம் அங்கம் வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ரயிலின் இயக்கத்தை மிக சிறப்பாகக் கண்கானிக்க இந்த கருவி பெரும் உதவியாக இருக்கும்.

ஒவ்வொரு கருப்பு பெட்டி உடனும் 6 ஜிபி முதல் 8 ஜிபி வரையிலான ஸ்டோரேஜ் வசதிக் கொண்ட சிசிடிவி கேமிரா, 8 சேனல் என்விஆர் மற்றும் 4 ஜிபி ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவை வழங்கப்பட இருக்கின்றன. இதில் பயன்படுத்தப்படும் கேமிரா குரல் பதிவை செய்யும் வசதிக் கொண்டது. இதற்காக மைக்ரோஃபோன் வசதிக் கொண்ட கேமிராவே எஞ்ஜினுக்குள் பயன்படுத்தப்படும்.

எஞ்ஜினுக்குள் மட்டுமின்றி எஞ்ஜினின் மேற்கூரை பகுதியிலும் கேமிரா ஒன்று நிலை நிறுத்தப்பட இருக்கின்றது. முன் பக்கத்தை போலவே பின் பக்கத்திலும் ஓர் கேமிரா பொருத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கேமிராக்கள் துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகளின்போது தீர்வு காண மிக உதவியாக இருக்கும். குறிப்பாக, விபத்து போன்ற கசப்பான நிகழ்வுகளின்போது விசாரணை மேற்கொள்ள இந்த கேமிரா பெரும் உதவியாக இருக்கும்.

இந்த கேமிராக்கள் ஐபி அட்ரஸ் கொண்டவை ஆகும். எனவே நம்முடைய வீடுகளில் பொருத்தப்படும் கேமிராவை போலவே அதிநவீன தொழில்நுட்ப வசதிக் கொண்ட கேமிராவாக இது காட்சியளிக்கின்றது. குறிப்பாக தொலைதூரத்தில் இருந்தும் இந்த கேமிராக்கள் வாயிலாக ரயிலின் இயக்கத்தைக் கண்கானிக்க முடியும்.

அதேநேரத்தில், கேமிராக்கள் வாயிலாக செய்யப்படும் பதிவுகளை அவ்வளவு எளிதில் நீக்கிவிட முடியாது என ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, வீடியோவின் தரவுகள் சுமார் 90 நாட்கள் வரை பாதுகாப்பாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்களில் பொருத்தப்படும் கேமிராக்கள் 10 முதல் 55 டிகிரி செல்சியஸ் வரை தாங்கக் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

எனவே இந்தியாவின் உச்சபட்ச வெயிலைக் கூட தாங்கிக் கொண்டு, அனைத்து நாட்களிலும் இந்த கேமிரா செயல்படும் என தெரிகின்றது. இதுமட்டுமில்லைங்க, வெளிச்சமற்ற நேரங்களில்கூட இந்த கேமிரா தெளிவான பார்வைக் கொண்டு காட்சிகளைப் பதிவு செய்யும் திறன் கொண்டதாக இருக்கின்றது. இதற்காக நைட் விஷன் அம்சம் இந்த கேமிராவில் வழங்கப்பட்டுள்ளது.

இதுபோன்று இன்னும் பல தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டதாக கேமிரா இருக்கின்றது. இத்தகைய சூப்பர் கேமிராவையே மேற்கு மத்திய ரயில்வே அதன் ரயில்களில் நிறுவும் பணிகளை மேற்கொண்டு வருகின்றது. ஏற்கனவே, இந்த பணிகளை அது தொடங்கிவிட்டதாகவும், இதுவரை மொத்தமாக 55 ரயில்களில் கேமிரா பொருத்தப்பட்டுவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரைவில், இன்னும் 445 மேற்கு மத்திய ரயில்வேவுக்கு சொந்தமான ரயில்களில் கருப்பு பெட்டிகள் பொருத்தப்பட இருக்கின்றன. இந்த கேமிராக்கள் அனைத்தும் எதிர்காலத்தில் ரயில்களின் பாதுகாப்பில் முக்கிய பங்களிப்பை வழங்க இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








