Indian Railways பெர்த் புக்கிங்கில் இப்படியொரு மாற்றத்தை செய்யும்னு எதிர்பார்க்கல... யார் யாருக்கு பயன்?
இரயில்களில் கீழ் படுக்கையை (Lower Berth) முன்பதிவு செய்வதற்கான விதிமுறைகளை இந்தியன் இரயில்வே திருத்தியமைத்துள்ளது. இதன்படி, யார் யாரால் இனி கீழ் படுக்கையை முன்பதிவு செய்ய முடியும், இதனால் யார் யாருக்கு நன்மைகள் கிடைக்கப்பெற உள்ளன என்பது குறித்த விரிவான விபரங்களை இனி பார்க்கலாம்.
இந்தியா போன்ற பொருளாதாரத்தில் வளர்ந்துவரும் நாட்டில் அனைவராலும் விமானங்களில் எல்லா நேரங்களிலும் பயணிக்க முடியாது. ஆதலால் நம் நாட்டின் பொது போக்குவரத்தில் முதுகெலும்பு என்றால், அது இரயில் போக்குவரத்து தான். ஒவ்வொரு நாளும் கோடி கணக்கிலான மக்கள் இந்திய இரயில்வே துறையின் சேவைகளை பெற்று வருகின்றனர். இதனாலேயே, இரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்வதும் நம் நாட்டில் கடினமான காரியமாக உள்ளது.

சில குறிப்பிட்ட நகரங்களுக்கு இடையே இரயில் டிக்கெட்களை ஒரு மாத காலத்திற்கு முன்பாகவே முன்பதிவு செய்ய வேண்டிய சூழல் உள்ளது. முன்பதிவில்லா பெட்டிகளும் இரயில்களில் உள்ளன. இருந்தாலும், அவற்றில் கூட்ட நெரிசலில் பயணிப்பதற்கு பயணத்தை மேற்கொள்ளாமலேயே இருந்துவிடலாம் என்றே தோன்ற வைக்கும். இந்தியா, மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடு என்பதை இந்த விஷயத்தில் மறந்துவிட வேண்டும்.
இரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்பவர்கள் பலர் கீழ் படுக்கை அல்லது சைடு படுக்கையையே முன்பதிவு செய்கின்றனர். ஏனெனில் இரயில் இயங்கும்போது ஏற்படும் குலுக்கல்களை இந்த படுக்கைகளில் குறைவாகவே உணர முடியும். அதுமட்டுமின்றி, படுக்கைக்கு செல்வதும் எளியது. அதுவே, மேல் படுக்கைகளுக்கு ஏணியில் ஏறி செல்ல வேண்டி இருக்கும். ஆனால் இனி கீழ் படுக்கையை அவ்வளவு எளிதாக முன்பதிவு செய்துவிட முடியாது.

இதுகுறித்த புதியதொரு ஆணையை இந்தியன் இரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்த ஆணையில், இரயில்களில் கீழ் படுக்கைகள் மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரயிலில் உள்ள அனைத்து கீழ் படுக்கைகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படவில்லை. செகண்ட் கிளாஸ் பெட்டிகளில் 2 கீழ் படுக்கைகள் மற்றும் 2 மத்திய படுக்கைகள் என மொத்தம் 4 படுக்கைகள் மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
அதுவே, 3-கிளாஸ் ஏசி பெட்டியில் 2 கீழ் படுக்கைகளையும், 3-கிளாஸ் எகானாமிக் பெட்டியில் 2 படுக்கைகளையும் மாற்றுத்திறனாளிகள் முன்பதிவு செய்து கொள்ள முடியும். குறைந்த கட்டணத்தில் 3-கிளாஸ் ஏசி பெட்டிகளில் மக்கள் பயணிக்கத்தக்க இரயில்களை கரீப் ரத் என்ற பெயரில் இந்திய இரயில்வே இயக்குகிறது. இந்த கரீப் ரத் இரயில்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்காக 2 கீழ் படுக்கைகள் மற்றும் 2 மேல் படுக்கைகள் என மொத்தம் 4 படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

மாற்றுத்திறனாளிகளின் இரயில் பயணத்தை மேலும் சவுகரியமாக்க இந்தியன் இரயில்வே இந்த முக்கியமான நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ளது. இதனுடன், 45 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய முதியவர்களுக்காகவும், கர்ப்பிணி பெண்களுக்காகவும் ஸ்லீப்பர் பெட்டிகளில் 6-7 படுக்கைகளையும், 3-கிளாஸ் ஏசி பெட்டிகளில் 4-5 படுக்கைகளையும், 2-கிளாஸ் ஏசி பெட்டிகளில் 3-4 படுக்கைகளையும் இந்திய இரயில்வே நிர்வாகம் ஒதுக்கியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இருக்கைகள்/ படுக்கைகளை மற்றவர்களால் பெற இயலாது. மாற்றுத்திறனாளிகள் யாரும் இல்லாத பட்சத்தில் அந்த இருக்கைகள் மற்ற பயணிகளுக்கு ஒதுக்கப்படும். இந்தியன் இரயில்வேயின் இந்த நடவடிக்கையின் மூலமாக மாற்றுத்திறனாளிகள் இரயில்களில் இருக்கையை பெறுவது எளிமையானதாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications









