மே 1 முதல் இந்தியன் இரயில்வே இப்படியொரு அறிவிப்பை கொண்டுவரும்னு எதிர்பார்க்கல! யாருக்கு எல்லாம் பாதிப்பு?
இந்தியாவின் பொது போக்குவரத்தின் முதுக்கெலும்பாக இரயில்வே (Railway) விளங்குகிறது. நம் நாட்டில் ஒவ்வொரு நாளும் இலட்சக்கணக்கிலான மக்கள் இரயில்களை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, ஏழை, எளிய மக்கள் தொலைத்தூர பயணங்களுக்கு பெரிதும் இரயில் போக்குவரத்தை தான் சார்ந்துள்ளனர்.
இந்த நிலையில், இரயில் பயணிகளை அதிர்ச்சியாக்கும் வகையில் ஓர் அறிவிப்பை இந்தியன் இரயில்வே வெளியிட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால், இந்த அறிவிப்பு மே 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்குவர உள்ளது. அப்படி என்ன மாதிரியான அறிவிப்பை இந்தியன் இரயில்வே வெளியிட்டுள்ளது என்றால், காத்திருப்பு பட்டியலில் (Waiting List) இருப்பவர்கள் இனி படுக்கை பெட்டிகள் அல்லது ஏசி பெட்டிகளில் பயணம் செய்ய முடியாது என்பதாகும்.

காத்திருப்பு பட்டியலில் இரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்பவர்களின் டிக்கெட் பின்னர் ஆர்.ஏ.சி (RAC)-க்கு மாற்றப்பட்டு, பின்னர் உறுதிச் செய்யப்பட்ட டிக்கெட்டாக மாறும். இந்த விஷயம் எல்லாம் நம்மில் நிறைய பேருக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். உறுதிச் செய்யப்பட்ட டிக்கெட்டாக மாறவில்லை எனில், ஆர்ஏசி டிக்கெட்டை வைத்து இரயிலில் பயணம் செய்யலாம்.
படுக்கை இருக்கைக்காக டிக்கெட்டை புக் செய்து, அது கடைசி வரையில் ஆர்ஏசி ஆக மட்டுமே இருந்தால், உங்களுக்கு ஒதுக்கப்பட்ட படுக்கை இருக்கையில் இன்னொரு பயணியும் ஆர்ஏசி டிக்கெட் உடன் பயணிப்பார். அதாவது, ஒரு படுக்கை இருக்கையில் இருவர் அமர்ந்து பயணம் செய்ய வேண்டியிருக்கும். ஒருவர் மட்டும் படுத்துக் கொண்டு பயணம் செய்ய முடியாது.

அதுவே, புக் செய்யப்பட்ட டிக்கெட் ஆர்ஏசி ஆக மாறாமல் கடைசி வரையில் காத்திருப்பு பட்டியலிலேயே இருந்தால், உங்களுக்காக எந்தவொரு இருக்கையும் ஒதுக்கப்படவில்லை என அர்த்தம் ஆகும். ஆன்லைனில் இரயில் டிக்கெட்டை புக் செய்து, அது கடைசி வரையில் காத்திருப்பு பட்டியலில் இருந்தால் தானாக டிக்கெட் ரத்து செய்யப்பட்டு பணம் மீண்டும் பயணியின் வங்கிக் கணக்கிற்கே வந்துவிடும்.
இதனால், ஆன்லைனில் புக் செய்யப்பட்ட காத்திருப்பு பட்டியலுக்கான டிக்கெட்டை வைத்திருந்தால் டிக்கெட் பரிசோதகர் உங்களை இரயிலில் இருந்து இறக்கிவிடுவார். அதுவே, இரயில் நிலையத்தில் புக் செய்யப்பட்ட டிக்கெட்டை வைத்திருப்பவர்கள் அந்த டிக்கெட் காத்திருப்பு பட்டியலில் உள்ளதா இல்லையா என்பது தெரியாமல் இரயிலில் ஏறிவிடுகின்றனர்.
டிக்கெட் பரிசோதகர் அத்தகையவர்களின் டிக்கெட்டை பரிசோதித்து பார்த்து, அவை காத்திருப்பு பட்டியலில் இருந்தாலும் அத்தகைய பயணிகளை மட்டும் தொடர்ந்து இரயிலில் பயணம் செய்ய அனுமதிப்பார். இதுதான் தற்போதைக்கு உள்ள நடைமுறை. ஆனால், இந்த நடைமுறையில்தான் தற்போது இந்தியன் இரயில்வே ஓர் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது, ஆன்லைனில் புக் செய்திருந்தாலும் சரி, இரயில் நிலையத்தில் புக் செய்திருந்தாலும் சரி காத்திருப்பு பட்டியலில் உள்ள டிக்கெட்டை வைத்திருப்பவர்கள் இரயிலின் படுக்கை இருக்கை பெட்டி மற்றும் ஏசி பெட்டியில் பயணிக்க அனுமதி இல்லை. அவர்கள் இரயிலின் முன்னாலும், பின்னாலும் உள்ள பொது பெட்டிகளில் மட்டுமே பயணிக்க முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியன் இரயில்வேயின் இந்த அறிவிப்பானது முழுக்க முழுக்க உறுதிச் செய்யப்பட்ட டிக்கெட் மற்றும் ஆர்ஏசி டிக்கெட்டில் பயணம் செய்யும் பயணிகளுக்கு எந்தவொரு அசவுகரியமும் ஏற்படக் கூடாது என்கிற எண்ணத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. ஏனெனில், இவ்வாறு காத்திருப்பு பட்டியலில் உள்ள டிக்கெட் உடன் பயணம் செய்பவர்களால் பல நேரங்களில் குழப்பங்களும், வாக்குவாதங்களும் ஏற்படுகின்றன.
காத்திருப்பு பட்டியலில் உள்ள டிக்கெட்டை வைத்துக் கொண்டு உங்களால் பொது பெட்டிகளில் கூட பயணம் செய்ய முடியாது. ஏனெனில், டிக்கெட் கடைசிவரையில் காத்திருப்பு பட்டியலிலேயே இருந்தால், அது ஆட்டோமேட்டிக்காக கேன்சலாகி பணம் திரும்ப வந்துவிடும் என்பதால், ஜெனரல் பெட்டிகள் எனப்படும் பொது பெட்டிகளில் பயணம் செய்ய அதற்கான குறைந்த கட்டணத்திலான டிக்கெட்டை பெற வேண்டியது அவசியமாகும்.


Click it and Unblock the Notifications








