வாரத்திற்கு புதுசா 3 வந்தே பாரத் இரயில்கள்... நிதியை முழுசா யூஸ் பண்ண போறங்க - வேற லெவலில் மாற போகும் இந்தியன்
சில பல இடையூறுகள் ஏற்பட்டாலும், வந்தே பாரத் ரயில்களை நாடு முழுவதும் சேவைக்கு கொண்டு வருவதில் மத்திய அரசு முனைப்புடன் உள்ளது. இதற்கு முக்கிய காரணம், வந்தே பாரத் இரயில்கள் இந்தியாவிலேயே முழுவதுமாக தயாரிக்கப்படுகின்றன என்பதாகும். ஆம், நமது சென்னையில் உள்ள ஐசிஎஃப் (ICF) தான் வந்தே பாரத் இரயில்களை தயாரிக்கிறது.
இதுவரையில் இரயில்களை தயாரிப்பதற்கான பாகங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்தன. இந்த மாற்றத்தின் மூலம் அரசாங்கத்திற்கு பெரும் அளவு நிதியை சேமிக்க முடியும் என்கிற நம்பிக்கையில் மத்திய அரசு உள்ளது. இதன் காரணமாக, சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட மாநகரங்கள் துவங்கி சிறிய சிறிய நகரங்களை கூட இணைக்கும் வழித்தடங்களில் வந்தே பாரத் இரயில்கள் அடுத்தடுத்ததாக பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட வண்ணம் உள்ளன.

வந்தே பாரத் இரயில்களின் மற்றொரு சிறப்பம்சம் அவற்றின் எடை ஆகும். மற்ற இரயில்களை போல் அல்லாமல், எடை குறைவான பேனல்களில் உருவாக்கப்படுவதால் வந்தே பாரத் இரயில்களை இயக்க அதிகளவில் ஆற்றல் தேவைப்படாது. இதனால் குறைந்த இயக்க ஆற்றலிலேயே அதிகப்பட்ச வேகத்தை இந்த இரயில்கள் எட்டிவிடும். இதன் மூலம் சேமிக்கப்படும் பணத்தை இரயில்களின் உட்புற அலங்கரிப்புகளுக்கும், பயணிகளின் சவுகரியத்திற்கும் செலவிட முடியும்.
இவையும் வந்தே பாரத் இரயில்களின் விஷயத்தில் மத்திய அரசின் ஆர்வத்திற்கு முக்கிய காரணங்களாகும். இந்த ஆர்வம் ஆனது மத்திய இரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்களின் சமீபத்திய டுவிட்டர் பதிவின் மூலம் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் கூறியதாவது, இந்திய ரயில்வேஸ் வந்தே பாரத் இரயில்களின் உற்பத்தியை வேகப்படுத்தி வருவதாகவும், இதன் மூலமாக ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள வந்தே பாரத் இரயில்களுக்கான தேவையை பூர்த்தி செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2023-24ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் இரயில்வே துறைக்கு இதுவரையில் இல்லாத பெரும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதை காண முடிந்தது. இதன் மூலமாக, வருகிற நிதியாண்டு முடிவதற்கு உள்ளாக ஒவ்வொரு வாரத்திலும் 3 வந்தே பாரத் இரயில்களை தயாரிக்கும் அளவிற்கு உற்பத்தி திறனை மேம்படுத்த உள்ளதாக மத்திய இரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் டுவிட்டரில், "விநியோக சங்கிலி மற்றும் உற்பத்தி பணிகளை நாங்கள் விரிவுப்படுத்தி வருகிறோம். இந்த வருடத்தில் ஹரியானாவில் உள்ள சோனிபட், உத்தர பிரதேசத்தில் உள்ள ரே பரேலி மற்றும் மஹாராஷ்டிராவில் உள்ள லடூர் என்ற 3 கூடுதல் தொழிற்சாலைகளில் உற்பத்தியை விரிவுப்படுத்த உள்ளோம். தற்சமயம் வாரம் ஒன்றிற்கு ஒரு வந்தே பாரத் இரயிலை உருவாக்குகிறோம்.

மொத்தம் 4 தொழிற்சாலைகளின் மூலம், அடுத்த நிதியாண்டிற்குள் வாரத்திற்கு 2-3 வந்தே பாரத் இரயில்களை நாங்கள் உருவாக்க முடியும். எங்களது நோக்கம், உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பதாகும். அனைத்து முக்கிய மற்றும் சிறிய நகரங்களை வந்தே பாரத் இரயில்கள் கவர் செய்ய வேண்டும் என்ற பிரதமரின் பார்வையை இது முழுமைப்படுத்தும்" என குறிப்பிட்டுள்ளார்.
கடைசியாக கடந்த ஜனவரி 15ஆம் தேதி தெலுங்கு மாநிலங்களான தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேசத்திற்கு இடையே புதியதாக வந்தே பாரத் இரயில் சேவைக்கு துவங்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியால் கொடியசைத்து துவங்கி வைக்கப்பட்ட இந்த இரயில் சேவை ஆனது மேற்கூறப்பட்ட இரு தெலுங்கு மாநிலங்களை இணைக்கும் வகையில் செகாந்திராபாத்தில் இருந்து விசாகப்பட்டினம் வரையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications









