துபாய் அதிர்ஷ்ட குலுக்கலில் 2 சொகுசு கார்களை வென்ற கேரள டெய்லர்
துபாயில் நடந்த அதிர்ஷ்ட குலுக்கலில் இந்திய டெய்லர் ஒருவர் 2 சொகுசு கார்களையும், ரூ.16.9 லட்சம் ரொக்கப் பரிசையும் வென்றுள்ளார்.
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பசலூதீன்(33) என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக துபாயில் டெய்லராக வேலைபார்த்து வருகிறார். இந்த நிலையில், துபாய் வர்த்தக திருவிழாவிற்காக நடத்தப்பட்ட குலுக்கலுக்கான பரிசு சீட்டுகளை பசலூதீன் வாங்கியிருந்தார்.

இதில், பசலூதீன் வாங்கியிருந்த சீட்டுக்கு 2 சொகுசு கார்கள் மற்றும் ரொக்கப் பரிசும் கிடைத்துள்ளது. நிசான் நிறுவனத்தின் இன்ஃபினிட்டி சொகுசு கார் பிராண்டின் இன்ஃபினிட்டி க்யூஎக்ஸ்60 மற்றும் ஜி25 என்ற இரண்டு சொகுசு கார்களும், இந்திய மதிப்பில் ரூ.16.9 லட்சம் ரொக்கப் பரிசையும் அவர் வென்றுள்ளார்.
இதுகுறித்து பசலூதீன் கூறுகையில்," கடந்த 10 ஆண்டுகளாக துபாயில் வேலைபார்த்து வருகிறேன். எப்போதுமே நண்பர்களுடன் சேர்ந்து இதுபோன்ற குலுக்கல் சீட்டுகளை வாங்குவேன்.
ஆனால், இந்த முறை தனியாக வாங்கினேன். எனக்கு இந்த முறை பரிசு கண்டிப்பாக விழும் என்று உள்ளுணர்வு இருந்ததாலேயே தனியாக வாங்கினேன். நான் நினைத்தது போலவே பரிசுகள் கிடைத்துள்ளன.
குலுக்கல் சீட்டில் கிடைத்த பணத்தில் என்னுடைய நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் உதவி செய்ய திட்டமிட்டுள்ளேன். ஆனால், கார்களை என்ன செய்வதன்று இதுவரை முடிவு செய்யவில்லை," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








