போக்குவரத்து விதிமீறலுக்காக இந்தியர்கள் கடந்த ஆண்டு செலுத்திய அபராத தொகை இதுதான்... இத்தனை கோடியா?
போக்குவரத்து விதிமுறை மீறலுக்காக இந்தியர்கள் கடந்த 2021ம் ஆண்டு எவ்வளவு தொகையை அபராதமாக செலுத்தியுள்ளனர்? என்ற விபரம் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்காக, இந்தியர்கள் கடந்த 2021ம் ஆண்டில், 1,899 கோடி ரூபாயை அபராதமாக செலுத்தியுள்ளனர். மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சரான நிதின் கட்காரி, பாராளுமன்றத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். எழுத்து பூர்வமாக அவர் வழங்கிய பதிலின் மூலம் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு இந்தியா முழுவதும் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்காக 1.98 கோடி அபராத ரசீதுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 35 சதவீதத்திற்கும் மேலான அபராத ரசீதுகள் டெல்லியில் மட்டும் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2021ம் ஆண்டு இந்தியாவிலேயே டெல்லியில்தான் மிக அதிக எண்ணிக்கையில் அபராத ரசீதுகள் வழங்கப்பட்டுள்ளன.

தெளிவாக சொல்வதென்றால், டெல்லியில் கடந்த 2021ம் ஆண்டு 71,89,824 அபராத ரசீதுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இரண்டாவது இடத்தில் இருக்கும் மாநிலம் எதுவென்று தெரியுமா? நமது தமிழ்நாடுதான் அது. கடந்த 2021ம் ஆண்டு அதிக அபராத ரசீதுகள் வழங்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் உள்ள இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு இருப்பது வருத்தமான விஷயம்தான்.

தமிழ்நாட்டில் கடந்த 2021ம் ஆண்டு 36,26,037 அபராத ரசீதுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் நமது அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளா மூன்றாவது இடத்தில் உள்ளது. அங்கு கடந்த 2021ம் ஆண்டு 17,41,932 அபராத ரசீதுகள் வழங்கப்பட்டுள்ளன. நடப்பு 2022ம் ஆண்டிலும் போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்காக அதிக அளவிலான அபராத ரசீதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

நடப்பாண்டு ஜனவரி 1ம் தேதியில் இருந்து கடந்த மார்ச் 15ம் தேதி வரை மட்டும் இந்தியா முழுவதும் போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்காக 417 கோடி ரூபாய் மதிப்பில், 40 லட்சத்திற்கும் மேற்பட்ட அபராத ரசீதுகள் வழங்கப்பட்டுள்ளன. நடப்பாண்டில் இன்னும் முழுமையாக 9 மாதங்கள் எஞ்சியுள்ள நிலையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்காக வழங்கப்படும் அபராத ரசீதுகளின் எண்ணிக்கை உயருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்தியாவில் போக்குவரத்து விதிமுறை மீறல்களை குறைப்பதற்காக தற்போது பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு போக்குவரத்து விதிமுறை மீறல்களே மிக முக்கியமான காரணமாக இருக்கின்றன. எனவேதான் போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன் வாகனங்களில் பல்வேறு பாதுகாப்பு வசதிகள் இடம்பெறுவதையும் மத்திய அரசு தொடர்ச்சியாக கட்டாயமாக்கி வருகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் நடைபெறும் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பதுதான் இந்த அனைத்து நடவடிக்கைகளுக்குமான நோக்கமாக இருக்கிறது.

முன்னதாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் என்பதும் கவனிக்கத்தக்கது. 60 கிலோ மீட்டர்களுக்கும் குறைவான இடைவெளிகளில் செயல்பட்டு வரும் டோல்கேட்கள் அகற்றப்படும் என்பது இதில் மிக முக்கியமான அறிவிப்புகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

அதேபோல் இந்தியாவில் எத்தனை எலெக்ட்ரிக் வாகனங்கள் இருக்கின்றன? என்பதையும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதன்படி இந்தியாவில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட எலெக்ட்ரிக் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளால், வரும் காலங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை மேலும் உயரவுள்ளது.

மத்திய அரசு மட்டுமல்லாது, மாநில அரசுகளும் தங்கள் பங்கிற்கு மானியம், சாலை வரி மற்றும் பதிவு கட்டணங்களில் இருந்து விலக்கு போன்ற நடவடிக்கைகளின் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரித்து வருகின்றன. குறிப்பாக எலெக்ட்ரிக் வாகனங்களை பிரபலமாக்கும் விஷயத்தில் டெல்லி இந்தியாவிற்கே முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறது.

மக்கள் அதிகளவில் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க வேண்டும் என்பதற்காக, மிகவும் குறைவான கட்டணத்தில், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்கும் பணிகளிலும் டெல்லி அரசு ஈடுபட்டு வருகிறது. டெல்லியை இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன தலைநகராக மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








